ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் ஆர்கானிக் விளைச்சல் – லட்சங்களில் லாபம் ஈட்டும் தம்பதி!
மும்பையைச் சேர்ந்த ஜோஷுவா லூயிஸ், சகீனா ராஜ்கோட்வாலா தம்பதிக்கு விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால் அதையே தொழிலாக மாற்றி வருவாயும் ஈட்டி வருகிறார்கள்.
இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோர் விவசாயம் குறித்து அறிந்திருப்பதில்லை. தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வமும் பலருக்கு இருப்பதில்லை.
ஆனால், மும்பையைச் சேர்ந்த ஜோஷுவா லூயிஸ், சகீனா ராஜ்கோட்வாலா தம்பதி அப்படியல்ல. இவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால் இதையே தொழிலாக மாற்றி வருவாயும் ஈட்டி வருகிறார்கள்.
ரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டு வளர்க்கப்படும் ஆரோக்கியமற்ற காய்கறிகளுக்கிடையில் இவர்கள் ஃப்ரெஷ்ஷான, ஆர்கானிக் விளைச்சலை மக்களுக்கு வழங்கி அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

2017ம் ஆண்டு ஜோஷுவா, சகீனா இருவரும் பாண்டிச்சேரி சென்றிருந்தனர். அங்கு இவர்களுக்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா மகேன்சி என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் இயற்கையுடன் ஒன்றிய விவசாய நடைமுறைகளில் ஆர்வம் கொண்டவர். இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இவர் ஜோஷுவா, சகீனா இருவருக்கும் மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார்.
மும்பை திரும்பிய இருவரும் ‘ஹெர்பிவோர் ஃபார்ம்’ 'Herbivore Farm' என்கிற பெயரில் பண்ணை ஒன்றைத் தொடங்கினார்கள். இது மும்பையின் முதல் ஹைப்பர்லோக்கல் ஹைட்ரோபோனிக்ஸ் பண்ணை. இங்கு 2,500-க்கும் மேற்பட்ட செடிகள் இருக்கின்றன. இங்கிருந்து ஃப்ரெஷ்ஷான, ஆர்கானிக் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
ஆர்கானிக் பண்ணை குறித்து இவர்கள் இருவரும் கூறும்போது,
“ஹெர்பிவோர் ஃபார்ம் மும்பை கிழக்கு அந்தேரி பகுதியில் அமைந்துள்ளது. மும்பையில் இதுபோன்ற பண்ணை அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. நாங்கள் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பச்சை கீரை வகைகளை வளர்க்கிறோம். ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணுக்கு பதிலாக தண்ணீரில் செடிகளை வளர்க்கும் முறையாகும். வீட்டின் உட்புறங்களிலோ மேற்கூரையிலோ இந்த முறையில் வளர்க்கலாம்,” என்கின்றனர்.
1,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெர்பிவோர் ஃபார்மில் 2,500 செடி வகைகள் உள்ளன.
”நாங்கள் இந்த முயற்சியில் பல தவறுகள் செய்தோம். அவற்றில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்,” என்கின்றனர்.

இந்தப் பண்ணையில் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஏதுமின்றி சுகாதாரமான சூழலில் ஆரோக்கியமாக விளைவிக்கப்படுகின்றன.
இந்த ஹைட்ரோபோனிக் முறையில் தண்ணீர் பயன்பாடு 80 சதவீதம் குறைவு. செடிகள் வளர்வதற்காகப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் செடியின் வளர்ச்சிக்கு உதவும் பல வகையான நுண் ஊட்டச்சத்துகள் உள்ளன. இங்கு செடிகள் குறிப்பிட்ட விதத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, வழக்கமான நிலங்களில் கிடைக்கும் விளைச்சலைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம் கிடைக்கும். அதுமட்டுமின்றி விளைச்சல் ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே வாடிக்கையாளர்களுக்கு டெலிவர் செய்யப்படும்.
இங்கு விளைச்சலை வாங்கிச் சென்று பயன்படுத்திப் பார்ப்போரில் 90 சதவீதம் பேர் தொடர்ந்து வாங்குகின்றனர். ஹெர்பிவோர் ஃபார்மில் 1,500 ரூபாய் சந்தா திட்டம் உள்ளது. விலை சற்று அதிகம் என்று வாடிக்கையாளர்கள் கருதுவதாகத் தெரிவிக்கும் இவர்கள் ஃப்ரெஷ்ஷான விளைச்சலில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்கின்றனர்.
தமிழில்: ஸ்ரீவித்யா