‘இந்திய MSME-களில் 1% மட்டுமே செயல்படும் இணையதளங்கள் கொண்டுள்ளது’ - ஆய்வில் தகவல்
7 மாநிலங்களில் உள்ள IT, சேவை, உற்பத்தி, இ-காமர்ஸ் உள்ளிட்ட துறைகளில் இருந்த 40,000 MSME-களில் எடுக்கப்பட்ட சர்வேயில், வெறும் 1.6% நிறுவனங்களே (465) இணையதளத்தை பதிவு செய்திருந்தன. அதிலும், சரிபார்ப்பு நேரத்தில் செயல்பட்டது 402 இணையதளங்கள் மட்டுமே
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி UPI போன்ற தளங்கள், ONDC போன்ற திறந்த வர்த்தக வலையமைப்புகள் மற்றும் பொதுத் டிஜிட்டல் கட்டமைப்பில் செய்யப்பட்ட முதலீடுகளால் வேகமாக முன்னேறி வருகிறது. இதன் மூலம், நாட்டின் பொருளாதார பரிவர்த்தனைகள் முற்றிலும் மாறியுள்ளன.
ஆனால், இந்த முன்னேற்றத்தின் பின்னணியில் ஒரு பெரிய கட்டமைப்பு குறைபாடு உள்ளது. உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் சேவைகளின் முதுகெலும்பாக இருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) பெரும்பாலும் டிஜிட்டல் உலகத்திலிருந்து விலகியே உள்ளன.
MSME-கள் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், ஆன்லைன் உலகில் போதிய அளவு காலடி வைக்கவில்லை. இந்திய MSME-களில் 99% நிறுவனங்கள் இணையத்தில் இல்லை என்பது கவலைக்குரிய நிலை. இது அவர்களின் வளர்ச்சி, போட்டித்திறன் மற்றும் டிஜிட்டல்-முதன்மை பொருளாதாரத்தில் இணைவதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது.
இந்தியாவில் சுமார் 6.82 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனனங்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதில் சுமார் 3.6 கோடி நிறுவனங்கள் அரசு கொண்டுவந்த UDYAM பதிவுத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவு கடன் வசதி, அரசு திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான அணுகலை எளிதாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
ஆனால், SERP Forge எனும் இந்திய டிஜிட்டல் ஆராய்ச்சி மற்றும் SEO பகுப்பாய்வு நிறுவனத்தின் புதிய ஆய்வு, இந்தப் பதிவு டிஜிட்டல் தயார்நிலைக்கு மாற்றமாகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. ஏழு மாநிலங்களில் உள்ள IT, சேவை, உற்பத்தி, இ-காமர்ஸ் உள்ளிட்ட துறைகளில் இருந்து 40,000 MSME-களை இந்த ஆய்வு ஆய்வு செய்தது.
இந்த 40,000 MSME-களில் வெறும் 1.6% நிறுவனங்களே (465) இணையதளத்தை பதிவு செய்திருந்தன. அதிலும், சரிபார்ப்பு நேரத்தில் செயல்பட்டது 402 இணையதளங்கள் மட்டுமே – அதாவது சுமார் 1%. இதன் பொருள், பெரும்பாலான பதிவு செய்யப்பட்ட MSME-கள் டிஜிட்டல் உலகில் இருக்கவில்லை என்பதே.
வாடிக்கையாளர்கள், வணிகக் கூட்டாளர்கள், கடனளிப்பவர்கள் அல்லது வெளிநாட்டு வாங்குபவர்கள் ஒரு நிறுவனத்தை இணையத்தில் சரிபார்க்க முயன்றால், இணையதளம் இல்லாததே நம்பிக்கையிழப்புக்கு காரணமாகிறது.
இணையதளம் இருந்தாலும் தரமற்ற டிஜிட்டல் நிலை SERP Forge நிறுவனம் “டிஜிட்டல் தர மதிப்பெண்” (Digital Quality Score) என்ற ஆறு அம்சங்களின் அடிப்படையில் இணையதளங்களை மதிப்பீடு செய்தது. HTTPS பாதுகாப்பு, அணுகல்திறன், மொபைல் பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவம், தொடர்பு விவரங்கள், SEO தலைப்பு மற்றும் இணையதள கட்டமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.
செயல்படும் 402 இணையதளங்களில், வெறும் 43 இணையதளங்கள் மட்டுமே (சுமார் 10%) முழு 6 மதிப்பெண்களையும் பெற்றன. அதாவது, மொத்த MSME-களில் 0.2%க்கும் குறைவான நிறுவனங்களே குறைந்தபட்ச டிஜிட்டல் தரத்தைக் கொண்டிருந்தன. பல அடிப்படை குறைகள் கண்டறியப்பட்டன. ஐந்து இணையதளங்களில் HTTPS பாதுகாப்பு இல்லை. ஆறு இணையதளங்கள் “Not Secure” எனக் காட்டப்பட்டன.
38 இணையதளங்கள் மொபைல்-பிரதிகரிப்பற்றவையாக இருந்தன. 177 இணையதளங்களில் SEO தலைப்பே இல்லை. 29 இணையதளங்களில் தொடர்பு விவரங்கள் கூட காணப்படவில்லை. மேலும், 64 இணையதளங்கள் முழுமையாக அணுக முடியாத நிலையில் இருந்தன.
இந்த இடைவெளியால் என்ன பிரச்சனை?
இந்த டிஜிட்டல் தயார்நிலையின்மை நேரடியாக பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இணையத்தில் காணப்படாத நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை அடைவதில் தோல்வியடைகின்றன. பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் முழுமையற்ற தகவல்கள் வாங்குபவர்களின் நம்பிக்கையை குறைக்கின்றன.
ஏற்றுமதி வர்த்தகத்தில், வெளிநாட்டு வாங்குபவர்கள் முதலில் இணையத்தில் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பதால், இணையதளம் இல்லாததே வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே தடுக்கிறது. முதலீட்டாளர்கள் மற்றும் கடனளிப்பவர்களும் இணையதள இருப்பை ஒரு அடிப்படை சரிபார்ப்பாகப் பார்க்கின்றனர்.
இணைய தேடல் தான் வாடிக்கையாளர்களின் முதல் தொடர்புப் புள்ளியாக மாறியுள்ள இந்த காலகட்டத்தில், மொபைல்-நேசமான, பாதுகாப்பான, முழுமையான இணையதளம் இல்லாத MSME-கள் போட்டியில் பின்தங்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. அரசு முன்னெடுக்கும் ONDC, திறந்த கடன் அமைப்புகள் போன்ற முயற்சிகளிலும் பங்கேற்க, குறைந்தபட்ச டிஜிட்டல் தயார்நிலை அவசியமாகிறது.
இந்த நிலை தொடருமானால், இந்திய MSME-களின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்திறன் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே இந்த ஆய்வின் எச்சரிக்கையாக இருக்கிறது.
தொகுப்பு: முத்துகுமார்
