சாட்ஜிபிடி ஃபார் டீன்ஸ்: கற்றல் திறனை மேம்படுத்த ஓபன் ஏஐ புதிய முயற்சி!
வெறும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் கருவியாக மட்டும் இல்லாமல், மாணவர்களின் கல்விப் பயணத்தில் உறுதுணையாக ஏஐ தொழில்நுட்பத்தை மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தில் வளரும் இளம் தலைமுறையினருக்கு உதவக்கூடிய வகையில், ‘சாட்ஜிபிடி ஃபார் டீன்ஸ்’ (ChatGPT for Teens) என்ற புதிய சிறப்புப் பதிப்பை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பதின்ம வயதினரின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் உள்ளடக்கங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் உயரிய பாதுகாப்பு அம்சங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு வாழும் முதல் தலைமுறையினரின் வாழ்க்கையில் ஏஐ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவரும் சூழலில், தொழில்நுட்ப வாய்ப்புகளையும் வளர்ச்சி சார்ந்த பாதுகாப்புகளையும் சமநிலையில் வழங்கும் வயதுக்கேற்ற சூழலை உருவாக்குவதில் தொழில்நுட்பத் துறை கவனம் செலுத்தி வருகிறது.
வெறும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் கருவியாக மட்டும் இல்லாமல், மாணவர்களின் கல்விப் பயணத்தில் உறுதுணையாக ஏஐ தொழில்நுட்பத்தை மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
முக்கிய அம்சமாக ‘ஸ்டடி மோட்’ (Study Mode) உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியியல் வல்லுநர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பு, Scaffolding என்ற கற்பித்தல் முறையைப் பயன்படுத்துகிறது.
அதாவது, ஒரு கருத்தை மாணவர் முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை ஏஐ வழிகாட்டி ஆதரவை வழங்கும். அவர் புரிந்துகொண்ட பிறகு அந்த வழிகாட்டுதல் படிப்படியாகக் குறைக்கப்படும்.
நேரடியாக இறுதிப் பதிலைக் கொடுப்பதற்குப் பதிலாக, மாணவர்கள் தங்களது சொந்த சிந்தனைச் செயல்பாட்டைப் பற்றிச் சிந்திக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டு, சிக்கல்களுக்குப் படிப்படியாகத் தீர்வு காண இது வழிகாட்டுகிறது.
மேலும், வீட்டுப் பாடங்களை விரைவாகச் செய்து முடிக்கக் குறுக்கு வழிகளைத் தேடும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை சுறுசுறுப்பான கற்றலை நோக்கித் திருப்பும் நினைவூட்டல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
18 வயதிற்கு உட்பட்டவர்கள் என மதிப்பிடப்பட்ட அல்லது 13 முதல் 17 வயதுடையவர்கள் எனக் குறிப்பிடும் பயனர்களுக்கு இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் தானாகவே செயல்படத் தொடங்கும்.
ஏஐ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் புதிய ‘18 வயதிற்கு உட்பட்டோருக்கான விதிகள்’ அடிப்படையில் இந்தச் Safeguards உருவாக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, இந்த சாட்பாட் காதல் சார்ந்த உரையாடல்களைத் தவிர்க்கும் வகையிலும், தனக்கு உணர்ச்சிகளோ அல்லது மனிதனைப் போன்ற சுய நினைவோ இருப்பதாகக் காட்டிக்கொள்ளாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுய தீங்கு, உணவு உண்ணும் கோளாறுகள் மற்றும் பாலியல் சார்ந்த பொருள்கள் போன்ற வளர்ச்சிக்கு ஒவ்வாத தலைப்புகள் மாணவர்களுக்குக் காண்பிக்கப்படுவதைக் குறைப்பதற்கான சிறப்பு வடிகட்டிகளும் இதில் அமைக்கப்பட்டடள்ளன.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஓபன் ஏஐ இந்த முன்னேற்றங்களை வெளிப்படுத்தியதோடு, இந்தப் புதிய சூழலை எதிர்கொள்ளப் பெற்றோருக்கு உதவும் வகையில் ஒரு சிறப்பு வழிகாட்டியையும் அறிமுகப்படுத்தியது.
இது குறித்துப் பேசிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்திய உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் பிரக்யா மிஸ்ரா கூறியது:
“இளைஞர்கள் ஏஐ மூலம் கற்றுக் கொள்வதிலும், உருவாக்குவதிலும், ஆராய்வதிலும் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அதனால்தான் ‘சாட்ஜிபிடி’ மூலம் கற்றலுக்கான பெற்றோரின் வழிகாட்டி என்பதை உருவாக்கினோம்.
இளைஞர்கள் நல்வாய்ப்புகளுக்கும் பாதுகாப்பிற்கும் இடையே ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கக் கூடாது” என்று அவர் விளக்குகிறார்.
இணைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் ஏஐ பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் Quiet Hours போன்ற தனிப்பயனாக்க அமைப்புகள் மூலம் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க இந்த முயற்சி ஊக்குவிக்கிறது.
இந்த மும்பை நிகழ்வில் கலந்து கொண்ட நடிகையும் எழுத்தாளருமான சோஹா அலி கான் பேசுகையில், “ஏஐ வடிவம் கொடுக்கும் உலகில் குழந்தைகள் தன்னம்பிக்கை, மனிதநேயம் மற்றும் பகுத்தறியும் திறனுடன் வளர வேண்டும் என்றால், தொழில்நுட்பத்தைப் போலவே அவர்களின் ஆர்வம், விமர்சனச் சிந்தனை மற்றும் தொழில்நுட்பத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்புத் தடுப்புகளும் முக்கியத்துவம் பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
CodeAI போன்ற அமைப்புகளுடன் இணைவதன் மூலம், மாணவர்கள் வெறும் பயனர்களாக மட்டும் இல்லாமல், AI இயங்கும் முறையைப் புரிந்து கொள்ளவும் நிறுவனம் உதவ திட்டமிட்டுள்ளது. இது தொழில்நுட்ப நிறுவனங்கள் வெறும் உள்ளடக்கக் கட்டுப்பாட்டோடு நின்றுவிடாமல், ஆரோக்கியமான பயன்பாட்டுப் பழக்கங்களையும் நிஜ உலக உறவுகளையும் வளர்ப்பதை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.
Edited by Induja Raghunathan

