TCS நிகர லாபம் 14% சரிவு - புதிய தொழிலாளர் விதிகள் மற்றும் மறுசீரமைப்பு எதிரொலி?
இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் உள்மறுசீரமைப்பு நடவடிக்கைகளே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2026 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3FY26) தனது நிகர லாபம் 14% சரிந்துள்ளதாகத் திங்களன்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் உள்மறுசீரமைப்பு நடவடிக்கைகளே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

நிதி நிலவரங்கள்:
நிகர லாபம்: கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.12,380 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர லாபம், இம்முறை ரூ.10,657 கோடியாகக் குறைந்துள்ளது.
வருவாய் உயர்வு: லாபம் குறைந்தாலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 4.9% உயர்ந்து ரூ.67,087 கோடியை எட்டியுள்ளது (கடந்த ஆண்டு ரூ.63,973 கோடி).
ஒரு முறை கட்டணம் (One-time Charge): ஊதிய வரையறையில் (Wage Definition) ஏற்பட்ட மாற்றத்தால், பணிக்கொடை (Gratuity) மற்றும் நீண்ட கால விடுப்பு ஊதியத்திற்காக ரூ.2,128 கோடியை நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதுவே லாபச் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி: நிறுவனத்தின் ‘AI சேவைகள்’ பிரிவு வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது குறித்துப் பேசிய டிசிஎஸ் சிஇஓ (CEO) கே. கீர்த்திவாசன்,
"இரண்டாம் காலாண்டில் நாங்கள் கண்ட வளர்ச்சி வேகம் மூன்றாம் காலாண்டிலும் தொடர்கிறது. உலகின் மிகப்பெரிய AI சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமாக மாறுவதே எங்களின் லட்சியம். எங்களின் AI சேவைகள் மூலம் தற்போது ஆண்டுக்கு 1.8 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது," என்று தெரிவித்தார்.
சவால்கள் மற்றும் ஊழியர்கள் நிலவரம்: உலகளாவிய பொருளாதார சூழல் காரணமாக டாலர் அடிப்படையிலான வருவாய் வளர்ச்சியில் தேக்கம் காணப்படுகிறது. டாலர் மதிப்பில் வருவாய் 7,509 மில்லியன் டாலராக உள்ளது, இது கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டை விடக் குறைவாகும்.
ஊழியர்கள் எண்ணிக்கை: இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 11,151 குறைந்து, தற்போது 5,82,163 ஆக உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 30,561 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.
புதியத் திறன் மேம்பாடு: இது குறித்து மனிதவளப் பிரிவு அதிகாரி சுதீப் குன்னுமல் கூறுகையில்,
"எங்களிடம் தற்போது 2,17,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மேம்பட்ட AI திறன்களைக் கொண்டுள்ளனர். மேலும், உயர்திறன் கொண்ட புதிய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளோம்," என்றார்.
நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு (Operating Margin) 25.2% ஆகவும், கையில் உள்ள மொத்த ஒப்பந்த மதிப்பு (TCV) 9.3 பில்லியன் டாலராகவும் நீடிக்கிறது.

