‘பணம் அல்ல, நேரம் தான் மிகப்பெரிய வளம்’ - ஐஐடி-களில் 8 பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்த முன்னோடி மனிதர்!
ராகுல் மேத்தா, பெற்றோர் தங்கத்தை விற்று தந்த டாலர்களுடன் 17 வயதில் அமெரிக்க சென்றார். அங்கு 4 நிறுவனங்களை துவக்கி விற்றவர், இந்தியாவுக்கு திரும்பி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
ராகுல் மேத்தா, ஐஐடி மெட்ராஸ் அறைக்கு சிவப்பு ஹூடி மற்றும் பழுப்பு டிரவுசருடன் வந்த போது, முதலில் தனது ஆடைக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். விமான நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரது லகேஜ் வந்து சேரவில்லை, ஆகையால் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக, வளாகத்தில் தான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துவிட்டார். அவர் நான்கு மணி நேரம் தான் தூங்கியிருந்தார். மேலும், தூக்கம் தேவைப்பட்டது அவரது தோற்றத்தில் தெரிந்தது.
அருகாமை மேஜையில் இருவர் வர்த்தக விவகாரம் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் அவர்களை பார்த்த மேத்தா பின்னர் கவனத்தை திருப்பினார். அவரது ஆடைக்கு பொருந்தாத துடிப்பான ஆற்றல் அவரிடம் இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன் பணத்திற்காக ஓடுவதில் இருந்து விலகிக் கொண்ட ஒருவரிடம் காணக்கூடிய ஓய்வில்லா தன்மையை அவரிடம் பார்க்க முடிந்தது.

ராகுல் மேத்தா அமெரிக்காவில் நான்கு நிறுவனங்களை உருவாக்கி, எச்பி போன்ற நிறுவனங்களுக்கு விற்றிருக்கிறார். அவர் கடன் வாங்கியதும் இல்லை வென்சர் முதலீடு பெற்றதும் இல்லை. அதோடு, போதிய எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக நினைத்ததால் 2006ல் இதை நிறுத்திக்கொண்டார்.
அதன் பிறகு, அவர் ஆறு ஐஐடிகளில் உயிரிநுட்பம் துவங்க தரவு விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளில் 8 பள்ளிகளை நிறுவியுள்ளார். அவரது பெற்றோர் பெயரிலான பூபத் மற்றும் 'ஜோதி மேத்தா பவுண்டேஷன்' 100க்கும் மேலான தொண்டு நிறுவனங்களுக்கு வழிகாட்டியுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் அவரது பெயரை கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அறிவு மூலதனமே தேசத்தை வளர்த்தெடுக்கும் எனும் அவரது நம்பிக்கை இதன் பின்னே உள்ளது.
பணக்காரர் ஒருவர் தனது பணத்தால் பல நல்ல காரியங்கள் செய்வதை விவரித்து எழுதும் நோக்கத்துடன் நான் வந்திருந்தாலும், காலத்திற்கும் என்னோடு இருக்கக் கூடிய முக்கிய பாடம் ஒன்று கிடைத்ததை உணர்ந்தேன்:
”இந்த பாடம், கொடுப்பது தொடர்பான என சிந்தனையை மாற்றி அமைத்து, என்னைப்போன்ற மத்திய தரத்தினர் உலகிற்கு பங்களிப்பு செய்வதற்கான வழியை உணர்த்தியது,” என்கிறார்.
அவரது பயணம், மும்பையில், குறைந்த வருமானம் கொண்ட மத்திய தர வீட்டில் இருந்து துவங்கியது. அவரது பெற்றோர் படித்தவர்கள் இல்லை. தந்தை சிறிய ஜவுளி தொழிலை நடத்தி வந்தார். அதில் பெரிய வருமானம் இல்லை. 17 வயதில் அவர் கல்லூரிக்கு அமெரிக்கா செல்ல விரும்பிய போது, அதற்கான செலவை அவர்களால் ஏற்க முடியாமல் நீயே பார்த்துக்கொள் என்றனர்.
“எத்தனை பெற்றோர், 17 வயது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள். இப்போது கூட அமெரிக்க பெற்றோர்கள் இதை செய்யமாட்டார்கள். ஆனால் என் அப்பா, தடுக்கவில்லை மாறாக நீயே போய் பார்த்துக்கொள் என்றார்,” என்கிறார் மேத்தா.
ஆனால், அவருக்குத்தெரியாமல் பெற்றோர் தங்களிடம் இருந்த தங்கம் வெள்ளியை விற்று முதல் செமிஸ்டர் பணம் கட்டினர். இதை அவர் பின்னர் தெரிந்து கொண்டார்.
இது நடந்தது 1979ல். அப்போது இந்திய அரசு ரூபாயை டாலராக மாற்றிக்கொள்ள எளிதாக அனுமதிக்கவில்லை. அவர் மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு சென்று, பல்கலை கையேடுகளை வாசித்து, இந்தியாவில் இல்லாத படிப்பில் சேர அனுமதி கிடைத்தால் ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி அனுமதி அளிக்கும்,” என தெரிந்து கொண்டார்.
எனவே, அவர் டாலர் தேவைக்காக கெமிக்கல் பொறியியல் படிப்பிற்கு பதில் பாலிமர் அறிவியலை தேர்வு செய்தார். இதனால் கையில் கூடுதலாக பணம் கிடைத்தது. பெற்றோர் சுமையை குறைக்க விரும்பியதால், கல்லூரியில் சேர்ந்ததுமே பகுதி நேர வேலை பார்க்கத்துவங்கினார்.
“நாள் முழுவதும் சாப்பிட எதுவும் இல்லாமல் இருந்த நாட்கள் உண்டு. 2 டாலருக்கு உறைந்த பிட்சா வாங்கி, சூடாக்கி சாப்பிடுவேன்,” என நினைவு கூர்கிறார்.
அவர் வேறு எங்கும் முழு நேரமாக பணியாற்றவில்லை. கல்லூரி முடித்ததுமே தனது முதல் நிறுவனத்தை உருவாக்கினார். ஆரக்கிள் மற்றும் எஸ்.ஏ.எஸ் இடையிலான இடைமுகமாக இது அமைந்தது. கடன் வாங்காமல் துவக்கிய நிறுவனம், 80 பேர் கொண்டதாக வளர்ந்தது.
ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்ததால் அவரது வங்கி கணக்கு பூஜ்ஜியமாகவே இருந்தது. கைவசம் பணம் இல்லாதது மடத்தனம், என அவரது அப்பா கடிந்து கொண்டார். அவர் சொந்த வீடும் வாங்கவில்லை. ஆனால், பிடித்தமானதை செய்வதாக திருப்தி அடைந்தார்.
1996ல் நிறுவனத்தை விற்றவர், வாழ்நாளில் தான் சம்பாதிப்போம் என நினைப்பதை விட அதிக பணம் பெற்றார். அவர் ஓய்வு பெற்றிருக்கலாம் என்றாலும், மாறாக இரண்டாவது நிறுவனம் துவக்கி, 1998ல் விற்றார். பின்னர், 1999ல் மூன்றாவது நிறுவனம் துவக்கினார். நான்காவதாக துவக்கிய நிறுவனத்தை 2006ல் பார்கோடு நிறுவனத்திடம் விற்றார். ஒவ்வொன்றும் மற்றொன்றை விட அதிக விலைக்கு விற்றார். அவற்றை சுய நிதியில் உருவாக்கியிருந்தார். ஒவ்வொன்றும் அவருக்கு மட்டும் புரியும் ஒன்றை உணர்த்தியது.
அவர் நிறுத்தியதற்கான காரணம், இனி நிறுவனம் துவங்க ஐடியா இல்லாமல் போனது அல்ல, மாறாக, பெரும்பாலான செல்வந்தர்கள் எடுக்க நினைக்காத முடிவை அவர் மேற்கொண்டது தான்.
”ஒரு கட்டத்தில் இவை எல்லாவற்றையும் நீங்கள் செலவிடப்போவதில்லை என்று உணர்கிறீர்கள்,” என்று கூறுபவர், “ பணத்தின் நோக்கம் என்ன? நல்ல வாழ்க்கை என மக்கள் சொல்கின்றனர். ஆனால் அதற்கு எவ்வளவு தேவை? இறுதியாக பார்த்தால் பணம் இல்லை பதில், உங்கள் நேரம் என்பது தான் பதில். வாழ்க்கையில் உங்களிடம் இருப்பது நேரம் தான்,” என்கிறார்.
அவர் போதிய எண்ணிக்கையை அடைந்துவிட்டதால், அதன் பின்னர் எல்லாமும் கூடுதல் தான் என நினைத்தார்.
நேரம், திறமை, பொக்கிஷம்
இந்த இடத்தில் தான் எனது நேர்காணல் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்தது. நன்கொடை அளிப்பது என்பது, பணத்தை அளிப்பது, கசோலை எழுதுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இவரோ வேறு மாதிரி யோசிக்க செய்கிறார். நேரம், திறமை, பொக்கிஷம். பெரும்பாலானோர் பணத்தில் (பொக்கிஷம்) கவனம் செலுத்துகின்றனர். பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என நினைக்கின்றனர். ஆனால் பணம் என்பது கடைசி தேவை. முதல் கேள்வி உங்களிடம் நேரம் இருக்கிறதா என்பது தான்.
அவர் அதிக அளவிலான நேரத்தை செலவிடுகிறார். வீடியோ சந்திப்பு அல்லது ஆலோசனை குழு கூட்டம் போன்றவை அல்ல, விமானத்தில் பயணம் செய்து, நேரில் தோன்றி, மாணவர்கள், பேராசிரியர்களுடன் பேசி, அவர்கள் தேவையை புரிந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். சிவப்பு ஹூடியில் அவர் வந்து சேர்ந்தது பொருந்தா தோற்றம் அல்ல, இத்தகைய அம்சங்களை கண்டு கொள்ளாத ஒருவரின் முன்னுரிமைகளை உணர்த்தும் விஷயம்.
“உங்களால் லாபத்தை அளவிட முடியாது. நீங்கள் திருப்தியை அளவிடுகிறீர்கள். அதுவே நோக்கம் மற்றும் அர்த்தத்தை அளிக்கிறது,” என்கிறார்.
நன்கொடை மற்றும் பிறர்க்கு உதவும் தன்மை இடையே வேறுபாடு இருக்கிறது, என்கிறார். நன்கொடை என்பது தாக்கம் பற்றி கவலைப்படாமல் பணம் அளிப்பது. கோயில் உண்டியலில் பணம் போடுவது அல்லது யாசிப்பவருக்கு காசு கொடுப்பது போன்றது. இதனால் திருப்தி உண்டாகலாம் ஆனால், எதுவும் மாறாது. பிறருக்கு உதவும் தன்மை என்பது, சமூகத்தை நிரந்தரமாக மேம்படுத்தும் செயலாகும். அதற்கு, சிந்தனை, ஈடுபாடு, தொடர் கவனம் தேவை. மேலும் நேரம் தேவை.
அவரது முதல் திட்டம் தற்செயலாக நிகழ்ந்தது. 2005 வாக்கில் அரவிந்தர் அசிரமத்திற்கு சென்றிருந்த போது, ஐஐடி மெட்ராசிற்கு சென்று, அதன் அப்போதைய இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்த போது பூபத் மற்றும் ஜோதி மேத்தா ஸ்கூல் ஆப் பயோசயின்சஸ் மற்றும் பயோ இஞ்சினியரிங் துவக்கும் எண்ணம் உண்டானது. அறக்கட்டளையின் முதல் முக்கிய செயல்பாடாக அமைந்தது. பேராசிரியர்கள் நியமித்து, உள்கட்டமைப்பை உண்டாக்கி, பட்டதாரிகளை தயார் செய்ய 10 ஆண்டுகள் ஆனது. ஆனால், அந்த மாணவர்கள் இது தங்கள் வாழ்க்கையை மாற்றியது என்று கூறிய போது, தான் ஏதோ முக்கியமாக செய்வதை உணர்ந்தார். மாணவர்களை மாற்றினால், குடும்பத்தை மாற்றினால், அவர்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
அதன் பிறகு, இந்த அறக்கட்டளை கவுகாத்தி, ரூர்கலா, பாலாகாடு ஐஐடிகளில் தரவு அறிவியல் மற்றும் ஐஐடி கான்பூர், ஐஐடி கவுகாத்தியில் ஆரோக்கிய அறிவியல் படிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் ஐஐடி இந்தூரில் நீடித்த தன்மையில் இந்தியாவின் முதல் பி.டெக் படிப்பு அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரிவு தொடர்பாக ஐஐடி இயக்குனர்களிடம் அவர் வலியுறுத்தி வருகிறார்.
2018ல் தரவு அறிவியல் மற்றும் ஏஐ பள்ளிகள் யோசனையை அவர் முன் வைத்தபோது யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், சாட்ஜிபிடி அறிமுகத்திற்கு பின் எல்லோரும் அதன் அருமையை உணர்ந்துள்ளனர். அமெரிக்க கல்வி சூழலில் நிகழ்பவற்றை அவர் ஆய்வு செய்வதால், முக்கிய போக்குகளை முன்னதாக உணர்கிறார்.
மாற்றத்திற்கான அவரது கோட்பாடு எளிதானது: அறிவுசார் மூலதனத்தில் முதலீடு செய்யும் நாடுகள் பொருளாதார வளத்தை உருவாக்குகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் பட்டதாரி மக்கள்தொகை. ஆனால், ஸ்டெம், மருத்துவம், இதழியல், மானுட கல்வியில் மேலும் பட்டதாரிகள் தேவை. இந்தியர்களில் 30 முதல் 40 சதவீதத்தினர் பட்டம் பெற்றால் இது வேறு நாடாக இருக்கும். இந்த அறக்கட்டளை 2031ல் 12,000 பட்டதாரிகளை இலக்காக கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கேள்விபட்டிராத சிறிய நகரங்களில் இருந்து உருவாவார்கள். அவர்களில் பலரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகளாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையும், அவர்கள் குடும்ப வாழ்க்கையும் மாறும்.
இந்தியா சீனாவை நெருங்க வேண்டியது பற்றி கேட்ட போது அவர் மென்மையாக மறுத்தார். கேப்மைண்டர் கோட்பாட்டில் நம்பிக்கை இருப்பாதாகக் கூறினார். ஸ்வீடன் புள்ளியியல் அறிஞர் ராஸ்லிங் உருவாக்கிய அமைப்பின் பெயர் கொண்ட கோட்பாடு இது. நாம் கவனிக்க மறுக்கும் விதங்களில் உலகம் மேம்பட்டு வருவதை இவர் உணர்த்தினார். அவரது மைய கருத்து, வறுமை என்பது நிலையானது அல்ல, ஆனால், ஏணி போன்றது. நாடுகள் இதில் கணிக்கக் கூடிய வழிகளில் ஏறுகின்றன.
ஒரு டாலர் சம்பாதிப்பவர் வெறும் காலில் நடக்கிறார் என்றால், 2 டாலர் சம்பாதிப்பவர் காலணி வாங்கலாம். 4 டாலர் எனில் சைக்கிள் வாங்கலாம். 8 டாலர் எனில் பைக் வாங்கலாம். இந்தியா இந்த ஏணியில் சில படிகளை ஏறியுள்ளது, தொடர்ந்து முன்னேறும் என்கிறார் மேத்தா. நமக்கான பாதை இருப்பதால் சீனாவுடன் ஒப்பீடு தேவையில்ல என்கிறார்.
“2000 ஆண்டில், ஏழை விவசாயி, 16 வயது மகளை படிப்பு அறிவு இல்லாமல் கல்யாணம் செய்து கொடுப்பார். இன்று மகள் படிக்க வேண்டும் என நினைக்கிறார். சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கிறது. முன்னேற்றம் அபாரமாக உள்ளது,” என்கிறார்.
அவரது வெற்றியை தந்தை காண முடிந்ததா என கேட்டேன். மேத்தாவின் கண்கள் பனித்தன. முதல் நிறுவனத்தை விற்ற பின் குடும்பத்தை ஹவாய் அழைத்துச்சென்றார். தன் பங்குகளை விற்றுவிட்டாலும் பணம் கையில் வரவில்லை. அப்போது தரகர் அழைத்து பணம் கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டது என்று கூறினார்.
”இதை தந்தையிடம் கூறியதும் அவர் முகத்தில் நிம்மதியை கண்டேன்,” என்று கூறியவர், அப்போது இந்த நாட்டில் சாதித்துவிட்டேன் என நினைத்தேன் என்கிறார். வீடு மற்றும் கார் கடனைகளை அடைத்ததோடு சகோதர, சகோதரிகளையும் பார்த்துக்கொண்டார்.
இது உயரம் தொட்டதாக உணர வைத்திருக்கும், என்று கூறிய போது ஆமாம் என்றார். ஆனால் தொழில்முனைவு என்பது நீங்கள் அளவிடும் அளவுகோள் சார்ந்தது என்றார். உங்கள் அளவுகோள் பணமா? அல்லது தாக்கமா? கிளேடன் கிறிஸ்டென்சன் எழுதிய ’ஹவ் வில் யூ மெஷர் யுவர் லைப்’ எனும் புத்தகத்தை அவர் பரிந்துரைக்கிறார். நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள் என்பது கேள்வி அல்ல, சாதனைக்கான உங்கள் அளவுகோள் என்ன என்பது முக்கியம் என்கிறார்.
என்னுடைய எண்ணிக்கை மற்றும் செல்வ வளம் இல்லாமல் கொடுப்பது பற்றி யோசித்தவாறு புறப்பட்டேன். இந்த கேள்வியை மேத்தா மாற்றி கேட்க வைத்துள்ளார். என்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பது அல்ல, எவ்வளவு நேரம் உள்ளது மற்றும் அந்த நேரத்தை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் எங்கே செலவிட விரும்புகிறேன், என அவர் யோசிக்க வைத்திருக்கிறார்.
ஆங்கிலத்தில்: ஜர்ஷத் என்.கே, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

