டாடா அறக்கட்டளை, ஸ்ரீதர் வேம்பு ஆதரவுடன் எம்ஆர்ஐ ஸ்கேனர் தயாரிப்பில் கலக்கும் இந்திய ஸ்டார்ட்-அப்!
பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம், திரவ ஹீலியம் இல்லாமல் இயங்கும் வகையில் இந்தியாவில் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட முழு உடல் 1.5-டெஸ்லா எம்.ஆர்.ஐ ஸ்கேனரை, நாக்பூருக்கு அருகிலுள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் தனது முதல் மருத்துவப் பயன்பாட்டிற்காக நிறுவியுள்ளது.
மருத்துவமனை உபகரணங்கள் பலவற்றை இந்தியா உள்ளூரிலேயே தயாரித்து வந்தாலும், எம்ஆர்ஐ ஸ்கேனர் தயாரிப்பு என்பது இதுவரை பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலேயே இருந்து வந்தது. காந்தங்கள், எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் மற்றும் மென்பொருட்கள், என அனைத்தும் சில வெளிநாட்டு நிறுவனங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டதால், இந்திய மருத்துவமனைகள் இவற்றை அதிக இறக்குமதி விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவியது.
இயந்திரத்தின் வாங்கும் விலையை விட, அதைப் பராமரிக்கும் செலவு மிகவும் அதிகமாகும். வழக்கமான எம்ஆர்ஐ ஸ்கேனர்களைக் குளிரூட்ட அரிதான மற்றும் விலை உயர்ந்த திரவ ஹீலியம் தேவைப்படுகிறது.
மேலும், இந்த இயந்திரங்கள் அதிக எடைக் கொண்டவை என்பதால், மருத்துவமனைகளின் எந்தப் பகுதியிலும் இவற்றை எளிதாக நிறுவ முடியாது. இத்தகைய சூழலில், 2017-ஆம் ஆண்டு பெங்களூரில் அர்ஜுன் அருணாச்சலம் என்பவரால் Voxelgrids Innovations நிறுவனம் தொடங்கப்பட்டது.

பேராசிரியரின் முன்முயற்சி...
அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற அர்ஜுன், நியூயார்க்கில் உள்ள ஜி.இ ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார். சொந்தமாக நிறுவனம் தொடங்கும் நோக்கில் 2008-ல் ஜி.இ நிறுவனத்திலிருந்து வெளியேறிய அவர், நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் ஐஐடி மும்பையில் மின் பொறியியல் பேராசிரியராகப் சேர்ந்தார். பின்னர், 2013-ல் சிங்கப்பூர் சென்ற அவருக்கு, அங்கிருந்து கிடைத்த ‘ஸ்ப்ரிங் சிங்கப்பூர்’ நிதி உதவி மூலம் சிறிய பரிசோதனை ஸ்கேனர் ஒன்றை உருவாக்க முடிந்தது.
2016 மே மாதத்தில், இந்தியாவில் எம்ஆர்ஐ ஸ்கேனர்களை உருவாக்கும் முன்மொழிவோடு டாடா அறக்கட்டளை அமைப்பை அவர் அணுகினார். டாடா அறக்கட்டலை அவரை சமூக தொழில்முனைவோர் கண்டுபிடிப்பு அமைப்புக்கு அறிமுகப்படுத்தியது.
தொடர் முயற்சிகளின் பலனாக, 2018 மார்ச் மாதத்தில் பெங்களூரில் உள்ள சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நிறுவப்பட்ட இதன் மாதிரி இயந்திரம் தனது முதல் ஸ்கேன் படங்களை வெற்றிகரமாக பதிவு செய்தது.
இந்த நிறுவனம் 1.5 டெஸ்லா திறன் கொண்ட சிறிய அளவிலான, முழு உடலையும் பரிசோதிக்கும் எம்ஆர்ஐ ஸ்கேனரை வடிவமைத்துள்ளது. இது நிலையான மருத்துவமனைகளிலும், நடமாடும் வாகனங்களிலும் தடையின்றி இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் காந்த வடிவமைப்புதான். வோக்செல்கிரிட்ஸ் நிறுவனம் திரவ ஹீலியத்தைச் சார்ந்திருக்காத சூப்பர் கண்டக்டிங் காந்தத்தைப் பயன்படுத்துகிறது. இது ஸ்கேனர் தயாரிப்புச் செலவில் சுமார் 40 சதவீதத்தைக் குறைக்கிறது. வழக்கமான ஸ்கேனர்கள் சுமார் 6 டன் எடை கொண்டவையாக இருக்கும் நிலையில், 2025 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய இயந்திரம் வெறும் 2 முதல் 3 டன் எடை மட்டுமே கொண்டது.
எடை குறைவாக இருப்பதால், சிறிய மருத்துவமனைகள், கட்டடங்களின் மேல் தளங்கள் அல்லது நடமாடும் வாகனங்களிலும் இதை எளிதாக நிறுவ முடியும். இதனால் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு வோக்செல்கிரிட்ஸ் செயல்படுகிறது.
மேலும், இதன் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் காந்தத்தைச் சுற்றிச் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வும் மிகவும் குறைவாகவே இருக்கும்.
டாடா ட்ரஸ்ட்ஸ், ஸ்ரீதர் வேம்பு உறுதுணை...
மென்பொருள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கிரையோஜெனிக் காந்தம் என அனைத்தும் உள்ளூரிலேயே உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அர்ஜுன் அருணாச்சலம் இந்த ஸ்கேனர் வடிவமைப்பு தொடர்பான அமெரிக்க காப்புரிமையையும் பெற்றுள்ளார். இந்நிறுவனம் 2020-ல் ISO 13485 சான்றிதழையும், 2023 ஜூன் மாதத்தில் வர்த்தக ரீதியான உற்பத்தி மற்றும் விற்பனை உரிமத்தையும் பெற்றது.

வோக்செல்கிரிட்ஸ் நிறுவனத்தின் முதல் மருத்துவப் பயன்பாட்டுச் சாதனமாக, நாக்பூர் அருகிலுள்ள சந்திரபூர் புற்றுநோய் பராமரிப்பு அறக்கட்டளையில் 2025 டிசம்பரில் நிறுவப்பட்ட ஸ்கேனர், தற்போது நோயாளிகளின் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பக் கட்டத்திலிருந்தே ஆதரவளித்து வரும் டாடா அறக்கட்டலை, இந்த இயந்திரத்தை வாங்க முதற்கட்ட ஆர்டரையும் வழங்கியுள்ளது.
2021-ஆம் ஆண்டில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனம் வோக்செல்கிரிட்ஸில் 5 மில்லியன் டாலர் சீரிஸ் ஏ முதலீட்டை மேற்கொண்டது. பிசினஸ் டுடே செய்தியின்படி, டாடா ட்ரஸ்ட்ஸ் மற்றும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோரின் இந்த நிதி ஆதரவே, இந்தியத் தொழில்நுட்பம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கைக்குச் சென்றுவிடாமல் தடுத்து, நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த உதவியாக இருந்தது. மேலும், தேசிய பயோஃபார்மா திட்டத்தின் கீழ், பயோடெக்னாலஜி துறை மூலம் ரூ.12 கோடி நிதி உதவியும் வழங்கப்பட்டது.
தற்போது பெங்களூருவில் உள்ள உற்பத்தி மையம் ஆண்டுக்கு 20 முதல் 25 ஸ்கேனர்களை தயாரிக்கும் திறன் கொண்டது. 33 ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்நிறுவனம், வணிக ரீதியிலான உற்பத்தியை அதிகரித்து, அடுத்த கட்ட நிதி திரட்டலுக்கும் ஆயத்தமாகி வருகிறது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு எம்ஆர்ஐ ஸ்கேனர் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது, நாட்டின் மருத்துவத் துறை தன்னிறைவுக்கும், கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan

