ஜல்லிக்கட்டுக்கு பச்சைக்கொடி - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்த 6 அதிரடி கருத்துகள்!
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கின் விசாரணைகளின்போது முன்வைத்த தெறிப்புக் கருத்துகள் இவை.
“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்...” என்று தமிழகம் கொண்டாடும் வகையிலான தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுடன் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் தொடர்ந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன சிறப்பு அமர்வில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (மே 18) ஒருமித்த தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமைப்பு பெஞ்ச், ‘ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம்தான் என்றாலும், இந்த விளையாட்டின்போது நேரும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,’ என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, “உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளனர். நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை காக்கும் வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லியிருக்கிறோம். அரசு வழக்கறிஞர்கள் பல்வேறு கருத்துகளை நல்ல முறையில் எடுத்து வைத்தனர். நீதிபதிகள் அதை சிறந்த முறையில் ஏற்றுக்கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு, அரசு எடுத்த சட்ட போராட்டத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இது தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுடன் இணைந்த ஒன்று. இதை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. பாரம்பரியமாக இந்த விளையாட்டுகள் நடந்து வந்து உள்ளன. இது தமிழர்களின் கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்று. இத்தகைய தமிழக அரசின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தன் தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது," என்று கூறினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள்:
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்கின ஆர்வலர்கள் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வந்தது. அப்போது நடந்த காரசார வாதங்களின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்த தெறிப்புக் கருத்துகளின் சிறப்புத் தொகுப்பு இது:
* மிருக வதைச் சட்டம் என்ற தலைப்பு இருப்பதால், இதனை ‘மிருகங்களைக் கொடுமைப்படுத்தக் கூடாது’ என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. நம்மை கொசு கடித்தால் அதை அடிப்போமா அல்லது அமைதியாக பார்த்துக்கொண்டு இருப்போமா? அந்தக் கொசுவைக் கொன்றால் மிருக வதையின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவோமா? ஆக, ’வதை’ என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஏனென்றால், மிருகங்களுக்கான உரிமை என்பது மனிதர்களுக்கு இருப்பது போன்றது அல்ல. சரி, ஒரு பாம்பு கடிக்க வந்தால் என்ன செய்வது?”
* ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் நடக்கும்போது, அதற்காக டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றனவா? திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை காட்சிப்படுத்துவதற்கான விலங்குகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை உறுதி செய்வதற்கான சட்டங்களாக உள்ளவை எவை?
* குத்துச்சண்டை, வாள் சண்டை முதலான மனிதர்கள் ஈடுபடும் சண்டைப் போட்டிகளில் கூட ஒருவருக்கொருவர் துன்பப்படுத்துதல் இருக்கிறது. குத்துச்சண்டையில் சமயத்தில் போட்டியாளர்கள் இறந்தே கூட போகின்றார்களே?
* ஜல்லிகட்டு தொடர்பான சில புகைப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுவதாக முடிவுக்கு வர முடியாது.
* ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆயுதங்களை எவரும் பயன்படுத்தவில்லை. காளைகளை யாரும் கொல்லவில்லை. அப்படியிருக்கையில், இந்த விளையாட்டை எப்படி கொடூர விளையாட்டு எனக் கூறுவீர்கள்? ஸ்பெயினில் நடக்கும் எருது சண்டையில் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்துவர். ஆனால், இங்கு அப்படி இல்லையே?! இங்கு மனிதர்கள் வெறும் கையுடன்தானே காளையை அடக்க முற்படுகின்றனர். எனவே, இது எப்படி கொடூர விளையாட்டாகும்?
* ஒரு விளையாட்டில் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்பதற்காக, அதனைக் கொடூரமான விளையாட்டு எனக் கூற முடியாது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முற்படுகிறவர்கள் வெறும் கையுடனேதான் செல்கின்றனர். மேலும், அந்தக் காளையை கொல்லவும் இல்லை. அதேவேளையில், உயிர் இழப்பு, ரத்த காயம் என்பது ஒரு எதிர்பாராத சம்பவம் மட்டுமே. மலையேற்றம் என்பதும் மிக ஆபத்தானதுதான். எனவே, அதனை தடை செய்யலாமா என்ன?

நீதிபதிகளுக்கு ஜல்லிக்கட்டு பார்க்க அழைப்பு:
இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்,
“தமிழகத்தில் 5,000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சார நிகழ்வான ஜல்லிக்கட்டை பொய்களையும் அவதூறுகளையும் கூறி நிறுத்தப் பார்க்கக் கூடாது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வு, பண்பாட்டுடன், கலாச்சார ரீதியாக கலந்துவிட்ட ஒன்று. கடந்த 2017 முதல் 2022 வரை ஜல்லிக்கட்டு விதி மீறல் தொடர்பாக எந்த ஒரு புகாரும் இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்யக் கோர பீட்டா அமைப்புக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. அந்த அமைப்பு சட்டபூர்வமான அமைப்பும் இல்லை,” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகள் குறிப்பிட்ட இடைவெளியில் எப்படி ஓடும்? ஒருவர் மட்டும் தான் காளையை அடக்குவாரா அல்லது பலர் அதன் மீது பாய்வார்களா? 100 மீட்டர் தூரம் ஓடி காளைகள் எப்படி பாதுகாப்பாக வெளியேறுகின்றன? ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா?” என்று கேள்விகளையும் சந்தேகங்களையும் அடுக்கினர்.
அவர்களுக்கு பதிலளித்த கபில் சிபில்,
“தமிழகத்தில் மிகச் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. அதைக் காண உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வர வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்,” என்றது நினைவுகூரத்தக்கது.
தற்போது “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
'ஜல்லிக்கட்டு நடத்த தனி ஸ்டேடியம் கட்ட வேண்டும்'- புகைப்படக் கலைஞர் சுரேஷின் ஆசை!
Edited by Induja Raghunathan

