SharChat நிறுவனம் MX Takatak-ஐ $700 மில்லியனுக்கு வாங்கியது: Moj உடன் இணைக்க திட்டம்!
MX டகாடக் செயலியை 700 மில்லியன் டாலர் கொடுத்து ஷேர் சாட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் வாங்கியுள்ளது.
MX Takatak செயலியை 700 மில்லியன் டாலர் கொடுத்து ShareChat நிறுவனத்தின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் வாங்கியுள்ளது.
இந்தியாவில் டிக்-டாக் அடைந்த அசுர வளர்ச்சியை யாருமே மறந்திருக்க முடியாது. உலகின் முன்னணி சோசியல் மீடியாவான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கூட இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட டிக்-டாக்கால் கடும் பின்னடைவை சந்தித்தன. எதிர்பாராதவிதமாக மத்திய அரசு சீன செயலிகளை தடை செய்ததை அடுத்து, டிக்டாக் போல் ஷார்ட் வீடியோக்களை பதிவேற்றும் பிற ஆப்கள் பக்கம் இந்தியர்கள் கவனம் திரும்பியது.

அப்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற முன்னணி சோசியல் மீடியாக்களில் கூட ஷார்ட் பார்மெட் வீடியோக்களை பதிவேற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், டிக்டாக் செயலில் இருந்தது போல் டூயட், ஸ்லோமோஷன் என பல வித்தியாசமான சிறப்பம்சங்கள் இல்லாமல் போனது, ஆரம்பக் கட்டத்தில் அவைகளை தோல்வி அடையச் செய்தது.
ஷேர் சாட்டின் தாய் நிறுவனம் தந்த மோஜ்:
சீன ஆப்’கள் தடை செய்யப்பட்டது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மற்றொன்று ‘ஹலோ ஆப்’. இதில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை வைத்திருந்தவர்கள் எல்லாம் ஒரேநாளில் ஒன்றும் இல்லாமல் போக, இந்தியாவின் கண்டுபிடிப்பான ஷேர் சாட் பக்கம் திரும்பியது.
இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷேர் சாட்டின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் ஷார்ட் ஃபார்மெட் வீடியோக்களை பகிரும் வகையில் மோஜ் (Moj) என்ற ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

2020ம் ஆண்டு ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி ஓராண்டுக்குள்ளாகவே 160 மில்லியன் பேரால் டவுன்லோடு செய்யப்பட்டு, இன்ஸ்டாகிராமிற்கு டப் கொடுக்கும் ஆப் ஆக மாறியது. தற்போது 15 இந்திய மொழிகளில் 160 மில்லியன் மாதந்திர ஆக்டிவ் பயனர்களையும், 50 மில்லியனுக்கும் அதிகமான ஷார்ட் வீடியோ படைப்பாளர்களையும் கொண்டுள்ளது.
2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட மொஹல்லா டெக் இதுவரை 1.18 பில்லியன் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளது. 2021ம் ஆண்டின் முடிவில், ஜி சீரிஸ் மதிப்பிட்டின் படி 3.7 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மோஜ் உடன் இணையும் டகாடக்:
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் மோஜ் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், மொஹல்லா டெக் மற்றொரு சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இந்தியப் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு ஷார்ட் ஃபார்மெட் வீடியோக்களை பகிரும் ஆப் ஆன MX டகாடக் செயலியை மொஹல்லா டெக் நிறுவனம் வாங்கியுள்ளது.
தனது பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மோஜ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. MX டகாடக் ஆப், டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தைச் சார்ந்த MX மீடியாவைச் சேர்ந்தது ஆகும்.
700 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5,250 கோடியை கொடுத்து டகாடக்கை விலைக்கு வாங்கியுள்ளது மொஹல்லா டெக் நிறுவனம்.

ஷேர்சாட் மற்றும் மோஜ் நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனரான அங்குஷ் சச்தேவா கூறுகையில்,
“வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியாவில் மிகப்பெரிய உள்ளடக்கத்தை உருவாக்கும் முன்னோடியாக ஷேர் சாட் இருந்து வருகிறது. MX டகாடக் மற்றொரு பிரபலமான தளமாகும். இந்த இணைப்பு ஷார்ட் வீடியோ உலகில் எங்கள் வளர்ச்சியை மேலும் உறுதி செய்வதற்கும், இந்தியா முழுவதும் உள்ள மிகப்பெரிய பயனர்களின் சமூகத்துடன் இணைந்து மோஜ் மூலமாக ஒரிஜினல் கன்டேண்ட்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பு மூலமாக இனி MX மீடியா மற்றும் அதன் பங்தாரர்கள் ஷேர் சாட் நிறுவனத்தின் பங்குதாரர்களாக மாற உள்ளனர். MX டகாடக் மற்றும் மோஜ் இணைப்பு மூலமாக 100 மில்லியன் கிரியேட்டர்கள் மற்றும் 300 மில்லியன் மாதாந்திர யூஸர்கள் கிடைக்க உள்ளது. மோஜ் உடன் இணைக்கப்பட்ட MX டகாடக் ஷேர் சாட் நிறுவனத்தின் கீழ் இயங்க உள்ளது.

