முன் அறிவிப்பின்றி பல பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்- பயனர்கள் அதிருப்தி!
திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணி (இந்திய நேரம்) முதல், எந்த முன் அறிவிப்பு இல்லாமல், 'மதிப்பாய்வு’ என்று கூறி 24 மணி நேரத்திற்கு பல வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டது.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான உடனடி செய்திப் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள சில பயனர்களின் கணக்குகளை திடீரென 24 மணி நேரத்திற்கு ‘மதிப்பாய்வில்’ (Under Review) வைத்ததுடன், அந்தக் காலப்பகுதியில் செயலியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியாத வகையில் தற்காலிகமாக முடக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணி (இந்திய நேரம்) முதல், எந்த முன் அறிவிப்பும் இன்றி இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
"எங்கள் சேவையை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பவர்களைத் தடுக்கவும், பிற பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். சில நேரங்களில் தவறுதலாக சில கணக்குகள் பாதிக்கப்படலாம். அப்படி நடந்தால், அதை விரைவாகச் சரிசெய்து, பயனர்கள் மீண்டும் உரையாடலைத் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்கிறோம்," என்றார்.
பாதிக்கப்பட்ட பயனர்களின் திரையில்,
"கணக்கு மதிப்பாய்வில் உள்ளது. கோரிக்கை செய்யப்பட்ட தேதி: 3 ஆகஸ்ட் 2026. உங்கள் கணக்கின் செயல்பாடு மற்றும் சாதனத் தகவல்கள், எங்கள் சேவை விதிமுறைகளுக்கு இணங்க உள்ளதா என்பதை உறுதிப்படுத்த பரிசோதிக்கப்படுகின்றன. பொதுவாக 24 மணி நேரத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும்," என்ற அறிவிப்பு காட்டப்பட்டது.
அதன் கீழ், "வாட்ஸ்அப்பை பொறுப்புடன் பயன்படுத்துவது எப்படி? வழிகாட்டுதலைப் பார்க்கவும்" மற்றும் "திருடப்பட்ட தொலைபேசிகள் மற்றும் கணக்குகள் பற்றி" என்ற தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கவலையைப் பகிர்ந்தனர்.
ஒரு பயனர்,
"எந்த விளக்கமும் இல்லாமல் எனது வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளேன். ஆனால், 'பொதுவாக 24 மணி நேரத்திற்குள் மதிப்பாய்வு செய்யப்படும்' என்ற ஒரே தகவல்தான் காட்டப்படுகிறது. தயவுசெய்து உடனடியாக உதவுங்கள்," என்று பதிவிட்டார்.
சலோனி என்ற பெயரில் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட மற்றொரு பயனர், "எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எனது வாட்ஸ்அப் கணக்கு திடீரென முடக்கப்பட்டது. நான் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் செயலியைத்தான் பயன்படுத்துகிறேன். எனது வேலை முழுவதும் வாட்ஸ்அப்பைச் சார்ந்துள்ளது. தயவுசெய்து உதவுங்கள். இது முற்றிலும் தேவையற்ற நடவடிக்கை," என்று தெரிவித்துள்ளார்.

