மாறன் சகோதரர்கள் சொத்துத் தகராறு - கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் என்ன?
கடுமையான நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய திமுக அமைச்சரும், தற்போதைய எம்.பி. தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊடக குழுமங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது சன் நெட்வொர்க் லிமிடெட். வழக்கமாக மற்ற பரபரப்புச் செய்திகளை வெளியிடும் அந்த நிறுவனத்தில் குற்றச்சாட்டு நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது மற்ற ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாகி இருக்கிறது.
சன் நெட்வொர்க்கின் தலைவரான கலாநிதி மாறன், தனது மனைவி மற்றும் சிலருடன் சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக, கலாநிதி மாறனின் சகோதரரும், முன்னாள் மத்திய திமுக அமைச்சரும், தற்போதைய எம்.பி. தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மணி கண்ட்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், மாறன் சகோதரர்களிடையே சொத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலாநிதி மாறனுடன், தயாநிதி மாறன்
மாறன் சகோதரர்கள் இடையே என்ன பிரச்சனை?
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி மாறன். இவரது இரண்டு மகன்களில், இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கருதப்படும் கலாநிதி மாறன் சன் நெட்வொர்க், சன் பிக்சர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி போன்றவற்றை நிர்வகிக்க, தயாநிதி மாறன்; தன் தந்தை வழியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதன் தொடர்ச்சியாக, 2009 முதல் 2011 வரை ஜவுளித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் தயாநிதி மாறன்.
2ஜி வழக்கின் காரணமாக 2011ம் ஆண்டு தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், தற்போது மத்திய சென்னை மக்களவை உறுப்பினராகவும், திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
மீடியாக்களில் மாறன் சகோதரர்கள் எனக் குறிப்பிடப்படும் அளவிற்கு இருவரும் நெருக்கமாக இருந்தனர். இருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்தபோதும், ஒருவர் மற்றொருவருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர்.
ஆனால், பணம் இருக்கும் இடத்தில் நிச்சயம் பிரச்சினையும் சேர்ந்தே இருக்கும் என்பதை நிரூபிக்கும் வரையில், கடந்த காலங்களில் மிகவும் நெருக்கமாக இருந்து வந்த இந்த சகோதரர்களிடையே சமீபகாலமாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக அரசல்புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், இருதரப்பும் அதனை உறுதியும் செய்யவில்லை, மறுக்கவுமில்லை.
இந்நிலையில், சன் டிவி பங்குகளில் முறைகேடு செய்து விட்டதாக கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உட்பட சன் நெட்வொர்க்கைச் சேர்ந்த ஏழு பேர் மீது, தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மணி கண்ட்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் முழு விவரம்
தயாநிதி மாறன் அனுப்பிய அந்த நோட்டீஸ், ஜூன் 10, 2025 என தேதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக மணி கண்ட்ரோல் செய்தி தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த Law Dharma என்ற சட்டவழக்கு ஆதரவு நிறுவனம் மூலம் கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட நோட்டீஸில், ‘2003ம் ஆண்டு நிறுவப்பட்ட அசல் கட்டமைப்பிற்கு சன் நிறுவனத்தின் பங்குகளை மீட்டெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளது. அதில்,
"நம்பர் 1 மற்றும் 2 (கலாநிதி மற்றும் காவேரி மாறன்) ஆகிய உங்கள் இருவரின் தனிப்பட்ட லாபத்திற்கு நிறுவனமும் அதன் சொத்துகளையும் முழுமையாக கைப்பற்றும் நோக்கில், கலாநிதி மாறன்; நம்பர் 2 முதல் 8 வரை உள்ள உங்கள் அனைவருடனும் சூழ்ச்சி புரிந்து, ஒரு மோசடியும் கபடமும் நிறைந்த திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார். உங்கள் திட்டமிட்ட மோசடித் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு பகுதியாக, குடும்பத்தின் சூழ்நிலையை—குறிப்பாக என் வாடிக்கையாளர் தந்தையின் (முரசொலி மாறன்) உடல் நலன் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில்—தவறாகப் பயன்படுத்திய நிலையில், அவர் எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் என்பதற்கான அச்சத்தால் முழு குடும்பமும் கவலையில் இருந்த நேரத்தில், நீங்கள் (நம்பர் 1 மற்றும் 2) உங்கள் முதல் சட்டவிரோத நடவடிக்கையை செப்டம்பர் 2003-ல் தொடங்கியுள்ளீர்கள்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தொடர்சியாக,
‘கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் இருவரும் தங்களது தனிப்பட்ட நலனுக்காக முழு நிறுவனத்தின் சொத்துக்களையும் கையகப்படுத்த தந்திரமான திட்டத்தை தீட்டியுள்ளதாகவும், 2003ம் ஆண்டு சன் டிவி நெட்வொர்க்கின் 60 சதவீத பங்குகளை, மற்ற பெரும்பான்மை பங்குதாரர்களின் கவனத்திற்கு கொண்டு வராமல், அவர்களது ஒப்புதல் இல்லாமல் தங்களுக்கே ஒதுக்கிக் கொண்டதாகவும்’ குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, அன்றைய காலகட்டத்தில் ஒரு பங்கிற்கு ரூ.2,500 முதல் 3,000 வரை சந்தை மதிப்பு இருந்தநிலையில், கலாநிதி மாறனும், அவரது மனைவியும் சுயநலமாக, சுமார் 12 லட்சம் பங்குகளை, ஒரு பங்கிற்கு ரூ.10 என்ற கணக்கில், தங்களுக்கு தாங்களே ஒதுக்கிக் கொண்டதாகவும், இது குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் மோசடி என அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

அதுமட்டுமின்றி, 2003ஆம் ஆண்டு அவர்களது தந்தை முரசொலி மாறன் மறைந்த பிறகு, உரிய சட்ட ஆவணங்கள், மரணச் சான்றிதழ் அல்லது சட்ட வாரிசுச் சான்றிதழ் இல்லாமலே, பங்குகள் அவர்களது தாயாரான மல்லிகா மாறனுக்கு மாற்றப்பட்டதாக நோட்டீசில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் சில நாட்கள் அல்லது மாதங்கள் கழித்தே வழங்கப்பட்டன. இந்த பங்கு மாற்றம், பின்னர் பங்குகளை கலாநிதி மாறனுக்கு மாற்ற எளிதாக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் நிறுவனம் நிதி ரீதியாக வலுவாக இருந்தது மற்றும் நிதி திரட்ட தேவையில்லை என்பதால், அந்த பங்குகளை வெளியிட வேண்டிய எந்த தேவையும் இல்லை, என நோட்டீசில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன் கலாநிதி மாறனுக்கு நிறுவனத்தில் எந்த பங்குகளும் இல்லையென்றும், இந்த நடவடிக்கையின் பிறகு அவர் பெரும்பங்கு உரிமையாளராக மாறியதாகவும், முதலில் 50 சதவிகிதம் வீதமாக இருந்த மூல குடும்ப உறுப்பினர்களின் பங்கு விகிதம் 20 சதவீதமாக குறைத்துவிட்டதாகவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்விக்குள்ளான RHP (Red Herring Prospectus) விவரங்கள்
2006 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சன் டிவியின் ரெட் ஹெர்ரிங் புராஸ்பெக்டஸில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், அதன் மூலம் பங்கு வைத்திருபவர்கள் மற்றும் பொதுமக்கள் முறையாக விளக்கமளிக்கப்படவில்லை, எனவும் நோட்டீசில் மேலும் கூறப்படுகிறது.
“நீங்கள் சன் டிவி லிமிடெட் நிறுவனத்தின் ரெட் ஹெர்ரிங் புராஸ்பெக்டஸில் 31-12-2005 நிலவரப்படி, ரூ.10.64 கோடி மதிப்பு டிவிடென்ட் (பங்குதொகை) மல்லிகா மாறனுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளீர்கள். ஆனால், 2005ஆம் ஆண்டில் அவருக்கு எந்த டிவிடென்டும் வழங்கப்படவில்லை. எனவே, நீங்கள் RHP-ல் பொய்யான தகவலை வெளியிட்டு, பொதுமக்களை ஏமாற்றியுள்ளீர்கள்,” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த குற்றச்செயல்களில் இருந்து வந்த வருமானங்கள், தங்களுக்கே மேலும் செல்வம் சேர்க்கும் வகையில் பல மதிப்புமிக்க சொத்துகள் மற்றும் நிறுவனங்களை (Sun Direct TV Pvt Ltd, Kal Radios Pvt Ltd, Kal Airways Pvt Ltd, Kal Publications Pvt Ltd, Sunrisers Hyderabad, South Asian FM, Sun Pictures, தென்னாப்பிரிக்காவிலுள்ள ஒரு கிரிக்கெட் அணியும், ஐக்கிய இராச்யத்திலுள்ள ஒரு கிரிக்கெட் அணியும், SpiceJet மற்றும் பிற தொடர்புடைய முதலீடுகளும்) வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளன,” என்றும் கூறப்படுகிறது.
இதனைக் தொடர்ந்து, சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் 15.09.2003 நிலவரப்படி, இருந்த பங்குதாரர்ப் பங்கீட்டமைப்பை மீண்டும் நிலைநிறுத்தி, உரிய உரிமையாளர்களான எம்.கே. தயாளு மற்றும் மறைந்த எஸ்.என்.மாறனின் சட்ட வாரிசுகளுக்கு பங்குகளை திருப்பி வழங்க வேண்டும், என நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,
கலாநிதி மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர், 2003ஆம் ஆண்டு முதல் இன்று வரை சட்டவிரோதமாக பெற்ற அனைத்துப் பணச் சலுகைகள், டிவிடென்டுகள், சொத்துகள் மற்றும் வருமானங்கள் முழுமையாக எம்.கே. தயாளு மற்றும் எஸ்.என்.மாறனின் சட்ட வாரிசுகளிடம் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும், எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அவர்களும் அவர்களின் தொடர்புடையவர்களும் எதிராக அனைத்து உரிய சிவில், குற்றவியல், ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இது 2வது நோட்டீஸ்
தயாநிதி மாறன் மேலும் கூறுகையில், 2024 அக்டோபர் 7 அன்று அனுப்பப்பட்ட முன் நோட்டீசுக்கு அளிக்கப்பட்ட பதில் குழப்பமூட்டும் வகையிலிருந்தது என்றும், அதன் பின்னர், கலாநிதி தனது மற்றொரு சகோதரி அன்புக்கரசிக்கு சுமாராக ₹500 கோடி தொகையை ஒரு பாகம் தீர்வாகக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கலாநிதி மாறன் தற்போது சன் டிவி நெட்வொர்க்கில் 75 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இந்தியாவின் மிகச் செல்வந்த தொழிலதிபர்களில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
எனவே, இந்தக் குற்றச்சாட்டு, நிறுவன மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ், பண மோசடி உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு கீழ் வருவதால், தீவிர மோசடிப் புலனாய்வு அலுவலகத்தின் (SFIO) விசாரணையை கோரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாநிதி மாறனின் இந்த குற்றச்சாட்டுக்கு, கலாநிதி மாறன் தரப்பில் என்ன பதில் அளிக்கப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை தெரியவில்லை. இது இரு சகோதரர்களுக்கு இடைப்பட்ட சொத்துப் பிரச்சினை என்பதால், சன் நெட்வொர்க்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதனால் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றும், மணி கண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து இரு தரப்பில் யாராவது ஒருவராவது வெளிப்படையாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே, இந்த விவகாரங்களில் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவரும்.
தகவல் உதவி: MoneyControl

