2023 தமிழக ஸ்டார்ட் அப்’களுக்கு கடுமையான ஆண்டு; 85% சரிந்த நிதி திரட்டல் - Tracxn அறிக்கை!
கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் துறைக்கு சிக்கலான ஆண்டாக அமைந்திருப்பதும், தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 85 சதவீதம் குறைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் துறைக்கு சிக்கலான ஆண்டாக அமைந்திருப்பதும், தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 85 சதவீதம் குறைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வரும் தனியார் சந்தை ஆய்வு மேடையான டிராக்ஸன் டெக்னாலஜீஸ் (), தனது தரவுகளை கொண்டு, ஸ்டார்ட் அப் சூழல் தொடர்பான டிராக்ஸன் ஜியோ ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதி திரட்டலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வென்சர் முதலீட்டாளர்களிடம் இருந்து 3.4 பில்லியன் டாலர் திரட்டப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டில் தமிழ்நாடு 233 மில்லியன் டாலர் நிதியுடன், இந்திய அளவில், அதிக ஸ்டார்ட் அப் முதலீடு ஈட்டிய மாநிலங்களில் கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அரியானாவுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளது.

எனினும், 2022ம் ஆண்டை ஒப்பிடும் போது 2023ம் ஆண்டில் ஸ்டார்ட் அப் நிதி குறைந்துள்ளது. 2022ம் ஆண்டில் 1.7 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டதில் இருந்து 85 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு 598.4 மில்லியன் டாலர் திரட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 2022 அதிக நிதி திரட்டப்பட்ட ஆண்டாக அமைகிறது.
பொருளாதார காரணிகள், தேக்க நிலை அச்சம், வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்கள் நிதி திரட்டலில் தாக்கம் செலுத்தியதாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் 2023-இல் திரட்டிய நிதி விவரங்கள்
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், விதை நிதி அளவிலான நிதி 32.6 மில்லியன் டாலராக 47 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 61.6 மில்லியன் டாலராக இருந்தது. ஆரம்ப நிலை சுற்றுகள் 86 சதவீதம் சரிந்துள்ளது.
- 2023ம் ஆண்டில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் சூழலில் ஒரே ஒரு முறை மட்டும் 100 மில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டல் நிகழ்ந்துள்ளது. மூன்று சக்கர மின் வாகன தயாரிப்பு நிறுவனம் ’டிஐ கிளீன் மொபிலிட்டி’ டி சுற்றில் 135 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.
- போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நுட்பம், சுற்றுச்சூழல் நுட்பம், ஆட்டோ ஆகிய துறைகள் அதிக நிதி திரட்டின. போக்குவரத்து நுட்பம் துறை நிறுவனங்கள் 2022ல் 511 மில்லியன் டாலர் திரட்டிய நிலையில் 2023ல் இது 160 மில்லியன் டாலராக குறைந்தது. சுற்றுச்சூழல் நுட்ப துறையிலும், 70 சதவீதம் குறைந்துள்ளது.
- 2023ம் ஆண்டு ஐந்து கையகப்படுத்தல் நிகழ்ந்த நிலையில், 2022 ல் எட்டு கையக்கப்படுத்தல் நிகழ்ந்தன. டாங்கோ ஐ நிறுவனத்தை லென்ஸ்கார்ட் வாங்கியது மற்றும் கோரமண்டல் இண்டர்நேஷனல், டிரம்ஸ் நிறுவனத்தை வாங்கியது முக்கியமாக அமைந்தன.
- நிதி திரட்டலில் சென்னை நகரம் முதலிடம் வகிக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி திரட்டலில் சென்னை 97 சதவீதம் பங்கு வகிக்கிறது. கோவை மற்றும் ராணிப்பேட்டை அடுத்த இடங்களில் உள்ளன.
- ஆர்டிபிஐ, சென்னை ஏஞ்சல்ஸ் மற்றும் சிராட்டே வென்சர்ஸ் துடிப்புடன் செயல்படும் முதலீடு நிறுவனங்களாக அமைகின்றன.

Tracxn பின்னணி
Tracxn டெக்னாலஜிஸ் லிமிடெட் என்பது தனியார் சந்தை ஆராய்ச்சிக்கான தரவு நுண்ணறிவு தளமாகும், இது சர்வதேச அளவில் தொழில்கள், துணைத் துறைகள், புவியியல் மற்றும் நெட்வொர்க்குகள் உள்ளிட்ட 2500+ பிரிவுகளின் அடிப்படையில் 2.3 மில்லியனை நிறுவனங்களைக் கண்காணித்து வருகிறது.
இது தனியார் நிறுவன தரவுகள் மற்றும் இணைய டொமைன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் Tracxn உலகளவில் ஐந்து முன்னணி தளங்களில் ஒன்றாக உள்ளது.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

