சிம்பிள் எனர்ஜியின் புதிய ஜென்–2 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
நிறுவனத்தின் தகவலின்படி, சிம்பிள் அல்ட்ரா மாடல் ஒரே சார்ஜில் 400 கிலோமீட்டர் (IDC ரேஞ்ச்) வரை பயணிக்க முடியும். இதன் மூலம், இந்திய சந்தையில் கிடைக்கும் மிக நீண்ட தூர மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி திங்கள்கிழமை தனது ஜென்–2 தலைமுறை மாடல்களாக சிம்பிள் ஒன், சிம்பிள் ஒன்S மற்றும் நீண்ட தூர பயண வசதியுடன் கூடிய சிம்பிள் அல்ட்ரா மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது.
நிறுவனத்தின் தகவலின்படி, சிம்பிள் அல்ட்ரா மாடல் ஒரே சார்ஜில் 400 கிலோமீட்டர் (IDC ரேஞ்ச்) வரை பயணிக்க முடியும். இதன் மூலம், இந்திய சந்தையில் கிடைக்கும் மிக நீண்ட தூர மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இதுகுறித்து YourStory-க்கு பேட்டியளித்த சிம்பிள் எனர்ஜியின் இணை நிறுவனர் ஷ்ரேஷ்த் மிஷ்ரா,
“மதிப்பை முக்கியமாகக் கருதும் வாடிக்கையாளர்களை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். அதனால், ரேஞ்ச், செயல்திறன், பயன்பாடு, வடிவமைப்பு போன்ற அம்சங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை செய்துள்ளோம். இதனால் அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட முடியும்,” என தெரிவித்தார்.
மேலும், நிறுவனத்தின் நான்கு ஸ்கூட்டர் மாடல்களிலும் மோட்டார் மற்றும் பேட்டரிக்கு ஆயுள் முழுவதற்குமான உத்தரவாதம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிய நில கனிமங்கள் (Rare-earth) இல்லாத மோட்டார்களை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்களில் ஒன்றான சிம்பிள் எனர்ஜி, மூலப்பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, தனது விநியோக சங்கிலியை பாதுகாக்கும் வகையில் புதிய முடிவுகளை எடுத்து வருவதாக மிஷ்ரா கூறினார்.
“மோட்டார் மட்டுமின்றி, பேட்டரி, BMS உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதன் மூலம் செலவைக் குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்க விரும்புகிறோம்,” என்றார்.
2025ஆம் ஆண்டில் சுமார் 6,038 மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்த சிம்பிள் எனர்ஜி, புதிய மாடல்கள் அறிமுகமாகுவதன் மூலம் 2026ஆம் ஆண்டில் விற்பனை கணிசமாக உயரும், என எதிர்பார்க்கிறது.
FY26ஆம் ஆண்டில் விற்பனை அதிகரிப்பதன் மூலம் நிறுவனத்தின் வருவாய் மேலும் உயரும் என்றும், FY26 முடிவுக்குள் EBITDA நேர்மறை நிலையை அடையும் என்றும், 2027ஆம் ஆண்டு Q2–Q3 காலப்பகுதியில் IPOக்கு தயாராகும் முன் முழுமையான லாப நிலையை எட்ட திட்டமிட்டுள்ளதாக மிஷ்ரா தெரிவித்தார்.
இதனுடன், 2026 மார்ச் மாதத்துக்குள் 150 டீலர்ஷிப்புகள் மற்றும் 200 சேவை மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொகுப்பு: முத்துகுமார்
