‘இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் சூழல் 450க்கும் மேற்பட்ட நிறுவனங்களாக வளர்ச்சி’ - IN-SPACe இயக்குநர்
இந்தியாவின் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் தனியார் நிறுவனங்களுக்கான வலுவான சூழலை உருவாக்கியுள்ளதாகவும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்த விண்வெளி ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை தற்போது 450-ஐத் தாண்டியுள்ளதாகவும் ஜெயின் தெரிவித்தார்.
இந்தியாவின் விண்வெளி ஸ்டார்ட்அப் சூழல் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலிருந்து 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையமான IN-SPACe-ன் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். கொள்கை சீர்திருத்தங்கள் துறையை மாற்றியமைத்துள்ள நிலையில், முதலீடுகளும் வேகமெடுத்து வருவதாக அவர் கூறினார்.
IAFI ஏற்பாடு செய்த விண்வெளிக் கொள்கை 2026 மாநாட்டில் பேசிய IN-SPACe-ன் திட்ட மேலாண்மை மற்றும் அங்கீகார இயக்குனரக இயக்குநர் பி.கே. ஜெயின், மத்திய அரசு விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களை அறிவித்ததிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த முயற்சிகள் ஒழுங்குமுறை நடைமுறைகளில் தெளிவையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் தனியார் நிறுவனங்களுக்கான வலுவான சூழலை உருவாக்கியுள்ளதாகவும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்த விண்வெளி ஸ்டார்ட்அப்’களின் எண்ணிக்கை தற்போது 450-ஐ தாண்டியுள்ளதாகவும் ஜெயின் தெரிவித்தார்.
“ஒட்டுமொத்த முயற்சிகள் இந்த வேகத்தை உருவாக்கியுள்ளன. இப்போது நாம் புறப்படத் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் விண்வெளித் துறையில் வசதிகள் மற்றும் அங்கீகாரத்துக்காக IN-SPACe-க்கு 800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ஜெயின் தெரிவித்தார். இதில் சுமார் 113 அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை, 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் தனியார் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் முதல் விண்வெளி ஸ்டார்ட்அப் யூனிகார்னாக ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ உருவெடுத்துள்ளதாகவும், அந்நிறுவனம் தனியாரால் உருவாக்கப்பட்ட ஏவுவாகனத்தின் முதல் ஏவுதலை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாகவும் ஜெயின் தெரிவித்தார். இந்நிறுவனத்தின் Vikram-1 ராக்கெட் சமீபத்தில் வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்த இந்தியாவின் முதல் தனியார் முறையில் உருவாக்கப்பட்ட ராக்கெட் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
முதலீட்டைப் பொறுத்தவரை, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப்கள் சுமார் 380 முதல் 390 மில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீட்டை ஈர்த்துள்ளதாக ஜெயின் தெரிவித்தார். நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 150 முதல் 160 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு திரட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு ஸ்டார்ட்அப்களை உலகளாவிய முதலீட்டாளர்களுடன் இணைக்கும் IN-SPACe-ன் முயற்சிகளும் இதற்கு உதவியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், வளர்ந்து வரும் விண்வெளி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் 120 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெஞ்சர் கேபிடல் நிதி மற்றும் Technology Adoption Fund போன்ற திட்டங்களையும் ஜெயின் சுட்டிக்காட்டினார்.
