தமிழ்நாடு பட்டியலின, பழங்குடியினர் புத்தொழில் நிதிக்கு SKOCH Silver Award 2026
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர் எதிர்கொண்டு வந்த முதலீட்டு அணுகல் சவால்களைத் தீர்க்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. வழக்கமான கடன் திட்டங்களைப் போல திருப்பிச் செலுத்தும் சுமை இன்றி, பங்கு முதலீட்டு வடிவில் நிதி ஆதரவை இத்திட்டம் வழங்குகிறது.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான StartupTN-இன் முக்கிய திட்டமான தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதி, Ease of Doing Business பிரிவில் SKOCH Silver Award 2026 விருதைப் பெற்றுள்ளது.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர் எதிர்கொண்டு வந்த முதலீட்டு அணுகல் சவால்களைத் தீர்க்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. வழக்கமான கடன் திட்டங்களைப் போல திருப்பிச் செலுத்தும் சுமை இன்றி, பங்கு முதலீட்டு வடிவில் நிதி ஆதரவை இத்திட்டம் வழங்குகிறது. மேலும், நிதி உதவியுடன் தொழில் வளர்ச்சி ஆதரவு, வழிகாட்டுதல், சந்தை தொடர்புகள் மற்றும் முதலீட்டாளர் இணைப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த விருது கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கக் குழுவினர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், ஐ.ஏ.எஸ்., அவர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
சமூகத்தில் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு பங்கு முதலீட்டு வடிவிலான நிதி ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் புத்தொழில் சூழமைப்பு ஆதரவை வழங்கி தொழில்முனைவை ஊக்குவித்து வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் புதுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தொடங்கப்பட்டதிலிருந்து, அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவு வளர்ச்சிக்கான முன்னோடி மாதிரியாக இத்திட்டம் உருவெடுத்துள்ளது. 2025–26 நிதியாண்டு நிலவரப்படி, இத்திட்டத்தின் மூலம்:
● பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தலைமையிலான 43 புத்தொழில் நிறுவனங்கள் ஆதரவு பெற்றுள்ளன.
● ரூ.60.80 கோடி மதிப்பிலான முதலீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
● ஆதரவு பெற்ற புத்தொழில் நிறுவனங்கள் ரூ.21.66 கோடி மதிப்பிலான அடுத்தகட்ட முதலீடுகளை திரட்டுவதற்கு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆதரவளித்துள்ளது.
இந்த நிதித் திட்டம் வணிகம், சட்டம் மற்றும் நிதி சார்ந்த முழுமையான ஆய்வு நடைமுறைகளை உள்ளடக்கிய வலுவான நிர்வாக கட்டமைப்பின் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் நிதியின் சரியான பயன்பாடு உறுதி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஆதரவு பெற்ற பல புத்தொழில் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் புதுமைத்திறனை வெளிப்படுத்தியுள்ளன. அவற்றில், விண்வெளி தொழில்நுட்பத் துறையில் செயல்படும் OrbitAid Aerospace நிறுவனம் ரூ.15 கோடிக்கும் அதிகமான அடுத்தகட்ட முதலீடுகளை திரட்டி, தனது செயற்கைக்கோளை இஸ்ரோவின் விண்வெளிப் பயணத்தின் மூலம் விண்ணில் ஏவியுள்ளது.
அதேபோல், Unibose Technology நிறுவனம் அபாயகரமான தொழிற்சாலை சூழல்களில் செயல்படக்கூடிய ஆசியாவின் முதல் EU ATEX Zone-0 சான்றளிக்கப்பட்ட ரோபோடிக் அமைப்பை உருவாக்கி, ரூ.5.46 கோடி அடுத்தகட்ட முதலீடுகளை பெற்றுள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN), தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாநிலத்தின் புத்தொழில் மற்றும் புத்தாக்கத்திற்கான முக்கிய அமைப்பாகும். கொள்கை ஆதரவு, நிதி உதவி, தொழில் வளர்ப்பு மைய ஆதரவு, வழிகாட்டுதல், முதலீட்டாளர் இணைப்பு மற்றும் புத்தொழில் சூழமைப்பு மேம்பாட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி புத்தொழில் மையங்களில் ஒன்றாக உருவாக்கும் நோக்குடன் இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.
