‘ரூ.10,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் முதல் ஏஐ பூங்கா’ - சர்வம் ஏஐ உடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!
இந்தியாவின் முதல் முழு ஸ்டாக் ஏஐ பூங்கா அமைக்க சர்வம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்தியாவின் முதல் முழு ஸ்டாக் ஏஐ பூங்கா அமைக்க சர்வம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ரூ.10,000 கோடி ஆரம்ப முதலீடு கொண்ட, முழு இறையாண்மை கொண்ட இந்த திட்டம் 1,000 அதிதிறன் வாய்ந்த, ஆழ் நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, பொதுநலனுக்காக, அனைவரையும் உள்ளடக்கிய துடிப்பான ஏஐ சூழலை உருவாக்குவதற்கான அடித்தளமாகவும் அமையும்.
இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி, சர்வம் ஏஐ இணை நிறுவனர் பிரத்யூஷ் குமார், தொழில் துறை செயலர் அருண் ராய், நிர்வாக இயக்குனர் டாரீஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்தியாவில் உருவாக்கப்படும் இந்த முதல் ஏஐ பூங்கா, ஏஐ திறன் உள்கட்டமைப்பு, பாதுகாப்பான தரவுகள் கட்டமைப்பு, மாதிரி ஆய்வுகூடங்கள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். தரவுகள், மாதிரிகள், கம்ப்யூட்டர் செயல்பாடு, என எல்லாமே மாநில எல்லைக்குள் இருக்கும் வகையில் இறையாண்மை கொண்டதாக இந்த உள்கட்டமைப்பு அமைந்திருக்கும்.
”தொழில்நுட்பத் துறையில் முன்னிலை வகிக்கும் ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், மக்கள் மற்றும் மாநில நலன் சார்ந்த வகையில் ஏஐ நுட்பத்திற்கு ஏற்ப செயல்பட மற்றும் அதன் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் செயல்படும் எங்களின் ஆற்றலுக்கு இது உதாரணமாக அமைகிறது,” என இந்த திட்டம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
”இந்த முன்னோடி முயற்சி மூலம் தமிழ்நாடு ஏஐ தொடர்பான படிப்படியான வளர்ச்சியில் நாட்டில் முன்னிலை வகிக்கும். கல்வி, சுகாதாரம், வேளாண்மை மற்றும் மக்கள் பங்கேற்பு உள்ளிட்ட துறைகளில் இது பயன் தரும்,” என்றும் கூறினார்.
”உற்பத்தி மற்றும் ஐடி துறை கடந்த கால வேலைவாய்ப்புகளை வரையறை செய்தது போல, அடுத்த தலைமுறை வேலைவாய்ப்புகளை ஏஐ நுட்பம் தீர்மானிக்கும். இறையாண்மை கொண்ட ஏஐ நுட்பத்தை நிறுவுவதன் மூலம், மாணவர்கள், ஆய்வாளர்கள் ஏஐ நுட்பத்தை நுகர்வதோடு, உலக அளவில் உருவாக்குபவர்களாகவும் மாற இது வழிவகுக்கும்,” என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி கூறினார்.

”உலகிற்காக, ஏஐ நுட்பம் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வகையில் இந்த திட்டம் அமைகிறது. கம்ப்யூட்டர் திறன், ஆய்வாளர்கள், ஸ்டார்ட் அப்கள், நிறுவனங்கள், தமிழ்நாடு அரசு ஆகியவற்றை ஒரே குடையின் கொண்டு வருவதன் மூலம் இந்த ஏஐ பூங்கா, நுண்ணறிவு சோதனை நிலையில் இருந்து தேசிய அளவில் நிஜ உலக பயன்பாட்டிற்கு வர தேவையான சூழல் உருவாகும்,” என்று சர்வம் ஏஐ இணை நிறுவனர் பிரத்யூஷ் குமார் கூறியுள்ளார்.
இந்திய மொழிகள் மற்றும் சூழலுக்கு ஏற்ற முழுமையான அடிப்படை மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் இந்திய ஏஐ நிறுவனமாக சர்வம் ஏஐ விளங்குகிறது. பல இந்திய மொழிகள் மற்றும் பலவித ஏஐ பயன்பாடுகளுக்கு ஏற்ற ஓபன் சோர்ஸ் மாதிரிகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின் முதல் இறையாண்மை மிக்க அடிப்படை முதல் மொழி மாதிரியை உருவாக்க இந்திய ஏஐ திட்டத்தின் கீழ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan

