‘2027-ல் ஆப்’கள் காலாவதியாகும்; AI ஏஜெண்டுகள் ஆதிக்கம் செலுத்தும்’ - Paytm விஜய் சேகர் சர்மா கணிப்பு!
தானியங்கி தனிப்பட்ட உதவியாளர்கள் ஸ்மார்ட்போன் செயலிகளுக்குப் பதிலாக வந்து, அன்றாட கணினிப் பயன்பாட்டை மாற்றி அமைக்கும் என்று ஷர்மா கூறுகிறார்.
2027-ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவின் (AI) “வெகுஜனப் பயன்பாட்டின்” ஆண்டாக இருக்கும் என்றும், தன்னிச்சையாகச் செயல்படும் AI ஏஜெண்டுகள் ஸ்மார்ட்போன் செயலிகளுக்கு மாற்றாகி, நாம் கணினியுடன் தொடர்புகொள்ளும் முறையையே அடியோடு மாற்றும் என்றும் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா கணித்துள்ளார்.
தொழில்நுட்ப உலகில் துணிச்சலான இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ள சர்மா, ஸ்மார்ட்போன் திரையைத் தட்டி செயலிகளைத் திறப்பது, கணினியில் வெவ்வேறு மென்பொருள்களைத் திறந்து பயன்படுத்துவது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்குப் பதிலாக, சாதனங்களின் இயங்குதளத்திலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மிகத் திறன் வாய்ந்த தனிப்பட்ட AI உதவியாளர்களிடம் பணிகளை ஒப்படைக்கும் காலம் வரப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
X தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள், நமது தொலைபேசிகளிலும் கணினிகளிலும் நாம் செய்யும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய அளவுக்கு மிகுந்த திறன் கொண்ட AI உதவியாளர்கள்—எந்தப் பணியையும் சிறப்பாகச் செய்யும் தனிப்பட்ட ஏஜெண்டுகள்—நம்மிடம் இருப்பார்கள்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “2027-ஆம் ஆண்டில், ஆரம்பகால இணையம் மற்றும் மொபைல் இணைய காலங்களில் நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் இணையதளங்களையும் செயலிகளையும் உருவாக்கப் போட்டியிட்டதைப் போல, AI ஏஜெண்டுகளை அறிமுகப்படுத்த அவை அவசரமாக முன்வரும்,” என்று சர்மா கூறியுள்ளார்.
2010-களின் மொபைல் இணையப் புரட்சியின்போது, டெஸ்க்டாப் இணையதளங்களில் கிளிக் செய்வதை ஸ்மார்ட்போன் திரையில் தட்டுவது மாற்றியமைத்ததைப் போலவே, AI ஏஜெண்டுகள் தற்போதைய செயலி மையமான பயன்பாட்டு முறையை மாற்றிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பணியைச் செய்ய பயனர்கள் பல்வேறு செயலிகளுக்குள் மாறி மாறிச் செல்ல வேண்டிய நிலைக்குப் பதிலாக, பல கட்டங்களைக் கொண்ட சிக்கலான பணிகளையே தனிப்பட்ட டிஜிட்டல் ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்கும் நிலை உருவாகும் என்று அவர் கணித்துள்ளார்.
“Apple நிறுவனம், அழைப்புகள் மற்றும் SPAM நிர்வாகத்தைக் கையாள பிற செயலிகளுக்கு அனுமதி வழங்கியதைப் போல, நம்பகமான AI ஏஜெண்டுகளுக்கு தனது இயங்குதளத்தில் அணுகலை வழங்குவதாக அறிவிக்கும்,” என்று சர்மா தெரிவித்துள்ளார்.
அதேபோல், “Gemini-க்கு வழங்கப்பட்டுள்ள அதே அளவிலான அணுகலை மூன்றாம் தரப்பு AI ஏஜெண்டுகளுக்கும் Android வழங்க வேண்டியிருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேரில் ஏற்படும் மாற்றங்களைத் தாண்டி, பயனர்களின் அடையாளத்திலும் அடிப்படை மாற்றம் ஏற்படும் என சர்மா தெரிவித்துள்ளார்.
“இன்று நாம் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக வலைதளப் பயனர் பெயர் மூலம் அடையாளம் காணப்படுவது போல, எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள ஏஜெண்டுகளால் இயங்கும் உலகத்துடன் தொடர்புகொள்ளும் வகையில் நமக்கென சொந்த AI ஏஜெண்டுகள் இருக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.
“2027-ஆம் ஆண்டு AI-யின் வெகுஜனப் பயன்பாட்டின் ஆண்டாக இருக்கும். 2026-ஆம் ஆண்டு, புரோகிராமர்களைவிட இயந்திரங்கள் குறியீடுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கும் நிலையை உறுதிசெய்யும். மேலும், செயற்கை பொது நுண்ணறிவை (AGI) நோக்கிய நமது பயணத்தையும் நாம் தொடங்குவோம்” என்று விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.
தமிழில்: முத்துகுமார்

