Paytm 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டு நிகர லாபம் 79% உயர்வு!
நிதியாண்டு 2027 முதலாம் காலாண்டில் பேடிஎம் ரூ.220 கோடி லாபம் ஈட்டியுள்ளது, இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு நிகர லாபம் வெறும் 123 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்களது அனைத்து வர்த்தகப் பிரிவுகளிலும் வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறும் பேடிஎம், நிதியாண்டு 2027-ன் முதல் காலாண்டில் நிகரலாபம் 79% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. வருவாயும் 28% உயர்ந்துள்ளது.
என்னதான் லாபமும் வருவாயும் உயர்ந்தாலும் அது தேசியப் பங்குச் சந்தையில் எதிரொலிக்க வேண்டும், பேடிஎம் விவகாரத்தில் அது நடக்கவில்லை. செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகளின் விலை 2.14 சதவீதம் சரிவடையவே செய்தன.
நிதியாண்டு 2027 முதலாம் காலாண்டில் பேடிஎம் ரூ.220 கோடி லாபம் ஈட்டியுள்ளது, இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு நிகர லாபம் வெறும் 123 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல், நிறுவனத்தின் வருவாய் இப்போது ரூ.2,448 கோடியாக உயர கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ. 1918 கோடியாக இருந்தது.

முதல் காலாண்டில் இத்தகைய நிகர லாப உயர்வு மற்றும் வருவாய் உயர்வுக்குக் காரணமாக பேடிஎம் நிறுவனம் தங்களது வணிக கட்டணச்சேவைகள் வர்த்தகத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதான் சந்தைப் பகிர்வு லாபங்களை உயர்த்தியது, மேலும் இதன் மூலம் மட்டுமே மொத்த வர்த்தக மதிப்பும் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆஃப் லைன் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியே ஆன்லைன் வர்த்தகத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிகர்களுக்கான கடன் விநியோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது; அதேவேளையில், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்பங்கள் வணிகர்களின் ஈடுபாடு மற்றும் தக்கவைப்பு, கூட்டாளர்களுக்கான இடர் குறித்த நுண்ணறிவு மற்றும் கடன் வசூல் திறன் ஆகியவற்றில் மேம்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. மேலும், தயாரிப்பு சார்ந்த புதுமைகள் மற்றும் AI மூலம் மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் ஈர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நுகர்வோர் பணப் பரிவர்த்தனைப் பிரிவில் தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாகச் சந்தைப் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
போஸ்ட்-பெய்ட் சேவை, சொந்தக் கடன்கள் மற்றும் சொத்து மேம்பாட்டுத் திட்டங்களின் விநியோகம் காரணமாக நுகர்வோர் வருவாயும் வலுவாக வளர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்துப் பேசிய பேடிஎம், அதிக செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அடைவதற்காக, திறந்த ஓபன் சோர்ஸ் மாதிரிகளைச் செம்மைப்படுத்தி, குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கான மாதிரிகள் மற்றும் ஏஜெண்ட்களை(agents) உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Paytm-இன் வருவாயில் 56% பங்களிப்பை வழங்கும் கட்டணச் சேவைகள் (payment services) வணிகம், 32% வளர்ச்சியுடன் ரூ. 1,384 கோடியை எட்டியது. நிதிச் சேவைகளை விநியோகிப்பதன் மூலம் ரூ. 814 கோடியும், சந்தைப்படுத்தல் சேவைகள் மூலம் ரூ.239 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டது என்று பேடிஎம் தெரிவித்துள்ளது.

