ரூ.100 கோடி முதலீட்டு இலக்குடன் மீண்டும் களமிறங்கும் ‘ஸ்டார்ட்-அப் சிங்கம் சீசன் 2’
தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஸ்டார்ட்அப் மற்றும் முதலீட்டுத் தளமான 'ஸ்டார்ட்அப் சிங்கம்', தனது இரண்டாவது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 25ம் தேதி முதல் ஸ்டார் விஜய், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஸ்டார்ட்அப் மற்றும் முதலீட்டுத் தளமான 'ஸ்டார்ட்அப் சிங்கம்', தனது இரண்டாவது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 25 ஆம் தேதி முதல் ஸ்டார் விஜய், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாக உள்ளது.
சீசன் 2-ல், அடுத்த 6 மாதங்களில் 26 அத்தியாயங்கள் அதாவது, எபிசோடுகள் மூலம் 75-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இது தமிழ்நாட்டின் சிறந்த புதிய நிறுவனங்களைத் தொடர்ந்து அடையாளம் காணும் ஒரு முக்கிய களமாக அமையும். இந்த நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாகிறது.

ஸ்டார்ட்-அப் சிங்கம் சீசன் 2
ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் 2, வழக்கமான மேடைப் பேச்சுகளை தாண்டி, உண்மையான தொழில் வளர்ச்சியை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இடையே ஆழமான தொடர்பை ஏற்படுத்துதல், நிறுவனங்களைச் சரியாக ஆய்வு செய்ய உதவுதல் மற்றும் அர்த்தமுள்ள தொழில் ஒப்பந்தங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்த உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
ரூ.100 கோடிக்கும் அதிகமான முதலீட்டு இலக்கு: தொழில்முனைவோருக்காக சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு மூலதனத்தை இலக்காகக் கொண்டுள்ளது.
75க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்: ஆரம்ப நிலை மற்றும் வளர்ச்சிப் பாதையில் உள்ள 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
26 எபிசோடுகள்: அடுத்த 6 மாதங்களில் மொத்தம் 26 எபிசோடுகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 25-க்கும் மேற்பட்ட நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தனிநபர் முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
’இது கனவுக்கான கர்ஜனை’ என்ற மையக்கருத்துடன் தொடங்கப்படும் இந்த சீசன் 2, தமிழ்நாட்டிலிருந்து தேசிய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் செல்ல விரும்பும் தொழில்முனைவோரின் நம்பிக்கையையும் லட்சியத்தையும் வெளிப்படுத்த இருக்கிறது.
'தி ரோர் டேபிள்' என்ற பிரத்யேக நிகழ்வில் இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சீசன் 1-ல் பங்கேற்ற நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சீசன் 2-ன் தலைமைக் குழுவினர் கலந்துகொண்டனர்.
தலைமை மற்றும் வழிகாட்டுதல்
ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் 2, நிறுவனர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல் அளிப்பது, நிதி திரட்ட அவர்களை தயார்படுத்துவது மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றில் குமார் வேம்பு, ஹேமச்சந்திரன், பாலச்சந்தர் மற்றும் அருண் ஆகியோரை உள்ளடக்கிய தலைமைக் குழு வழிநடத்த உள்ளது.
'முதல் பார்ட்னர்ஸ்' நிறுவனரும், ஸ்டார்ட்அப் சிங்கத்தின் தலைமை வழிகாட்டியுமான குமார் வேம்பு இது குறித்து கூறுகையில்,
"இந்தத் தளம் உண்மையான தொழில்முனைவோரின் பயணங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. சீசன் 1-ஐ தொடர்ந்து, சீசன் 2 இன்னும் பெரிய லட்சியத்துடனும், ஆழமான வழிகாட்டுதலுடனும், சிறப்பான முதலீட்டு உறுதியுடனும் உருவாக்கப்பட்டு உள்ளது," என்று தெரிவித்தார்.

அரசின் ஆதரவு
அரசுக்கும் ஸ்டார்ட்அப் சூழலுக்கும் இடையிலான இணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது புதுமையான தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள உறுதியை இது மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
சீசன் 1
ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் 1 ஏற்படுத்திய நம்பிக்கையின் அடிப்படையில் சீசன் 2 உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கும் வளர்ச்சிக்கும் சீசன் 1 உறுதுணையாக இருந்தது. முதல் சீசனில் 39 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் சுமார் 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு வழங்கப்பட்டது.
Edited by Induja Raghunathan

