டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து என்.சந்திரசேகரன் விலகுவதாக அறிவிப்பு!
அவரது தற்போதைய ஐந்து ஆண்டு பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்றுடன் முடிவடைகிறது. தனது பதவிக்கால நீட்டிப்பு குறித்து டாடா சன்ஸ் இயக்குநர் குழு உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததே தனது ராஜினாமாவுக்குக் காரணம் என சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
டாடா சன்ஸ் இயக்குநர் குழு உறுப்பினர்களிடையே தனது பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தால், டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மீண்டும் அந்தப் பதவிக்குத் தன்னை முன்நிறுத்தப்போவதில்லை, என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸின் தலைவராகப் பிப்ரவரி 2017-ல் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவரது தற்போதைய ஐந்து ஆண்டு பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்றுடன் முடிவடைகிறது. சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை அவரது பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகப் பரிந்துரை செய்தன. இந்தத் தீர்மானம் கடந்த பிப்ரவரி 24, 2026 அன்று டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இருப்பினும், குழு உறுப்பினர்களில் ஒருவர் அந்தப் பரிந்துரைக்கு ஆதரவளிக்காததால், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை, ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், அந்த முடிவைத் தள்ளிவைக்க நான் முடிவு செய்தேன்,” என்று சந்திரசேகரன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த இயக்குநர் குழு கூட்டம் நடைபெற்று ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இதுகுறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அவர் கூறினார். மேலும், டாடா சன்ஸ் ஒரு மிகப் பெரிய நிறுவனம் என்றும், பல முக்கிய உத்திசார் திட்டங்கள் செயல்படுத்தப்படும் முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“பிப்ரவரி 2027-க்குப் பிறகு குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருக்க வேண்டியது மட்டும் அவசியமல்ல, ஊழியர்கள், முதலீட்டாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்குத் தலைமை குறித்த தெளிவு இருக்க வேண்டியதும் முக்கியம்,” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தச் சூழ்நிலைகயில், பிப்ரவரி 20, 2027-ல் எனது பதவிக்காலம் முடிவடையும்போது, மறுநியமனத்திற்குத் நான் என்னை முன்நிறுத்தப் போவதில்லை என்று இன்று காலை நான் டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிடம் தெரிவித்துவிட்டேன். ஒரு சுமூகமான நிர்வாக மாற்றத்தை உறுதி செய்வதற்காக, அடுத்த தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்கும்படி இயக்குநர் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். அனைத்துப் பங்குதாரர்களின் ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் மற்றும் அதானி போன்ற பெருநிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையிலும், புதிய முதலீட்டுத் துறைகளை நோக்கி அடியெடுத்து வைத்து வரும் இந்த வேளையிலும் சந்திரசேகரனின் இந்த முடிவு டாடா குழுமத்திற்கு ஒரு பெரும் பின்னடைவாக அமையலாம்.

