தென்காசி மாவட்ட கிராமப் பெண்களை பீடித் தொழிலில் இருந்து மீட்கும் ‘கொற்றவை’ - காருண்யாவின் சமூகப் புரட்சி!
தென்காசியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களை பீடித்தொழிலில் இருந்து மீட்டு, வாழை, தேங்காய் போன்ற இயற்கைப் பொருட்கள் கொண்டு கைவினைப்பொருட்கள் செய்யும் பயிற்சி அளித்து, ‘கொற்றவை’ என்ற தளம் மூலம் விற்பனை செய்து, அவர்கள் அதிக வருவாய் ஈட்ட உதவி வருகிறார் காருண்யா குணவதி.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி - தென்காசி மண்டலம் என்பது இந்தியாவின் பாரம்பரிய பீடி தயாரிக்கும் நிறுவனங்களின் முக்கிய மையங்களில் ஒன்றாகும். இங்குள்ள பல்லாயிரக்கணக்கான ஏழைப் பெண்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்திற்காக பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்கு பீடி சுற்றும் ஒவ்வொரு பெண்ணும் அந்த வேலை தன் உடலுக்கு ஏற்படுத்தும் கடுமையான பாதிப்புகளை நன்கு அறிவார். இடுப்பு வளைந்து, விரல்கள் வேகமாக இயங்க, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை எந்தவித இடைவேளையுமின்றி அவர்கள் புகையிலை இலைகளை பீடிகளாகச் சுற்றுகிறார்கள். அவர்கள் வேகமாக இயங்கினால், அவர்களால் ஆயிரம் பீடிகளைச் சுற்றி 230 ரூபாய் கூலியாகப் பெற முடியும். அது அவர்களின் குழந்தைகளுக்கு உணவளிக்க போதுமானது. அதே ஊரில் பிறந்த காருண்யா குணவதி, தனது சொந்தக் குடும்பத்திலேயே இதைப் பார்த்து வளர்ந்தவர்.
இதையே பார்த்து வளர்ந்த காருண்யா, நன்கு படித்து வேலைக்குச் சென்ற பின்னரும், அவரின் ஊரிலுள்ள பெண்கள் இதுபோல் கஷ்டப்படுவதை மறக்கமுடியவில்லை. அதனால், அவர்களின் உடல்நலனை மனதில் வைத்தும், பொருளாதார வகையில் அப்பெண்களுக்கு வாழ்வில் ஏற்றத்தை தர முடிவெடுத்த காருண்யா, தனது சொந்த ஊருக்கே சென்று ‘கொற்றவை’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

‘கொற்றவை’ நிறுவனர் காருண்யா குணவதி
‘கொற்றவை’க்குப் பின்னால்...
கைவினைப் பொருட்கள் தயார்த்து விற்பனை செய்யும் தளமான ’கொற்றவை’-யை தொடங்கியதன் பின்னணி கதையை நம்மிடம் பகிர்ந்தார் காருண்யா.
“என் அத்தை இந்த வேலையினாலேயே காசநோயால் பாதிக்கப்பட்டார். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் சொந்தக் குடும்பமே அன்றாடப் பிழைப்பிற்காகப் போராடிக் கொண்டிருந்ததால், அப்போது எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாமல் போனது,” என்று காருண்யா குணவதி கூறினார்.
இந்த அவதானிப்புதான் பின்னாளில் தென்காசி முழுவதும் உள்ள பெண்களுக்குத் தேங்காய் ஓடு, வாழை நார், டெர்ரகோட்டா சுடுமண் மற்றும் உணவுப் பொருட்களைத் தயாரிக்கப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கும் ‘கொற்றவை’ என்ற தளத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்தது.
இந்த முயற்சியும் இதன் வழிகாட்டுதலும் அதன் பெயருக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. காருண்யாவைப் பொறுத்தவரை, ’கொற்றவை’ என்பது தாய்மையின் தீவிரமான பெண் சக்தியைக் குறிக்கிறது; அது படைக்கவும், பாதுகாக்கவும், அதே நேரத்தில் பிழைத்திருக்கவும் செய்யும் ஒரு சக்தி, என்கிறார்.
காருண்யாவின் கதை
தென்காசியில் உள்ள பெருமாள்பட்டியில் பிறந்து வளர்ந்த காருண்யா, மின்பொறியியலில் இளங்கலை முடித்து, பின்னர் கிராஃபிக் டிசைனராகப் பணியாற்றினார். இறுதியில் அவர் ஃப்ரீலான்சிங் பணிக்கு மாறினார். இது 'வாய்ஸ் ஆஃப் தென்காசி ஃபவுண்டேஷன்' அமைப்பின் இணை நிறுவனராகச் சமூகப் பணிகளைத் தொடர அவருக்கு நேரத்தையும் சுதந்திரத்தையும் அளித்தது.
காருண்யா தனது குடும்பத்தின் முதல் பட்டதாரி. இவரது தந்தை ஒரு வெல்டர், தாய் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய பெற்றோரால் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. மேலும், பெரும்பாலான நேரங்களில் கருத்தரங்குகள் மற்றும் ஆய்வறிக்கைப் போட்டிகளில் வென்ற பரிசுத் தொகையைப் பயன்படுத்தியே காருண்யா தனது கல்லூரி கட்டணத்தைச் செலுத்தியதாக பகிர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அஞ்சல் வழியில் எம்பிஏ முடித்த அவர், தற்போது சமூக தொழில்முனைவோர் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று வருகிறார்.
“கிராமப்புறப் பெண்கள் பெரும்பாலும் 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டுத் திருமணம் செய்து கொள்வதை நான் கவனித்தேன். அதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவற்றில் பயிற்சி அளிக்க தென்காசி ஃபவுண்டேஷன் மூலம் யோசித்தோம். குழந்தைகளுக்கும் நிதி சார்ந்த விழிப்புணர்வைக் கற்றுக்கொடுத்தோம். என்னிடம் டிஜிட்டல் மற்றும் பிராண்டிங் ஏஜென்சி இருந்ததால், கிராமங்களுக்குச் சென்று கற்பிப்பது, குளங்களைச் சுத்தப்படுத்துவது போன்ற காரியங்களைப் பகுதிநேரமாகச் செய்து வந்தேன்,” என்று அவர் விளக்குகிறார்.

பீடி சுற்றும் பெண்களின் நிலை
கடந்த 2024-ஆம் ஆண்டு காருண்யா நடத்திய ஒரு ஆய்வில், தென்காசி மற்றும் திருநெல்வேலி மண்டலம் முழுவதும் சுமார் 5 லட்சம் பெண்கள் பீடி சுற்றி வாழ்வாதாரம் நடத்துவது தெரியவந்தது. அவர்களிடம் 10 கேள்விகளை அவர் கேட்டார், அதில் சுய விருப்பத்தின் பேரில் இந்தத் தொழிலில் இருக்கிறார்களா என்பதும் அடங்கும்.
இதில் 83% பெண்கள் நாள்பட்ட சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், சில சந்தர்ப்பங்களில் நுரையீரல் புற்றுநோய் காரணமாகப் பெண்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்ததும் தெரியவந்தது.
அப்பகுதியில் உள்ள ஒரு கண் மருத்துவர், தன்னிடம் வரும் நோயாளிகளில் 20% பேர் பீடி சுற்றும் பெண்கள் என்றும், இந்த நுணுக்கமான வேலை பெரும்பாலும் அவர்களின் பார்வைத்திறனைப் பாதிக்கிறது, என்றும் கூறினார்.
வாழ்வாதாரம் மற்றும் பிழைப்புக்கான இந்த முடிவில்லாத சுழற்சியில் சிக்கி, தனது அத்தையைப் போல வேறு எந்தப் பெண்ணும் அதே நிலையை அடையக்கூடாது என்பதில் காருண்யா உறுதியாக இருந்தார். மாற்று வழி இருந்தால் 93% பெண்கள் வேலையை மாற்றத் தயாராக இருப்பதாக அந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இது அவரது முடிவை மேலும் வலுப்படுத்தியது.
கொற்றவை வளர்ச்சிப் பயணம்
பீடி சுற்றும் இந்தப் பெண்களுக்கு ஓர் ஆரோக்கியமான வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கொற்றவை அமைப்பைத் தொடங்க அவர் முடிவு செய்தார்.
தயாரிப்புகளுக்கான விற்பனைத் தளத்தை உருவாக்குவது என்ற அவரது ஆரம்பக்கால யோசனை கள யதார்த்தத்தை எதிர்கொண்டபோது கடினமாக இருந்தது. ஒரு பெண் விற்பனை செய்யக்கூடிய பொருளைத் தயாரிக்க 6 முதல் 7 மாத காலப் பயிற்சி தேவைப்பட்டது, அந்தப் பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு ஆதரவு தேவைப்பட்டது.

பீடித் தொழிலாளிப் பெண்களுக்கு கொற்றவை மூலம் பயிற்சி அளிக்கும் காருண்யா
பயிற்சி கட்டத்தின்போது அவர்களுக்கு உதவித்தொகை வழங்க அவர் முடிவு செய்தார். அதிர்ஷ்டவசமாக, மத்திய அரசு வாழை நாரில் பொருட்கள் செய்யும் பயிற்சியை வழங்கியது. அதில் 50 பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 30 பேர் கொற்றவை அமைப்பிலேயே தக்கவைக்கப்பட்டனர்.
கொற்றவை அமைப்பு ‘கிரேஸி கோகனட்’ என்ற சூழலியல் பிராண்டோடு இணைந்து பெண்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்தது. ஒரு கைவினைப் பொருள் நிபுணரும் இதில் உதவினார். இருப்பினும், தவறான தகவல்களால்தான் உண்மையான சவால்கள் வந்தன.
“பீடித் தொழிலாளர்கள் பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ பலன்களைப் பெற 10 ஆண்டுகள் பீடித் தொழிலாளியாக வேலை செய்ய வேண்டும் என்று பீடி தொழிற்சாலை உரிமையாளர்கள் பெண்களை நம்ப வைத்திருந்தனர். பட்டப்படிப்பு முடித்த பல பெண்கள் உட்பட பெரும்பாலானோர் இதை நம்பினர். அரசு இணையதளத்தைப் பயன்படுத்தித் தங்களது பிஎஃப் எண்ணைப் பயன்படுத்திப் பணத்தை எப்படி எடுப்பது என்று அவர்களுக்கு நாங்கள் கற்பித்துக் காட்ட வேண்டியிருந்தது,” என்று காருண்யா கூறுகிறார்.
அணிவகுத்த சவால்கள்...
பாரம்பரியமாக இந்தப் பெண்கள் வேலை செய்து வந்த தொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்தும் கொற்றவை குழுவினருக்கு எதிர்ப்புகள் வந்தன. 3,000-க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ள ஐந்து பெரிய பீடி தொழிற்சாலைகள் உள்ள மத்தளம்பாறையில், பயிற்சி நடத்துவதற்குக் இடம் கண்டுபிடிப்பதே சவாலாக இருந்ததாக தெரிவித்தார் காருண்யா.
“ஒருமுறை, பயிற்சி வகுப்பிற்காக ஒரு திருமண மண்டபத்தை நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், ஒரு தொழிற்சாலை உரிமையாளர், எங்களைன் பயிற்சியை நடக்கவிடாமல் தடுக்க, திருமணத்திற்குத் தேவை எனக் கூறி அந்த மண்டபத்தை முன்பதிவு செய்து விட்டார். இதனால் நாங்கள் பின்வாங்கி, ஒரு கோயில் வளாகத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கத் தேர்வு செய்தோம். அன்றிலிருந்து நாங்கள் வெவ்வேறு இடங்களைப் பயன்படுத்தி வந்தோம். இப்போது கொற்றவை வளர்ந்து விட்டதால் அது பெரிய பிரச்சனையாக இல்லை,” என்கிறார் காருண்யா.
எதிர்காலத்தில் மேலும் பல தடைகள் வரும் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், அவற்றை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறார்.
துளிர்க்கும் நம்பிக்கை...
கொற்றவை இப்போது 55 பெண்களுடன் நான்கு உற்பத்தி மையங்களை நடத்தி வருகிறது: மதளம்பாறையில் தேங்காய் ஓடு மையம், சுரண்டையில் வாழை நார் மையம், சங்கரன்கோவிலில் டெர்ராகோட்டா ஆபரண மையம் மற்றும் சிந்தாமணியில் உணவுப் பொருட்கள் மையம் ஆகியவை இயங்கி வருகின்றன. நறுமண மெழுகுவர்த்திகள் மற்றும் நல்வாழ்வுப் பொருட்களுக்கான ஒரு மையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.

கொற்றவை குழுவினர்
கடந்த 2025 ஜூன் மாதத்தில் கொற்றவை தனது இணையதளங்கள் மூலம் ஆர்டர்களைப் பெறத் தொடங்கியது. ஆனால், விற்பனை அளவு பெரியதாக இல்லை. காலப்போக்கில், பி2பி பிரிவு வேகமெடுக்கத் தொடங்கியது. மேலும் கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்காக நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை வரத் தொடங்கியது.
“நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது செலவினங்கள் இன்னும் அதிகமாகவே உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பரிசளிக்கும் பிரிவில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இரண்டு முன்னணி நிறுவனங்களிடம் இருந்து தலா 50 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க விற்பனை இருக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்கிறார் காருண்யா.
மேலும், கொற்றவை அமைப்பு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குத் தனது பொருட்களை விற்பனை செய்ய ‘சோபிதம்’ என்ற பிராண்டோடு கைகோர்த்துள்ளது. விற்பனை சீரானதும் மேலும் பல மையங்களைத் தொடங்க காருண்யா திட்டமிட்டுள்ளார்.
உண்மையான தாக்கம் என்ன?
இந்த கைவினைப் பொருட்களுக்குப் பின்னால் உள்ள பெண்களின் கதைகள் மூலமாகவே கொற்றவையின் உண்மையான தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர்களில் ஒருவர் அஞ்சலி. மூன்று குழந்தைகளின் தாயான இவரது வாழ்க்கை, ஒரு விபத்தில் கணவர் கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இழந்த பிறகு தலைகீழாக மாறியது. குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவராகவும், பராமரிப்பாளராகவும் இருந்த அஞ்சலி, பீடி சுற்றுவதன் மூலம் மாதம் ஈட்டிய 3,000 முதல் 4,000 ரூபாயைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றப் போராடினார். அவர் கொற்றவையில் சேர்ந்த பிறகு, அவரது வருமானம் இருமடங்கிற்கும் மேலாக உயர்ந்து மாதம் 8,000 முதல் 9,000 ரூபாயாக மாறியுள்ளது.
ஆனால் காருண்யாவைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது பொருளாதாரத்தையும் தாண்டியது.
“கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக அஞ்சலி மீண்டும் சிரிப்பதை மக்கள் பார்த்தனர். அவரை விஜய் டிவிக்கு அழைத்துச் சென்றோம், அவரது கிராமமே அவரை அங்கீகரித்தது, இன்று அவர் எங்குச் சென்றாலும் பெருமிதத்துடன் நடந்து செல்கிறார்,” என்கிறார் காருண்யா.
கொற்றவையில் சேருவதற்கு முன்பு, ஜீவா என்ற பெண் பீடி சுற்றி வாழ்வாதாரம் நடத்தி வந்தார். தனது கிராமத்தில் கிடைத்த ஒரே வேலை வாய்ப்பு அது என்பதால் தான் அதைச் செய்ததாக அவர் கூறுகிறார்.
“நான் பீடி சுற்றிக் கொண்டிருந்தபோது, நாங்கள் தயாரிக்கும் பொருட்கள் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை நான் அறிந்திருந்தேன். என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நான் பார்த்தேன், ஆனால் அப்போது எங்களுக்குக் கிடைத்த ஒரே வேலை அது என்பதால் அதைப் பற்றிப் பெரிதாக யோசிக்கவில்லை,” என்கிறார் ஜீவா.

இன்று, அவர் கொற்றவையின் தேங்காய் ஓடு கைவினைக் கலைஞராகப் பணிபுரிகிறார். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களைத் தன் கையால் செய்கிறார். வாழ்க்கை தனக்கு ஒரு புதிய நோக்கத்தைக் கொடுத்துள்ளதாக அவர் உணர்கிறார்.
அடுத்தடுத்த திட்டங்கள்
தற்போது, கொற்றவை ஒரு தனியார் லிமிடெட் நிறுவனமாக இயங்குகிறது, மேலும் காருண்யாவும் அவரது இணை நிறுவனரும் இதில் முதலீடு செய்து சுய முதலீட்டில் நடத்தி வருகின்றனர். இந்த லாப நோக்கமுள்ள நிறுவனத்துடன் சேர்த்து, காருண்யா ‘கொற்றவை ஃபவுண்டேஷன்’ அமைப்பை ஒரு பிரிவு 8 தொண்டு நிறுவனமாக நிறுவத் திட்டமிட்டுள்ளார், இது அரசுத் திட்டங்கள், சிஎஸ்ஆர் நிதி மற்றும் மானிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.
டிசம்பருக்குள் கார்ப்பரேட் பரிசளிப்பு மூலம் குறைந்தபட்சம் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை ஈட்ட வேண்டும் என்றும், அந்த லாபத்தை மேலும் பல கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்த வேண்டும் என்றும் காருண்யா விரும்புகிறார். அந்த லாபம் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மீண்டும் முதலீடு செய்யப்படும் என்று அவர் கூறுகிறார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவதை கொற்றவை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு கைவினைப் பொருட்களைத் தாண்டி அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள் மற்றும் பைகள் தயாரிப்பிலும் விரிவடையும் திட்டங்கள் உள்ளன. அதன் மூன்றாவது ஆண்டின் இறுதிக்குள் ஒரு முழுமையான நிலையான வாழ்வியல் பிராண்டாக மாறுவதே தங்களது இலக்கு, என தெளிவாக கூறினார் காருண்யா.
“தென்காசி மாவட்டம் ஆசியாவின் எஸ்டோனியாவாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எஸ்டோனியாவில் ஆண்களும் பெண்களும் நாட்டின் ஜிடிபி-க்கு சமமாகப் பங்களிக்கிறார்கள். தென்காசியும் பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தில் சமமாகப் பங்கெடுக்கும் ஒரு மாதிரி மாவட்டமாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்கிறார் காருண்யா.

