PhysicsWallah-வின் மாணவர் கடன் வழங்கும் முறையில் மாற்றம்; NBFC-களுடன் கூட்டணி!
இந்த மாற்றத்தின் மூலம் கடன் தவறுதலால் ஏற்படக்கூடிய நிதி அபாயங்கள் மற்றும் இருப்புநிலைக் கணக்கு தொடர்பான ஆபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான ’பிசிக்ஸ்வாலா’ (PhysicsWallah), மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் தனது உத்தியில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனிமேல் நிறுவனம் தனது சொந்த இருப்புநிலைக் கணக்கிலிருந்து (Balance Sheet) நேரடியாக கடன் வழங்காமல், ஒழுங்குமுறை கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் (NBFCs) இணைந்து மாணவர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் கடன் தவறுதலால் ஏற்படக்கூடிய நிதி அபாயங்கள் மற்றும் இருப்புநிலைக் கணக்கு தொடர்பான ஆபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி கிடைப்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதோடு, நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ’பிஸிக்ஸ்வாலா’ தனது முழுமையான துணை நிறுவனமான ஃபின்ஸ் பைனான்ஸ் தனியார் நிறுவனத்தில் சுமார் ரூ.120 கோடி முதலீட்டை பங்கு மூலதனமாக செலுத்தியிருந்தது. எனினும், அந்நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் இயக்குநர் குழு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல்களுக்கு உட்பட்டு பின்னர் தீர்மானிக்கப்படும், என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைப்பின் கீழ், பிஸிக்ஸ்வாலா ஒரு தொழில்நுட்ப தளமாக செயல்பட்டு, மாணவர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இருக்கும். மாணவர்களின் கல்விப் பயணம் மற்றும் கல்விசார் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கூட்டாண்மைகள் வடிவமைக்கப்படும், என நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து பிஸிக்ஸ்வாலாவின் இணை நிறுவனர் பிரதீக் மகேஷ்வரி கூறுகையில்,
“எங்கள் முக்கிய பலம் மாணவர் சமூகங்களை உருவாக்குவதிலும், ஆன்லைன் கல்வி வணிகத்தை வளர்ப்பதிலும் உள்ளது என்ற கருத்தை எங்கள் கூட்டாளர்கள் முன்வைத்தனர். கடன் வழங்கும் செயல்பாட்டை அதற்கான வலுவான மதிப்பீட்டு திறன்களைக் கொண்ட ஒழுங்குபடுத்தப்பட்ட என்.பி.எஃப்.சி. நிறுவனங்களே சிறப்பாக மேற்கொள்ள முடியும்,” என்றார்.
மேலும், முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர்களின் கருத்துக்களைப் பரிசீலித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மூலதனத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதும், பங்குதாரர்களின் மதிப்பை பாதுகாப்பதும் நிறுவனத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதால், மாணவர் கடன் வசதியை ஒழுங்குபடுத்தப்பட்ட மூன்றாம் தரப்பு NBFCகள் மூலம் வழங்கும் புதிய மாதிரியைத் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அலக் பாண்டே மற்றும் பிரதீக் மகேஷ்வரியால் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிஸிக்ஸ்வாலா, 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூடியூப் கல்விச் சேனலிலிருந்து வளர்ச்சி பெற்று, இன்று பல்வேறு தளங்களில் கல்விச் சேவைகளை வழங்கும் முன்னணிக் கல்வித் தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

