லாக்டவுனில் பாதித்த குழந்தைபேறு சிகிச்சைகள்: கொரோனா பாதித்தவர்கள் குழந்தையின்மை சிகிச்சை பெறலாமா?
கொரோனா பாதித்தவர்கள் குழந்தைப்பேறு சிகிச்சையைத் தொடரலாமா, தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கருத்தரிக்க முடியுமா? உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களுக்கு மருத்துவர் அளித்துள்ள விளக்கம் என்ன? கட்டுரையை முழுமையாகப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விஞ்ஞான வளர்ச்சியில் விரும்பத்தகாத விருந்தாளியாக வந்து பலரின் கனவுக் கூடாரங்களை தகர்த்திருக்கிறது கொரோனா.
வீட்டை அழகுப்படுத்தும் மழலைச் செல்வத்திற்காக ஏங்கி கருத்தரித்தல் மையங்களில் காத்துக்கிடந்தவர்களுக்கு பெரும் கொடூரக் காலமானது மக்களை அவரவர் வீட்டிற்குள் முடக்கிப் போட்ட பெருந்தொற்று. சிகிச்சைக்கு மருந்தில்லை, தடுப்பதற்கு வழியில்லை என்பதால் பல கட்டங்களாக ஊரடங்கு என்ற சங்கிலி போட்டு கட்டப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்று சற்று மூச்சு விடத் தொடங்கி இருக்கிறது பொருளாதாரமும், வாழ்வாதாரமும்.
தமிழக நகரங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில், மருத்துவமனைகளிலும் இதர சிகிச்சைகள் தொடங்கியுள்ளன. பல ஆண்டுகளாக குழந்தையை எதிர்பார்த்திருந்தவர்களுக்குக் கூடுதலாக ஒன்றரை ஆண்டு காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் கொரோனா தொற்று முழுவதும் சரியாகிவிட்டதா குழந்தைப்பேறு சிகிச்சையை இப்போது மேற்கொள்ளலாமா? என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையின் இயக்குனரும் மகப்பேறு மற்றும் குழந்தைப்பேறு சிகிச்சை சிறப்பு ஆலோசகருமான டாக்டர். மிருதுபாஷினி கோவிந்தராஜன் ஆலோசனை அளித்துள்ளார்.
குழந்தைப்பேறு சிகிச்சை மையங்கள் தற்போது செயல்படத் தொடங்கி இருக்கின்றனவா?
கடந்த ஓராண்டாகவே அவசரமற்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு தரப்பில் இருந்து மருத்துவமனைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. ஆதலால் குழந்தையின்மை சிகிச்சையையும் ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும்,
குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்பவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து சோதனைகள் செய்து கொள்ள வேண்டும். ஊரடங்கு, போக்குவரத்து முடக்கம் மற்றும் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவப் பொருட்கள் இறக்குமதி செய்வதில் சிக்கல், மருத்துவ உதவியாளர்கள் இருப்பு குறைவு போன்ற காரணங்களாலும் குழந்தையின்மை சிகிச்சையில் பின்னடைவை ஏற்படுத்தியது.
கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வருகிறது என்ற நம்பிக்கையில் தற்போது மீண்டும் குழந்தையின்மை சிகிச்சைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கொரோனாவிற்கு முன்பு இருந்ததை விட தற்போது குழந்தையின்மை சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
குழந்தைப்பேறு சிகிச்சை எடுக்க இது சரியான காலமா?
குழந்தைப்பேறு சிகிச்சையில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் காத்திருக்கலாம். ஆனால் வயது அதிகம் இருப்பவர்கள் ஏற்கனவே பாசிட்டிவ் வாய்ப்பு குறைந்த சதவிகிதத்தில் இருப்பவர்கள் தக்க பாதுகாப்பு நடைமுறைகளோடு சிகிச்சையை இப்போதே தொடரலாம்.
குழந்தைப்பேறு கிடைப்பதற்கான சாத்தியத்தில் யாருக்கும் பின்னடைவு ஏற்படும்?
சாதாரண கருமுட்டை சோதனை, ஸ்கேனிங் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளான IUI, IVF போன்றவற்றை மேற்கொள்ளும் போது சற்றே அதிகம் கவனம் தேவைப்படுகிறது.
வழக்கமான சிகிச்சை முறையில் பெருந்தொற்றால் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா?
சிகிச்சைக்கு வருபவர்களுக்கு வழக்கமான பரிசோதனைகளோடு தற்போது கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை தொடங்கிய பின்னர் முடிந்த வரை தனிமையில் இருக்கவே வலியுறுத்துகிறோம். இதனால் மற்றவர்களிடம் இருந்து தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்காது, சிகிச்சையிலும் பின்னடைவு ஏற்படாது.
கருவுற்றல் சிகிச்சையில் முட்டைக்குள் விந்தணுவை செலுத்தி அதனை கர்ப்பப்பையில் பொருத்தும் சமயத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும். அவ்வாறு தொற்று ஏற்பட்டால் சிகிச்சை கைகூடாமல் போகலாம், மேலும் கொரோனாவால் உடல் பலவீனமடயும் சமயத்தில் கருவுறாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கும் உகந்தது. அவ்வாறு செயற்கை கருவூட்டல் முறையில் முட்டை தயாராக இருந்தாலும் கூட மூன்று மாதங்களுக்கு அந்த முட்டையை உறைநிலையில் வைத்து பின்னரே சிகிச்சையாளருக்கு பொருத்தப்படுகிறது.
சிகிச்சையாளர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?
கருவுற்ற மூன்று மாதங்களும் கடைசி மாதமும் மிகக் கவனமாக இருக்க வேண்டிய காலம், கருவுறும் பெண் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் அவருக்கு தொற்றை ஏற்படுத்தக் காரணமாக இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், தேவையின்றி பொது இடங்களுக்குச் செல்லாமல் இருத்தல் உள்ளிட்ட சுகாதார ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.
குழந்தையின்மை சிகிச்சையில் யாருக்கு எதிர்மறை வாய்ப்புகள் ஏற்படும்?
குழந்தையின்மை சிகிச்சையில் முதல் நிலை கருமுட்டை வளர்வதற்கான சிகிச்சை, கருமுட்டை வெளிப்பட்டு குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும் இயல்பாக கருவுற்றல். இந்தச் சிகிச்சைமுறை ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கொடுக்கப்படும். அதன்பிறகு எந்தச் சிகிச்சையும் செய்யாமல், தம்பதியரை இயல்பான உறவில் இருக்க வேண்டும்.
குழந்தையின்மை சிகிச்சையில் இந்தக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட இடைவெளி குழந்தைக் கனவுக்கு எந்தக் கெடுதலும் செய்யாது. இரண்டாவதாக விந்தணு குறைப்பாட்டால் கருதறிக்காமல் போகிறவர்களுக்கு தரமான விந்தணு தேர்வு செய்யப்பட்டு கருமுட்டைக்குள் செலுத்தப்படும், இதற்கும் 3 மாத கால இடைவெளி தேவை, இந்த நிலை சிகிச்சையில் இருப்பவர்களும் அச்சமடையத் தேவையில்லை.
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 35 வயதிற்கும் மேற்பட்டவர்களும் 40 வயதான குழந்தையில்லாத தம்பதிகளே. 40 வயதைக் கடந்தவர்களுக்கு குழந்தைப்பேறுக்கான நேர்மறை வாய்ப்பு சதவிகிதம் சற்று சவால் தான். அவர்கள் ஏற்கனவே கடைசி வாய்ப்பான சோதனைக்குழாய் மூலம் குழந்தை சிகிச்சை நிலையில் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த ஊரடங்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது.
குழந்தைப்பேறு சிகிச்சைக்கு எப்படி தயாராவது?
குழந்தையின்மை சிகிச்சைக்கு வருவதாக பதிவு செய்பவர்களிடம் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பிருந்தே மூத்த மருத்துவர் ஒருவர் அவர்களை மன ரீதியில் தைரியப்படுத்தும் பணியை செய்யத் தொடங்கி இருக்கிறோம். நேர்மறையான சிந்தனை இருந்தால் மட்டுமே எந்த சிகிச்சையும் பலன் தரும், மேலும் உடல் அளவிலும் குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து, சத்தான, புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதோடு, மனதையும் உடலையும் அமைதியாக வைத்துக்கொள்வதற்கான யோகா பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.
கோவிட் தொற்று உறுதியானவர்கள் குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ளலாமா?
கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகி இருந்தாலே அதற்கான எதிர்ப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். எனவே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவராக இருந்தாலும் 3 வாரங்களுக்குப் பிறகு குழந்தையின்மை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் அதில் எந்த பாதகமும் இல்லை. சிகிச்சை தொடங்கிய பின்னர் இடையில் தொற்று ஏற்பட்டால் தான் பின்னடைவு ஏற்படும்.
தடுப்பூசி போட்டவர்கள் 3 மாதம் கருத்தரித்தல் கூடாது என்பது உண்மையா?
தடுப்பூசிகள் பற்றிய அச்சங்கள் எல்லாம் வாய்மொழியாக பரப்பப்பட்டதாகவே இருக்கின்றன. கர்ப்பிணிப்பெண்கள் தடுப்பூசி போடக் கூடாது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 3 மாதங்களுக்கு கருத்தரிக்கக் கூடாது என்பதற்கெல்லாம் மருத்துவ ரீதியில் எந்த சான்றும் இல்லை. சொல்லப்போனால் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டு குழந்தையின்மை சிகிச்சையை எடுத்துக் கொள்வதும் கூட சிறந்ததே.
கோவிட் 19 வைரஸ் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா?
பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில குழந்தையின்மை சிகிச்சைகளில் பாசிட்டிவ் சதவிகிதம் சற்றே குறைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு கோவிட் வைரஸ் தாக்கம் காரணமா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதே போன்று ஆண், பெண் இருபாலருக்கும் கோவிட் வைரஸ் மலட்டுத்தன்மை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்படவில்லை.
குழந்தைப்பேறு சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்களோ அல்லது புதிதாக சிகிச்சை எடுக்க முடிவு செய்திருப்பவர்களோ அவர்களுக்கு முதல் தேவை மன ரீதியிலான ஆதரவு. அவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறார்களோ அங்கு அல்லது எங்கள் மருத்துவமனையில் கூட தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு இருக்கும் அச்சங்கள் சந்தேகங்களை மருத்துவர்களிடம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். வீணான விஷயங்களால் மனதை குழப்பிக்கொள்ளாமல் தைரியத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் மூத்த மருத்துவரான மிருதுபாஷினி கோவிந்தராஜன்.