தனிநபர் வருமானம் ரூ.11.46 லட்சம்; இந்தியாவின் புது பணக்கார மாவட்டம் எது தெரியுமா?
இந்தியாவின் புதிய பெரிய பணக்கார மாவட்டமாக தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் சராசரியாக ஆண்டிற்கு ரூ.11.46 லட்சம் சம்பாதிப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்தியாவின் பணக்கார மாவட்டங்கள் என நினைத்தாலே, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்கள்தான் நம் நினைவிற்கு வரும். அதற்குக் காரணம் உயர்ந்த கட்டிடங்கள், தொழில் வாய்ப்புகள், மக்களின் வாழ்க்கைமுறை எனப் பலவற்றைச் சொல்லலாம். முந்தைய ஆய்வுகளும் இந்த நகரங்களைத்தான் பணக்கார மாவட்டங்களாக பட்டியலிட்டன.
ஆனால், 2024-25ம் ஆண்டிற்காக நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வொன்று, புதிய மாவட்டம் ஒன்றை இந்தியாவின் பணக்கார மாவட்டமாக அடையாளம் கண்டுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களை பின்னுக்குத் தள்ளி, பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரும், சராசரியாக ஆண்டிற்கு ரூ. 11.46 லட்சம் சம்பாதிக்கிறார்களாம்.
கேட்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறதல்ல.. நம்மை இப்படி ஆச்சர்யப்பட வைத்த மாவட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து தனியாக புது மாநிலமாக உருவான, தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி தான்.
இந்தியாவிலேயே பணக்கார மாவட்டமாக குறிப்பிடப்படும் அளவிற்கு அப்படி அங்க என்னென்ன மாதிரியான வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளன என விரிவாகப் பார்க்கலாம்...

இந்தியாவின் பணக்கார மாவட்டம்
தெலுங்கானாவில் அமைந்துள்ள இந்த ரங்காரெட்டி மாவட்டத்தின் இந்த அசாதாரண வெற்றிக்கு, அதன் தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வலுவான முதலீட்டுச் சூழல் வளர்ச்சியே காரணம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். ஏனென்றால், இந்த மாவட்டத்தில் மற்ற முக்கிய நகரங்களைப் போன்று முக்கிய தொழில்நுட்ப மையங்களும், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் பிரமாண்டமான வளாகங்களும் அமைந்துள்ளன. இவை இம்மாவட்டத்தின் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. அதோடு, இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மற்றும் புத்தாக்க மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
ஆசியாவின் மிகப்பெரிய உயிரித்தொழில்நுட்பக் குழுமமாகக் கருதப்படும் ஜீனோம் வேலியின் ஆற்றலும் இம்மாவட்டத்திற்கு உண்டு. அதனாலேயே உயிரித்தொழில்நுட்பம் மற்றும் மருந்து ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை இது ஈர்த்துள்ளது.

செழிப்பான ஸ்டார்ட் அப் மையம்
புதிய வணிகங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் வருமான ஆதாரங்களை தொடர்ந்து உருவாக்கும் சூழலமைப்பைக் கொண்டுள்ளதால், ரங்காரெட்டி மாவட்டம் ஒரு செழிப்பான ஸ்டார்ட் அப் மையமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நிபுணர்களின் கருத்துப்படி, தெலுங்கானா அரசின் வணிக-நட்பு கொள்கைகள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, விரிவடைந்து வரும் மெட்ரோ போக்குவரத்து வசதி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவை இம்மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
அதேபோல், தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முதலீடுகளால், இந்தப் பட்டியலில் நீண்ட காலத்திற்கு ரங்காரெட்டி மாவட்டம் தன்னை, மிகச் சக்தி வாய்ந்த பொருளாதார மையமாக நிலை நிறுத்திக் கொள்ளும் என்பது நிபுணர்களின் கருத்து.
இம்மாவட்டத்தின் விரைவான வளர்ச்சி, சமச்சீரான பிராந்திய மேம்பாட்டிற்கான ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தெலங்கானாவின் பங்களிப்பை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மற்ற 4 பணக்கார மாவட்டங்கள்:
பொருளாதார ஆய்வின் அடிப்படையில், முதலிடத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு உள்ளது. முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் ஹரியானாவில் உள்ள குருகிராமும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை புறநகரும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளது.
திரைப்படங்களில் காட்டுவது போல, திடீரென இந்தியாவின் பணக்கார மாவட்டங்கள் பட்டியலில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஓவர் நைட்டில் ஊடகங்களிலும், சமூகவலைதளப் பக்கங்களிலும் ஹீரோவாகி விட்டது ரங்காரெட்டி மாவட்டம்.
அதோடு, நாட்டின் பாரம்பரிய நிதி மையங்களுக்குப் போட்டியாக அல்லது அவற்றை விஞ்சும் வகையில்கூட, புதிய புத்தாக்க மையங்கள் உருவெடுத்து வருவதை ரங்காரெட்டி மாவட்டத்தின் இந்த வெற்றி சுட்டிக்காட்டுகிறது. இது மாறிவரும் பொருளாதார வரைபடத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

