‘நிஜமான கதையை, ஆழமான குரலில் சொல்லும் இயக்குனர்கள் தேவை’ - தயாரிப்பாளர், நீலம் ஸ்டுடியோஸ் இணை நிறுவனர் அதிதி ஆனந்த்!
மும்பையில் பாலிவுட்டில் பணியாற்றிவிட்டு, பின்னர் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து ‘நீலம் ஸ்டுடியோஸ்’ நிறுவியவர் அதிதி ஆனந்த். சினிமா வழியே கதை சொல்லல் ஒருபோதும் அரசியலுக்கு அப்பாற்பட்டதில்லை, என ஆழமாக நம்பும் அவருடனான சிறப்பு உரையாடல்.
டெல்லியில் பிறந்த 90’ஸ் கிட் அதிதி ஆனந்த், கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் முக்கியப்பங்காற்றி வருகிறார். பிரபல இயக்குனர் பா.ரஞ்சிதின் ’நீலம் ஸ்டுடியோஸ்’-ன் இணை நிறுவனராக இருக்கும் அதிதி, மும்மபையில் இயங்கும் ‘லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ்'-இன் இணை நிறுவனரும் ஆவார்.
தன்னை ஒரு 'உணர்வுப்பூர்வமான தேசபக்தர்' என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் அதிதி, கதை சொல்லல் ஒருபோதும் அரசியலுக்கு அப்பாற்பட்டதில்லை, என ஆழமாக நினைப்பவர். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அதிகாரத்தின் மீதான ஓர் ஆய்வும் கூட என்று நம்பும் அதிதிக்கு, அதுவே கதை சொல்லும் தன் பயணத்துக்கான அஸ்திவாரம், என நம்புகிறார்.
அண்மையில், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ’பைசன்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான அதிதி ஆனந்தை பொறுத்தவரை, தமிழ்த் திரையுலகமே தனக்கான உண்மையான திரைப்படப் பள்ளி, எனக் கருதுகிறார். இது தனது அரசியல் நிலைப்பாட்டை மட்டுமல்ல, ஒரு வெளியாளாகவும், ஆணாதிக்கம் நிறைந்த துறையில் செயல்படும் ஒரு பெண்ணாகவும் தனது பொறுமையையும், மீள்தன்மையையும் சோதித்ததாக நினைக்கிறார். இவற்றையெல்லாம் தாண்டி, மும்பையின் ஸ்டுடியோ அமைப்பை தெற்கின் ஆழமான கதை சொல்லும் பாரம்பரியத்துடன் இணைக்கக்கூடிய ஒரு நம்பகத்தன்மை கொண்ட தயாரிப்பாளராக தன்னை உருவாக்கியிருப்பதாக கருதுகிறார்.
தயாரிப்பாளர் என்ற முத்திரையை தாண்டி அதிதி ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் ’India's Equal Marriage' தொடர்பான முக்கிய வழக்கின் மனுதாரர்களில் ஒருவர். தனது பார்ட்னர் சூசனுடன் ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். Queer rights உரிமைகள் ஆர்வலர் மற்றும் தெளிவான சமூகப்பார்வை கொண்ட அவருடனான எனது உரையாடலில் இருந்து தொகுப்பு இதோ:

அதிதி ஆனந்த்
இந்துஜா: உங்கள் குழந்தை பருவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள், திரைப்படங்கள் மீதான உங்கள் ஆர்வம் எப்படி வந்தது?
அதிதி ஆனந்த்: நான் பிறந்து வளர்ந்தது டெல்லியில். அப்போதெல்லாம் உண்மையில், எனக்குப் படங்கள் மீது ஆர்வம் இல்லை. என் பெற்றோர்களும் தீவிரமாக சினிமா பார்ப்பவர்கள் அல்ல. அமிதாப் பச்சன் கோபப்படுவதை நிறுத்தியபோது என் பெற்றோர் திரைப்படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டனர் என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. தீவார் மற்றும் ஷோலே ஆகியவை எங்கள் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய கடைசி பெரிய திரைப்படங்கள்.
என் சகோதரரும் நானும் பள்ளியில் இருந்து திரும்பி வந்ததும், எங்களிடம் இருந்த Born Free அல்லது Main Khiladi Tu Anari இரண்டில் ஒன்றைப் பார்ப்போம். அப்போது கேபிள் டிவிலாம் கிடையாது.
நான் ராணுவத்தில் சேர விரும்பினேன், பின்னர் பத்திரிகையாளராக நினைத்தேன். என் குடும்பத்தில் இரு தரப்பிலும் பிரிவினையை அனுபவித்தவர்கள் இருந்தனர். 80-களின் பிற்பகுதியிலும், 90-களின் முற்பகுதியிலும், நல்ல இந்தியக் குடிமக்களை உருவாக்குவதற்கான தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் நான் ஈர்க்கப்பட்டேன்.
”கல்லூரியில் நான் வரலாறு படித்தேன், எனது பேராசிரியர்கள் பாடத்தை உயிர்ப்பித்தார்கள். அது இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய கதைகளைச் சொல்ல வேண்டும் என்று என்னை நினைக்க வைத்தது.”
அந்த சமயத்தில், நான் மும்பையில் இருந்தேன். பாலிவுட் என்னை பெரிய திரையின் பக்கம் ஈர்த்தது. குறும்படம் ஒன்றை இயக்கினேன், பின்னர் நான் வரலாறு அல்லது அரசியல் ரீதியான கருப்பொருள்கள் பற்றி மிகவும் ஆர்வமாக இருந்தேன். ’தேரே பின் லாடன்’, ’நோ ஒன் கில்ட் ஜெசிகா’, ’பான் சிங் தோமர்’ போன்ற பவர்புல்லான படங்களில் பணியாற்றினேன். ஆனால், அரசியல் ரீதியான எதையும் உருவாக்குவது கடினமானது என்று புரிந்துகொண்டேன்.
இந்துஜா: மும்பையில் இந்தி திரைப்படங்களில் பணியாற்றி வந்த நீங்கள், தமிழ் படத் தயாரிப்பில் வந்தது எப்படி? பா.ரஞ்சித்தை எப்படி சந்தித்தீர்கள்?
அதிதி: நான் தனுஷின் முதல் சர்வதேச திரைப்படமான ’தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்தில் பணியாற்றினேன். அது சர்வதேச அளவில் நன்றாகச் சென்றது, ஆனால், இந்தியாவில் தோல்வியடைந்தது, இது என் மனதைக் காயப்படுத்தியது. அப்போது பா. ரஞ்சித் இயக்கிய ’காலா’ திரைப்படத்தை பார்த்தேன். அது எனக்கு மிகவும் சக்தி வாய்ந்த திரைப்படமாக தோன்றியது.
“உடனே நான் ரஞ்சித்துக்கு ஒரு செய்தி அனுப்பினேன், அவரும் உடனடியாக பதிலளித்தார், நாங்கள் சந்தித்தோம். ’நீலம் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து உருவாக்கினோம். அப்போது முதல் நான் தமிழ்நாட்டில் வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் படங்களை உருவாக்க மட்டும் சினிமாவுக்கு வரவில்லை. சினிமா; சக்தி வாய்ந்தது, மேலும் இது உலகை ஒரு சிறிய வழியில் மாற்றுவதற்கான வல்லமை கொண்டது. சினிமா; இந்தியாவின் தேசிய மொழி, இதுதான் நம்மை ஒரு நாடாக இணைக்கிறது, என்று நம்புகிறேன்.”
இந்துஜா: நீங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஆழமான உணர்வுப்பூர்வமானதாக உள்ளது. வணிக ரீதியாக கமர்சியல் வெற்றிகளுக்கு இடையில், உங்களால் எப்படி இதுபோன்ற சினிமாக்களை தயாரிப்பதில் ரிஸ்க் எடுக்க முடிகிறது?
அதிதி: இந்த கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். குறிப்பாக, பைசன் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு. நாங்கள் முதன்முதலில் மாரி செல்வராஜ் சாருடன் படத்தயாரிப்பில் இணைந்தபோது, அவர் ‘பரியேறும் பெருமாள்’ மட்டுமே இயக்கியிருந்தார். கர்ணன் அப்போது வெளிவரவில்லை. ஆனால், என்னை பொறுத்தவரை ஒரு இயக்குனர், அவர் யார்? அவரின் ஆழமான குரல் என்ன என்பதை பொறுத்ததே. அதனால், உண்மையான கதையை சொல்லும் எந்த ஒரு இயக்குனர் பக்கமும் நான் ஈர்க்கப்படுவேன். ஏனென்றால், கமர்சியல் வெற்றி என்பது லக்கை பொறுத்தது. அதைவிட சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான, நிஜமான கதையுடன் இருப்பது முக்கியம். இன்று போலிக் கதைகளை மக்கள் சுலபமான கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
“நிஜமான கதையை, ஆழமான குரலில், தாக்கத்தை ஏற்படுத்தவல்ல வகையில் இயக்கும் இயக்குனர்கள் இங்கே தேவை. ஆடியன்ஸ்கள் தங்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காண விரும்புகிறார்கள். கமர்சியல் சினிமா என்பதை பார்வையாளரை சிரிக்க, அழ வைக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு உணர்வுப்பூர்வமான தளம். இதில் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும். முதலில் சில நஷ்டங்களை சந்தித்தாலும், அதுவே இதற்கான தொடக்கம், பின்னர் மெதுவாக சம்பாதித்துவிடலாம்.”

இந்துஜா: பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உடன் இயங்குகிறீர்கள், அவர்கள் இருவரும் ஒரு சித்தாந்தத்துடன் ஆழமாக வேரூன்றியவர்கள். அது உங்கள் சித்தாந்தத்தோடு எப்படி ஒத்துபோனது? சமூக நீதி, தலித்துகளின் உரிமைகளுக்கான குரலாக, இயக்குனர்கள் என்பதைத் தாண்டி இயங்கும் அவர்களுடன், எவ்வாறு பணியாற்றுகிறீர்கள்?
அதிதி: நான் ரஞ்சித் சாருடன் பணியாற்ற நேர்ந்தது தற்செயல் அல்ல. காலா திரைப்படத்தின் முடிவில் வரும் அந்த ஒரே காட்சியில், அவர் முக்கியமான அரசியலை, ஒரு வரலாற்று இயக்கத்தின் கருத்தை அழகாக தனது கதைசொல்லல் மூலம் காட்சிப்படுத்தி இருப்பார். அந்த படம் பல அடுக்குகளில் ஒரு பார்வையளராக என்னை சிந்திக்கவைத்தது. சாதியை பற்றி வெளிப்படையாக பேசாவிட்டாலும், இந்தியா முழுவதும் அது சொல்லப்படாத வடிவங்களில் வேரூன்றி இருக்கிறது.
“ரஞ்சித்; சினிமாவை தாண்டி, ஒரு கலாச்சாரத் தூதராகவும், அவர் செய்யும் எல்லாவற்றிலும் (நீலம் பப்ளிஷிங், காஸ்ட்லெஸ் கலெக்டிவ்) மிகவும் ஆழமான சிந்தனை உள்ள நபராக இருப்பதை கண்டேன். அதுவரை பொதுவாக சொல்லப்பட்ட கதைகளை தலைகீழாக மாற்றினார், மேலும் அவர் மற்றும் மாரி செல்வராஜ் தங்களின் சொந்தக் கதைகளை சினிமா வடிவில் சொல்லும் விதத்தை கண்டு வியந்தேன். அவர்கள் தங்களின் சொந்தக் கதைகளைச் சொல்லும்போது, அவர்கள் ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறார்கள்.”
மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன், ஒரு படத்தில் இத்தனை மிகவும் நுணுக்கமான உரையாடலை நடத்தக்கூடிய திறன் கொண்ட ஒருவரைக் கண்டேன், என்னை சிந்திக்க வைக்கும் ஒருவரைக் கண்டேன்.
“இப்போது உலகமே ‘கதைக்கள சுயாட்சியை’ பற்றி பேசும் இந்த தருணத்தில், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் அதை வாழ்ந்து காட்டி வருகிறார்கள். தங்களுடைய கதைகளை, தங்களுடைய முறையில் சொல்லும் கலைஞர்களை முன்னிறுத்தி, ஆதரித்து, அவர்களுக்கு மேடை அமைத்து கொடுத்து, இந்த கலாச்சார இயக்கம்; அரசியல் இயக்கத்தைவிட நிச்சயமாக பல மடங்கு சக்திவாய்ந்தது என்று காட்டுகிறார்கள்.”
இந்துஜா: நீங்கள் பாலிவுட்டில் பணியாற்றிவிட்டு தமிழ் சினிமாவிலும் பணியாற்றுகிறீர்கள். ஒரு பெண்ணாக திரைத்துறையில் குறிப்பாக தயாரிப்பாளராக நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
அதிதி: தொடக்கத்தில் பெரிதாக எந்த வகையான பாகுபாடையும் நான் சந்திக்கவில்லை. ஆனால், ஒரு பெண் தயாரிப்பாளராக, சில நேரங்களில் முற்றிலும் பலருக்கு கண்ணுக்குப் புலப்படாதவராகவே நான் உணர்ந்திருக்கிறேன். ரஞ்சித், மற்றும் மாரி சாரின் தன்மை, மற்றும் அவர்களுடன் எனக்குள்ள உறவு காரணமாக, இதுபோன்ற பாகுபாடு அவர்கள் இருக்கையில் நடக்காது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் திரையுலகில் பணியாற்றும்போது என் இருப்பை நான் வலியுறுத்த வேண்டியிருக்கிறது
“துணிச்சலாக, தைரியமாக, உண்மையான சினிமாக்களை எடுக்கும் விதத்தில், மும்பை; தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், தமிழ் சினிமா மும்பையிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. குறைந்தது நான் அங்கு வேலை செய்த கடந்த சில வருடங்களில், பல துறைகளில் பெண்கள் நிறைய இருந்தார்கள் — பல துறைகளின் தலைவர்களாகவும், ஸ்டுடியோக்களில் அதிகார நிலைகளிலும், women in power என்று சொல்லக்கூடிய நிலைகளிலும் மிகவும் அதிகமான பெண்களை நான் பார்த்தேன். அந்த நிலை இங்கும் வரவேண்டும்.”
இந்துஜா: 'மாமன்னன்' படத்திற்குப் பிறகு, மாரி செல்வராஜ் மற்றும் ரஞ்சித்துக்கு எதிராகத் திட்டமிட்ட கேலிகள், (targeted trolling) அல்லது அவதூறுகள் நடைபெற்றது. இவர்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி, குறிப்பிட்ட கருத்தை (narrative) வைத்தே படம் எடுக்கிறார்கள். இவர்கள் வணிக ரீதியான சினிமாவுக்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறப்பட்டது. ஆனால், மறுபுறம், நீங்கள் அதிக பிரதிநிதித்துவம் தேவை, மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் கதைகள் சொல்லப்பட வேண்டும் என்கிறீர்கள். இவ்வாறு நினைக்கும் இந்தக் கூட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அல்லது அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அதிதி: மக்கள் சாதிப் படம் (caste film) மற்றும் சாதி அல்லாத படம் (non-caste film) என்று அழைப்பதற்கு இடையேயான வித்தியாசம் சில சமயங்களில் ஒரு பெயர் தான். உதாரணமாக, அமிதாப் பச்சன் ஒரு பிரபலமான காட்சியில், தான் ஒரு டாக்ஸி டிரைவர் என்றும், தன் பெயர் விஜய் தீனாநாத் சௌஹான் என்றும் கூறுவார். அமிதாப், அதே இடத்தில் தன் பெயர் விஜய் மோண்டல் என்று கூறியிருந்தால், அதே கதை ஒரு சாதியப் படமாக மாறியிருக்கும்.

இயக்குனர் மாரி செல்வராஜ், பைசன் நடிகர் த்ருவ் விக்ரம் உடன் அதிதி ஆனந்த
நீங்கள் உங்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றைப் பற்றிச் சொல்லும் போதுதான் மிகவும் சக்திவாய்ந்த சினிமா வருகிறது. மாரி செல்வராஜின் சக்தி என்னவென்றால், அவர் தன் படங்களை ஒரு அத்தியாயம் போல எடுத்துக்கொள்கிறார். அவர் இயக்கும்போது, அவர் தன் மனதில் அந்த நினைவு பேனாவை வைத்து, தன் குழந்தைப்பருவத்திற்குள் ஆழமாகச் சென்று ஒரு அத்தியாயத்தை, ஒரு தருணத்தை வெளியே எடுக்கிறார் என்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. உங்கள் பார்வையாளர்களுக்காக அந்த உலகத்தை உங்களால் உருவாக்க முடியாவிட்டால், அவர்களை நீங்கள் அந்தக் கதைக்குள் கொண்டு செல்ல முடியாது.
”இது மாரி செல்வராஜின் வாழ்க்கை. இது ரஞ்சித் சாரின் வாழ்க்கை. இதைத்தான் அவர்கள் அனுபவிக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய உலகம்.”
'மெட்ராஸ்' திரைப்படத்தின் சுவர்களில் உள்ள ஓவியம் அப்படியிருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால், அது நிஜம், அது நடந்தது, அவர்கள் அதைப் பார்த்தார்கள், அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றினார்கள். ஆகவே சிலர், ’ஓ, நீங்கள் சாதியப் படங்கள் எடுக்கக் கூடாது,’ என்று சொல்லும்போது, ’சரி, அவர்கள் வேறு என்ன தான் எடுப்பார்கள்?’ இதுதான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இதுதான் அவர்கள் பெற்ற அனுபவம். இந்த அனுபவங்கள்தான் அவர்களுக்கு அர்த்தமுள்ள கதைகளாகத் தெரிகின்றன.
”சினிமா என்பது நீங்கள் பார்வையாளர்களுடன் நடத்தும் ஒரு உரையாடல். அந்த உரையாடலை நீங்கள் அர்த்தமுள்ளதாக மாற்றினால், அவர்கள் பதிலுக்குப் பேசுவார்கள், அந்த உரையாடலின் ஒரு பகுதியாக அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். சில நேரங்களில், அந்தப் பதில் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்காது; அது கோபமான பதிலாக இருக்கும், ஆனால் அதுவும் ஒரு உரையாடலாகத்தான் இருக்கும். எனவே, அந்த உரையாடல் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.”

