Stock News: பச்சை வண்ணத்தில் தொடங்கிய பங்குச்சந்தை; திடீரென சென்செக்ஸ், நிஃப்டி சரியக் காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கி இருந்தாலும் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கி இருந்தாலும் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (18/04/2023):
நேற்று இன்ஃபோசிஸ் காலாண்டு நிதி அறிக்கையால் சரிவுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தையானது, இன்று ஆரம்ப வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும், வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பச்சை வண்ணத்தில் இருந்த பங்குச்சந்தையானது சிவப்பு வண்ணத்திற்கு மாறியது முதலீட்டாளர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
இன்று காலை 9.20 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 99.64 6 புள்ளிகள் அதிகரித்து 60,010 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 26.20 புள்ளிகள் அதிகரித்து 17,733 புள்ளிகளுடன் வர்த்தகமானது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 191.57 புள்ளிகள் சரிந்து 59,731 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 51.45 புள்ளிகள் சரிந்து 17,655 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

உயர்வுடன் தொடங்கக் காரணம்:
உலகளாவிய வங்கி நெருக்கடி, பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம், செலவினங்களை கட்டுப்படுத்துதல் போன்ற காரணங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதன் வெளிப்பாடாக இந்தியாவின் இரண்டு பெரிய ஐ.டி.நிறுவனங்களின் காலாண்டு பங்குகள் திருப்திகரமாக இல்லாதது பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், இன்று காலை வர்த்தகத்தின் போது இன்ஃபோசிஸ் நிறுவன 0.23 சதவீதம் வரை உயர்ந்தது பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், டாடா மோட்டார்ஸ் போன்ற ஆட்டோ துறை பங்குகளும், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் பங்குகளும் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியது இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கியது.
திடீர் சரிவுக்குக் காரணம் என்ன?
இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவடைந்தது பங்குச்சந்தை வர்த்தகம் பாதிக்கப்படக் காரணமாக அமைந்தது.
குறிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது பிற நாணயங்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
ஹெச்டிஎப்சி லைஃப்
ஹெச்சிஎல் டெக்
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி போர்ட்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
சிப்லா
ஹீரோ மோட்டோகார்ப்
சன் பார்மா
பஜாஜ் ஆட்டோ
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து 81.90 ஆக உள்ளது.

