கூகுளின் இந்திய ஸ்டார்ட் அப்களுக்கான பிரிவுக்கு தலைமை தாங்க ராகினி தாஸ் நியமனம்!
12 ஆண்டுகள் ஸ்டார்ட்-அப் சூழலில் அனுபவம் கொண்டுள்ள ராகினி தாஸ், ஜொமேட்டோஉள்ளிட்ட நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார்
ராகினி தாஸ், ஜொமேட்டோ (இடர்னல்) உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களுடன் பணியாற்றியவர். பெண்களுக்கான தொழில்முறை வலைப்பின்னல் ஸ்டார்ட் அப் 'Leap.club'-இன் இணை நிறுவனராக இருந்துள்ளார்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் கூகுள் இந்தியாவில் ஸ்டார்ட் அப்களுக்கான பிரிவு தலைவராக ராகினி தாஸ் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ள ராகினி தாஸ், ஜொமேட்டோ (இடர்னல்) உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களுடன் பணியாற்றியுள்ளார். பெண்களுக்கான தொழில்முறை வலைப்பின்னல் ஸ்டார்ட் அப் (leap.club) இணை நிறுவனராக விளங்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூனில் இந்நிறுவனம் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.
“ஆகஸ்ட் மாதம், என் தொழில்முறை பயணத்திற்கு ஏற்ற பொருத்தமான பொறுப்பை கூகுளில் கண்டறிந்தேன். இத்தனை ஆண்டுகளில் உருவாக்கிய எல்லாமும் மற்றும் நிறுவனர்கள் இணையும் புள்ளியில் இது அமைந்திருந்தது,” என அவர் லிங்க்டுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.
“இரண்டு மாதங்களாக நடைபெற்ற உரையாடல் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கான கூகுளின் புவிசார் தாக்கத்தை தெரிந்து கொண்ட பிறகு, இதே ஆற்றலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் ஊக்கம் கொண்டுள்ளேன்,” என தெரிவித்துள்ளார் ராகினி தாஸ்.

இந்தியாவில் கூகுள்; ஸ்டார்ட் அப்களுக்கான பல்வேறு திட்டங்கள் மூலம், நாட்டின் ஸ்டார்ட் அப் சூழலுக்கு உதவுகிறது. ஏஐ மற்றும் எம்.எல் போன்ற மேம்பட்ட நுப்டங்களில் தனி கவனம் செலுத்துகிறது. ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சி காண, பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை அளிக்கிறது.
“சரியான நபர்கள், பொருட்கள் மற்றும் சிறந்த செயல்முறைகளுடன் தொடர்பு கொள்ளச்செய்வதன் மூலம் ஸ்டார்ட் அப்கள் செழிக்க உலக அளவில் உதவி வருகிறோம். இந்தியாவுக்கான திட்டங்கள் பற்றி விரைவில் தகவல்கள் தெரிவிப்போம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
லீப்.கிளப் நிறுவனத்திற்கு முன், ஜொமேட்டோ நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய ராகினி, FICCI-யின் பெண்களுக்கான ஸ்டார்ட் அப் குழுவில் தன்னார்வ தலைவராக இருந்துள்ளார்.
கடந்த மாதம் கூகுள் தனது ஸ்டார்ட் அப் ஆக்சிலேட்டர், ஏஐ முதல் திட்டத்தில் 20 ஏஐ ஸ்டார்ட் அப்கள் இணைந்துள்ளதாக அறிவித்தது.

