புத்தாண்டு தின ஆர்டர்களில் சாதனை – ஸ்விக்கி, ஜொமேட்டோ, மேஜிக்பின் தகவல்!
22 நகரங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மத்தியிலும் நியு இயர் தினத்தன்று, இந்தியாவின் முக்கிய நகரங்களில் கோடிக்கணக்கான ஆர்டர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் ‘கிக்’ தொழிலாளர்கள் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தபோதிலும், ஸ்விக்கி, ஜொமேட்டோ மற்றும் மேஜிக்பின் போன்ற உணவு விநியோக தளங்கள் சாதனை அளவிலான ஆர்டர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் கோடிக்கணக்கான ஆர்டர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக இத்தளங்கள் கூறுகின்றன.
கிக் & பிளாட்ஃபார்ம் சர்வீஸ் தொழிலாளர்கள் யூனியன் (GIPSWU) தகவலின்படி, டெல்லி, மும்பை உள்ளிட்ட 22 நகரங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் சங்கத்தைச் சேர்ந்த 14,000 உறுப்பினர்களும் அடங்குவர்.
ஆனால் மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் தற்போது 1.27 கோடி கிக் தொழிலாளர்கள் உள்ளனர். நிதி ஆயோக் கணிப்பின்படி, 2029-30ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரக்கூடும். இந்தியாவின் மூன்றாவது பெரிய உணவு விநியோக தளமான மேஜிக்பின், நியூ இயர் ஈவ் அன்று மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு மணிநேரமும் லட்சக்கணக்கான ஆர்டர்கள் வந்ததாக தெரிவித்தது.
எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட எடர்னல் நிறுவனர் தீபிந்தர் கோயல்,
“ஜொமேட்டோ மற்றும் பிளிங்கிட் தளங்களில் நேற்று சாதனை வேகத்தில் விநியோகம் நடந்தது. போராட்ட அழைப்புகள் இருந்தபோதிலும், உள்ளூர் காவல்துறையின் ஆதரவால் சிறிய அளவிலான இடையூறுகள் மட்டுமே ஏற்பட்டன. 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விநியோக கூட்டாளர்கள், ஒரே நாளில் 75 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்களை 63 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர்,” என்று குறிப்பிட்டார்.
மேஜிக்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷூ ஷர்மா, கிக் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்த போராட்டத்தால் தங்களது செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, என்று தெரிவித்தார்.
ஸ்விக்கி மற்றும் மேஜிக்பின் பகிர்ந்த தரவுகளின்படி, புத்தாண்டு அன்று இந்தியர்கள் பிரியாணி, பீட்சா, பட்டர் சிக்கன் மற்றும் காஜர் கா ஹல்வா போன்ற பாரம்பரிய இனிப்புகளை அதிகம் ஆர்டர் செய்தனர்.
தீபிந்தர் கோயல், சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த உதவிய உள்ளூர் நிர்வாகத்திற்கும், தரையிலேயே பணியாற்றிய குழுக்களுக்கும் நன்றியை தெரிவித்தார். மேலும், “அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் பணிக்கு வந்த விநியோக கூட்டாளர்களுக்கு,” அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும்,
“ஒரு அமைப்பு முற்றிலும் அநியாயமானதாக இருந்தால், இவ்வளவு பேர் தொடர்ந்து அதில் பணியாற்ற விரும்ப மாட்டார்கள். கிக் பொருளாதாரம் இந்தியாவின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட வேலை வாய்ப்பு உருவாக்கும் துறைகளில் ஒன்று,” என்றும் அவர் கூறினார்.
மேஜிக்பின் தரவுகளின்படி, புத்தாண்டு அன்று பீட்சா அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் காஜர் கா ஹல்வா மற்றும் ஐஸ்கிரீம் ஆர்டர்கள் மூன்று மடங்கு உயர்ந்தன. இரவு 9.30 மணியளவில் டின்னர் ஆர்டர்கள் உச்சத்தை எட்டின. டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் பட்டர் சிக்கன் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக இருந்தது.
ஸ்விக்கியில், மாலை 7.30 மணிக்குள் மட்டும் 2.19 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டன. இரவு 8.30 மணிக்குள் 2.18 லட்சம் பீட்சா மற்றும் 2.16 லட்சம் பர்கர் ஆர்டர்கள் வந்ததாக ஸ்விக்கி தெரிவித்தது.
மேலும், புத்தாண்டு தினத்தில் உணவகங்களில் நேரடியாக உணவருந்தும் போக்கும் அதிகரித்ததாக ஸ்விகி டைன்அவுட் தரவுகள் தெரிவிக்கின்றன. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்கள் முன்நிலை வகித்த நிலையில், அகமதாபாத் நகரத்தில் முன்பதிவுகள் 1.6 மடங்கு உயர்ந்ததாகவும், லக்னோ (1.3 மடங்கு), ஜெய்ப்பூர் (1.2 மடங்கு) ஆகிய நகரங்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

