'புதிய டி2சி பிராண்டுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' – Zepto இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா!
பாரம்பரியமாக விற்பனை செய்யப்படும் நெய், எண்ணெய் போன்ற பிரிவுகளில்கூட புதிய பிராண்டுகளின் விற்பனை அமோகமாக இருப்பதாக, Techsparks உரையாடலில் தெரிவித்தார் ஜெப்டோ இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா.
Zepto தளத்தில் பழங்கள், காய்கறிகள், கோதுமை மாவு, பருப்பு வகைகள், மசாலாக்கள், என நாம் அன்றாடம் பயன்படுத்தும் வழக்கமான பொருட்களின் விற்பனையே அதிகமிருக்கும்.
விற்பனையாகும் பொருட்கள் வழக்கமானவை என்றாலும் விற்பனை செய்யும் புதிய டி2சி பிராண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார் ஜெப்டோ இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா. டெக்ஸ்பார்க்ஸ் 2025 நிகழ்வில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மாவுடனான உரையாடலில் இதை தெரிவித்துள்ளார்.
“பாரம்பரியமாக விற்பனை செய்யப்படும் நெய், எண்ணெய் போன்ற பிரிவுகளில்கூட புதிய பிராண்டுகளின் விற்பனை அமோகமாக இருக்கின்றன. நாங்களும் இந்த பிராண்டுகளை ஊக்குவித்து வருகிறோம்,” என்றார் வோஹ்ரா.
பொருட்கள் பழமையானதாக இருந்தாலும், மக்களின் மாறி வரும் தேவைகளைப் புரிந்துகொண்டு புதுமையான முறையில் தீர்வளிக்கும் தொழில்முனைவோர் வெற்றியடைகிறார்கள் என்கிற கருத்தை அவர் வலியுறுத்தினார். ஸ்கின்கேர், ஆல்கஹால் அல்லாத கலவைகள் போன்ற பிரிவுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

டி2சி பிராண்டுகள் சரியான வாடிக்கையாளர்களை சென்றடையத் தேவையான உதவிகளை ஜெப்டோ செய்வதாக வோஹ்ரா சுட்டிக்காட்டினார்.
“ஜெப்டோ ஆப் ஓபன் செய்து, ஹோம்பேஜ் ஸ்கிரால் செய்து பார்த்தால் ஏராளமான டி2சி பிராண்டுகள் சிறப்பாக செயல்படுவதை நீங்களே பார்க்கலாம்,” என்றார்.
பரவலாக்கப்பட்ட விநியோகம்
நுகர்வோர் அதிகம் வாங்கும் எஃப்எம்சிஜி வணிகத்தைப் பொறுத்தவரை, நிறைய இடங்களில் விநியோகம் செய்யும்போது விற்பனை சிறப்பாக இருக்கும் என்று காலம் காலமாக நம்பப்பட்டு வந்தது. குறைவான முதலீட்டுடன் புதிதாக வணிகம் தொடங்குவோருக்கு இது சாத்தியமில்லை.
தற்போது இந்த சிக்கல் இல்லை என்று குறிப்பிடும் வோஹ்ரா, புதிய பிராண்டுகள் மின்வணிக தளங்கள் மூலமாக நாடு முழுவதும் உள்ள நுகர்வோரை சென்றடையமுடியும் என்கிறார். மேலும் நுகர்வோரின் செலவிடும் திறனும் அதிகரிப்பதை சுட்டிக்காட்டினார்.
“இந்திய நுகர்வோர் அதிகம் செலவழிக்கமாட்டார்கள் என்கிற கண்ணோட்டம் மக்களிடையே இருக்கிறது. ஆனால் இதற்கு நேர்மாறான அணுகுமுறையை நாங்கள் பார்க்கிறோம். தரமான, சரியான பொருட்களாக இருக்கும் பட்சத்தில், அதற்காக செலவிட்டு, அதை வாங்கி பயன்படுத்திப் பார்க்க இன்றைய நுகர்வோர் தயாராக இருக்கின்றனர்,” என்றார்.
ஏராளமான பிரிவுகள்
இனியும் ஜெப்டோ தொடர்ந்து டார்க் ஸ்டோர்கள் மூலமாகவே சேவையளிக்கும் என்றாலும் ஜெப்டோ வழங்கும் பொருட்களின் வகைகள், மக்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து, விரைவாக மெருகேறி வரும், என்கிறார் வோஹ்ரா.
”உதாரணத்திற்கு ஓராண்டிற்கு முன்பு ஜெப்டோவில் சாக்ஸ், உள்ளாடைகள் போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே அப்பாரல் & ஃபேஷன் பிரிவின்கீழ் விற்பனை செய்யப்பட்டன. இன்று விற்பனையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிரிவுகளில் இதுவும் ஒன்று,” என்கிறார்.
அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்,
“அடுத்த முக்கிய உதாரணமாக ஃபார்மசியை குறிப்பிடலாம். புதிய பிரிவாக இருப்பினும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது,” என்றார்.
மான்யவர் குர்த்தா, லிவைஸ் ஜீன்ஸ், ரீபாக் ஷூ ஆகியவற்றை வெறும் 10 நிமிடங்களில் டெலிவர் செய்யும் அளவிற்கு விநியோக சங்கிலி திறம்பட கட்டமைக்கப்பட்டிருப்பதாக வோஹ்ரா தெரிக்கிறார்.
“பொருட்களின் இருப்பு முறையாக நிர்வகிக்கப்படுகிறது. பொருத்தமில்லாதவற்றை வெறும் 10 நிமிடங்களில் திரும்பப்பெறும் அளவிற்கு நிர்வகிக்கிறோம். இவை அனைத்தும் 12 மாதங்களில் நடந்துள்ளது,” என்று குறிப்பிடும் வோஹ்ரா அனைத்து பிரிவுகளுக்கும் இதே அணுகுமுறை பொருந்தும் என்கிறார்.

“நாங்கள் எதையும் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. 20 வருடங்களுக்கு முன்பே ஜெஃப் பெசோஸ் கண்டிபிடித்துவிட்டார். விரைவான டெலிவரி, தேர்வு செய்ய ஏராளமான வகைகள், குறைந்த விலை ஆகியவையே எப்போதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்,” என்றார்.
தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தையும் ஜெப்டோ, தானே வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இதுவே அதன் வேகமாக விரிவாக்கத்திற்கு முக்கியக் காரணம்.
”ஒவ்வொரு பிரிவும் தனித்துவமானது. எங்கள் தொழில்நுட்ப அம்சங்களை நாங்களே முழுமையாக உருவாக்கி, கட்டுப்படுத்துவதால் புதிய பிரிவுகளை வேகமாக அறிமுகப்படுத்தி, எங்களால் வளர்ச்சியடைய முடிகிறது,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ஷிவானி வெர்மா | தமிழில்: ஸ்ரீவித்யா

