சுசுகி ஆதரவு பெற்ற 'Next Bharat Ventures' சமூக தாக்க ஸ்டார்ட்-அப்’களில் முதலீடு செய்ய ரூ.2,000 கோடி நிதி அறிவிப்பு!
இந்த நிதி மூலம் வேளாண்மை, நிதி உட்சேர்க்கை, சுகாதாரம், சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளில் செயல்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யப்பட உள்ளது.
ஜப்பானின் சுசூகி ஆதரவு பெற்ற 'நெக்ஸ்ட் பாரத் வெஞ்சர்ஸ்' (Next Bharat Ventures) ஐஎஃப்எஸ்சி பிரைவேட் லிமிடெட் (NBV), இந்தியாவில் சமூக தாக்கத்தை உருவாக்கும் தொடக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.2,000 கோடி மதிப்பிலான தனது இரண்டாவது நிதியை அறிவித்துள்ளது.
இந்த நிதி மூலம் வேளாண்மை, நிதி உட்சேர்க்கை, சுகாதாரம், சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளில் செயல்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யப்பட உள்ளது.
முன்னதாக, ரூ.340 கோடி மதிப்பிலான தனது முதல் நிதியின் மூலம் 20-க்கும் மேற்பட்ட சமூக தாக்க அமைப்புகளில் நெக்ஸ்ட் பாரத் வெஞ்சர்ஸ் முதலீடு செய்திருந்தது.
இந்த புதிய நிதியின் பெரும்பகுதி சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனிடமிருந்து பெறப்படும் என்றும், அதனுடன் ஜப்பானின் பிற நிறுவனங்களிடமிருந்தும் முதலீடுகள் திரட்டப்படும் என்றும் நெக்ஸ்ட் பாரத் வெஞ்சர்ஸ் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விபுல் ஜிண்டால் நாத் தெரிவித்தார்.
நிதி எந்த துறைகளில் பயன்படுத்தப்படும் என்ற கேள்விக்கு அவர்,
“கிராமப்புற இந்தியா, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், அல்லது பெருநகரங்களில் உள்ள ஒழுங்கற்ற மற்றும் கிக் பொருளாதாரத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் எந்தத் துறையிலும் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நாங்கள் முதலீடு செய்கிறோம். அதனால் இயல்பாகவே வேளாண்மை, அக்ரிடெக், சுகாதாரம், ஹெல்த்டெக் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு துறைகள் இதில் அடங்குகின்றன,” என்றார்.
ரூ.2,000 கோடி நிதி எப்போது முழுமையாக முதலீடு செய்யப்படும் என்று கேட்டபோது,
“அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் இந்த ரூ.2,000 கோடி நிதியை முழுமையாக முதலீடு செய்வோம்,” என்று அவர் கூறினார்.
நிதியின் பெரும்பகுதியை ஜப்பானிலிருந்து திரட்டுவதற்கான காரணம் குறித்து அவர்,
“ஜப்பானிய நிறுவனங்கள் முதலீட்டில் அதிக பொறுமையுடன் செயல்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
மேலும்,
“வழக்கமான வென்ச்சர் கேபிடல் நிதிகளைப் போல எங்கள் நிதியின் காலச்சுழற்சி 12 ஆண்டுகள் அல்ல; 15 ஆண்டுகள். நாம் முதலீடு செய்யும் துறைகளில் சமூக தாக்கத்தை உருவாக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. இங்கு அதிவேக வளர்ச்சி இலக்கு அல்ல; அதிக நேரமும் பொறுமையும் அவசியம். அதை நிறுவனங்களுக்கு வழங்க விரும்புகிறோம்,” என்று விளக்கினார்.
இந்த இரண்டாவது நிதி மூலம் கிராமப்புற இந்தியா மற்றும் நகரங்களுக்கு இடம்பெயர்ந்த பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தையும், நிலையான வாழ்வாதார வாய்ப்புகளையும் மேம்படுத்தும் தொழில்முனைவோருக்கு விரிவான ஆதரவை வழங்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய நிதி குறித்து தொஷீரோ சுசூகி கூறுகையில்,
“இந்தியாவில் ஜப்பானின் முதலீடு எப்போதும் இந்தியாவின் திறனை நம்பியதன் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு நமது நாற்பது ஆண்டுகால கூட்டாண்மையாகும்,” என்றார்.
மேலும்,
“எங்களின் மிக முக்கியமான பாரம்பரியம் கார்கள் அல்ல. சிறிய கடைகளாகத் தொடங்கி பெரிய டீலர்ஷிப்புகளாக வளர்ந்த நிறுவனங்கள், பழுதுபார்ப்பு பணிமனைகளில் இருந்து உதிரிபாக உற்பத்தியாளர்களாக மாறிய தொழில்கள், ஒரு சப்ளையரிலிருந்து உருவான சிறு மற்றும் நடுத்தர தொழில் சூழல்கள் ஆகியவையே எங்களின் உண்மையான சாதனைகள்,” என்று கூறினார்.
அவர் தொடர்ந்து,
“இந்த முறையில் இந்தியா முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளோம். அவர்கள் உள்ளூர் வேலைவாய்ப்புகளுக்கும் வருமானத்திற்கும் முக்கிய இயக்க சக்திகளாக உள்ளனர். இரண்டாவது நிதியின் மூலம் இந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறோம். தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கிய இந்திய அரசின் பயணத்தில் இணைவதில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.
நெக்ஸ்ட் பாரத் வெஞ்சர்ஸ், இந்த புதிய ரூ.2,000 கோடி நிதி தனது முதலீட்டு திறனை கணிசமாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதுவரை நிறுவனம், இந்திய நாட்டுப்புற கலைப் பொருட்களுக்கான சந்தை தளமான MeMeraki, கிராமப்புற மின்சார போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் E-Bik, சிறு விவசாயிகளுக்கான மலிவான இயந்திரமயமாக்கல் சேவைகளை வழங்கும் SGB Agro மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார தளமான Atypical Advantage உள்ளிட்ட பல சமூக தாக்கம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

