ஸ்மார்ட் டிவியில் ‘அரட்டை' செயலி: இனி வீடியோ கால், மீட்டிங்கை டிவியில் செய்யலாம் - ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு!
இனி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியிலேயே அரட்டை செயலியைப் பயன்படுத்தி வீடியோ கால் பேசவும், மீட்டிங்கில் பங்கேற்கவும் முடியும்.
ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, இந்த புத்தாண்டில் 'அரட்டை' (Arattai) செயலி பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இனி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியிலேயே (Android TV) அரட்டை செயலியைப் பயன்படுத்தி வீடியோ கால் பேசவும், மீட்டிங்கில் பங்கேற்கவும் முடியும்.
இந்த புதிய வசதி குறித்த முழு விவரங்கள், இன்ஸ்டால் செய்யும் முறை மற்றும் சிறப்பம்சங்கள் விவரம்:

Image: Ishan Patra
சிறப்பம்சங்கள் என்ன? (Key Features)
பெரிய திரையில் வீடியோ கால்: இனி சிறிய மொபைல் திரையில் மட்டுமல்ல, உங்கள் வீட்டுப் பெரிய டிவி திரையிலும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசலாம்.
மீட்டிங் வசதிகள்: அலுவலக மீட்டிங்குகளை உருவாக்கவும் திட்டமிடவும் (Schedule) மற்றும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மீட்டிங்கில் இணையவும் முடியும்.
ரிமோட் கன்ட்ரோல்: டிவி ரிமோட் மூலமாகவே ஆடியோவை மியூட் செய்வது, வீடியோவை ஆன்/ஆஃப் செய்வது போன்றவற்றை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.
பதிவு செய்யப்பட்ட மீட்டிங்: உங்கள் மீட்டிங் ரெக்கார்டிங்குகளை டிவியிலேயே பார்க்கும் வசதியும் உள்ளது.
தேவைகள் என்ன? (Requirements)
இந்தச் செயலியை உங்கள் டிவியில் பயன்படுத்த இரண்டு முக்கியத் தேவைகள் உள்ளன:
உங்கள் டிவி Android 7 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்குதளத்தில் (OS) இயங்க வேண்டும்.
பெரும்பாலான டிவிகளில் கேமரா இருக்காது என்பதால், USB வெப்கேமரா (Webcam) மற்றும் மைக்ரோஃபோனை டிவியுடன் இணைக்க வேண்டும்.
டிவியில் இன்ஸ்டால் செய்வது எப்படி?:
உங்கள் ஸ்மார்ட் டிவியில் அரட்டை செயலியைப் பயன்படுத்தக் கீழே உள்ள படிநிலைகளைப் பின்பற்றவும்:
- கூகுள் ப்ளே ஸ்டோர்: உங்கள் டிவியை ஆன் செய்து, Google Play Store-க்குச் செல்லவும்.
- தேடல்: அதில் 'Arattai' என டைப் செய்து தேடவும். அரட்டை செயலி திரையில் தோன்றும்.
- இன்ஸ்டால்: 'Install' பட்டனை அழுத்தவும். செயலி பதிவிறக்கம் ஆகிவிடும்.
- ஓபன் செய்யவும்: இன்ஸ்டால் ஆனதும் செயலியைத் திறக்கவும். திரையில் ஒரு QR கோட் (QR Code) தோன்றும்.

மொபைல் இணைப்பு: இப்போது உங்கள் மொபைலில் உள்ள அரட்டை செயலியைத் திறக்கவும். அதில் Settings > Devices பகுதிக்குச் சென்று, டிவியில் தெரியும் QR கோடை ஸ்கேன் செய்யவும்.
மாற்று வழி: அல்லது உங்கள் மொபைல் பிரவுசரில் www.arattai.in/tv என்ற இணையதளத்திற்குச் சென்று, டிவியில் தெரியும் கோடை உள்ளிட்டு 'Verify' செய்யலாம்.
அவ்வளவுதான்! இப்போது உங்கள் ஸ்மார்ட் டிவியில் அரட்டை கணக்கு இணைக்கப்பட்டுவிடும். இனி பெரிய திரையில் உங்கள் மீட்டிங் மற்றும் வீடியோ கால்களைத் தொடரலாம்.
ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் (X) பதிவில் இதுகுறித்து பதிவிடுகையில்,
"இது வெறும் ஆரம்பம் தான், 2026-ல் இன்னும் பல புதிய வசதிகள் வரவுள்ளன," எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் போன்ற வெளிநாட்டுச் செயலிகளுக்குப் போட்டியாக, நம்ம ஊரு செயலியான 'அரட்டை' டிவியிலும் களம் இறங்கியிருப்பது தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

