OpenAi இந்திய நிர்வாக இயக்குநராக உபேர் முன்னாள் நிர்வாகி பிரப்ஜீத் சிங் நியமனம்!
இதன் மூலம் இந்தியாவில் ஓபன் ஏஐ-யின் நுகர்வோர் வளர்ச்சி, நிறுவனங்களின் AI பயன்பாடு, கூட்டாண்மைகள், அரசாங்க மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடனான தொடர்புகள், செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புகளையும் பிரப்ஜீத் சிங் கவனிக்க உள்ளார்.
இந்தியாவில் தனது செயற்கை நுண்ணறிவு (AI) வணிகத்தை வேகமாக விரிவுபடுத்தி வரும் OpenAI நிறுவனம், இந்தியாவின் நிர்வாக இயக்குநராக உபேர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிரப்ஜீத் சிங்கை நியமித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் ஓபன் ஏஐ-யின் நுகர்வோர் வளர்ச்சி, நிறுவனங்களின் AI பயன்பாடு, கூட்டாண்மைகள், அரசாங்க மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடனான தொடர்புகள், செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புகளையும் அவர் கவனிக்க உள்ளார்.
OpenAI வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்திய AI சூழலமைப்பை (ecosystem) வலுப்படுத்துவதற்கான கூட்டாண்மைகளை உருவாக்குவதிலும், பொதுமக்கள், தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் AI தொழில்நுட்பத்தின் பயன்களைப் பெற உதவுவதிலும் அவர் முக்கிய பங்கு வகிப்பார்.
அவர் ஆசிய-பசிபிக் பிராந்திய நிர்வாக இயக்குநரான Kiran Mani-க்கு அறிக்கை சமர்ப்பிப்பார். செப்டம்பர் மாதத்தில் OpenAI-யில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்.
இந்தியாவில் OpenAI-யின் அடுத்த கட்ட விரிவாக்கம்
பிரப்ஜீத் சிங்கின் நியமனம், இந்தியாவில் OpenAI தனது செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் நேரத்தில் வந்துள்ளது. நிறுவனங்கள், டெவலப்பர்கள் மற்றும் கொள்கை நிர்ணய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதில் OpenAI அதிக கவனம் செலுத்தி வருகிறது.
OpenAI தனது முதல் இந்திய அலுவலகத்தை 2025 நவம்பரில் புதுடெல்லியில் திறந்தது.
OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்தியாவை OpenAI-யின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக தொடர்ந்து குறிப்பிடுகிறார். இந்தியாவில் AI தொழில்நுட்பம் வேகமாக ஏற்றுக்கொள்ளப்படுவதையும், தொழில்நுட்ப அடுக்குமுறைகளில் (tech stack) நடைபெறும் முதலீடுகளையும் அவர் பலமுறை பாராட்டியுள்ளார்.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் ஆல்ட்மேன் கூறியதாவது,
“இந்தியாவில் AI துறையில் நடைபெறுவது உண்மையிலேயே ஆச்சரியமானது. முழு தொழில்நுட்ப அடுக்குமுறையிலும் முதலீடு செய்யும் இந்தியாவின் உறுதியான அணுகுமுறை, AI சார்ந்த மிகப்பெரிய தொழில்முனைவு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்,” என்றும் தெரிவித்திருந்தார்.
உபேரில் 11 ஆண்டுகள் வளர்ச்சிப் பயணம்
OpenAI-யில் சேரும் முன், பிரப்ஜீத் சிங் 11 ஆண்டுகளுக்கும் மேலாக உபெர் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் தலைவராக செயல்பட்ட அவர், இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் உபெர்-ன் போக்குவரத்து சேவைகளை வழிநடத்தினார்.
2015 ஆகஸ்டில் உபெர்-இல் இணைந்த அவர், பல்வேறு பொறுப்புகளை வகித்த பின்னர் 2020 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவராக உயர்ந்தார். 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான Uber, தற்போது 125-க்கும் மேற்பட்ட நகரங்களில் பைக், ஆட்டோ, கார் மற்றும் மெட்ரோ முன்பதிவு சேவைகளை வழங்கி வருகிறது.
கடந்த மாதம் Uber-ன் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி Dara Khosrowshahi இந்தியா வந்தபோது, மத்திய அமைச்சர்கள் மற்றும் நிறுவன நிர்வாகிகளை சந்தித்ததுடன், இந்தியாவில் நீண்டகால முதலீட்டு உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினார்.
அப்போது Adani Group உடன் இணைந்து Uber-ன் முதல் இந்திய தரவு மையத்தை (Data Centre) அமைக்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

Image Source:Shutterstock
பிரப்ஜீத் சிங்கின் விலகல் குறித்து Uber வெளியிட்ட அறிக்கையில்,
“மற்றொரு தலைமைத்துவ வாய்ப்பை ஏற்க அவர் விலகுகிறார். கடந்த பத்தாண்டுகளாக அவர் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்தியாவில் எங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.
பிரப்ஜீத் சிங்கின் கல்வி மற்றும் ஆரம்பகால தொழில் வாழ்க்கை
பிரப்ஜீத் சிங், ஐஐடி காரக்பூர் மற்றும் ஐஐடி அகமதாபாத் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர் ஆவார். ஊபரில் சேருவதற்கு முன், அவர் மெக்கின்சி அண்ட் கம்பெனி நிறுவனத்தில் அசோசியேட் பார்ட்னர் ஆக பணியாற்றினார்.
2022 ஆம் ஆண்டு, நிறுவனத் தலைமைத்துவத்தில் சிறப்பான பங்களிப்புக்காக ஐஐஎம் அகமதாபாத் வழங்கும் Young Alumni Achiever's Award விருதைப் பெற்றார்.
ஏன் இந்த நியமனம் முக்கியமானது?
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உலகின் முன்னணி AI நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. பெரிய டெவலப்பர் சமூகமும், வேகமாக அதிகரித்து வரும் AI பயனாளர்களும், நிறுவனங்களின் உயர்ந்து வரும் AI தேவைகளும் இந்தியாவை முக்கிய சந்தையாக மாற்றியுள்ளன.
இந்த சூழலில், இந்தியாவில் தொழில்நுட்ப வணிகங்களை உருவாக்கி விரிவுபடுத்திய அனுபவம் கொண்ட பிரப்ஜீத் சிங், OpenAI-யின் இந்திய வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்று துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
