நந்தன் நிலேகனி தலைமையில் மத்திய அரசு நியமித்த தேர்வுச் சீர்த்திருத்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் விவரம்!
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் ஆறு பேர் கொண்ட உயர்மட்ட பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆறு உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் இதோ.
தேர்வு முறையை வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் ஆறு பேர் கொண்ட உயர்மட்ட பணிக்குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அந்த பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆறு உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:
நந்தன் நிலேகனி
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைவருமான நந்தன் நிலேகனி, இந்தியாவின் ஆதார் (UIDAI) டிஜிட்டல் அடையாளத் திட்டத்தின் வடிவமைப்பாளராவார். மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையான UPI உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றி, பரஸ்பர இணக்கத்தன்மை கொண்ட டிஜிட்டல் கட்டண அமைப்புகள் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.
1981-ஆம் ஆண்டு, பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸில் பணியாற்றிய வேலையை விட்டு விலகிய அவர், என். ஆர். நாராயண மூர்த்தி மற்றும் மேலும் ஐந்து பேருடன் இணைந்து இன்ஃபோசிஸை நிறுவினார்.
பணிக்குழுவில் முக்கியத்துவம்: மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேர்வுகளை மேலும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், திறன் மிக்கதாகவும் மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழிநடத்துவது.
எஸ். சோமநாத்
சிறந்த விண்வெளி விஞ்ஞானியான எஸ். சோமநாத், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) விண்வெளிப் பொறியியல் பயின்றார். பின்னர், ஐஐடி மதராசில் முனைவர் பட்டம் பெற்றார். 2022 முதல் 2025 வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலராகவும் பணியாற்றினார்.
பணிக்குழுவில் முக்கியத்துவம்: மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்ப அமைப்புகள் குறித்த தனது நிபுணத்துவத்தை தேர்வுக் குழுவுக்கு வழங்குவது.

தபன் தேகா
1988-ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான தபன் தேகா, 2022 ஜூன் முதல் 2026 ஜூன் வரை உளவுத்துறை (IB) இயக்குநராகப் பணியாற்றினார். அனுபவமிக்க உளவுத்துறை அதிகாரியான அவர், 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல், இந்திய முஜாஹிதீன் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய பணிகளில் பங்காற்றியுள்ளார்.
பணிக்குழுவில் முக்கியத்துவம்: வினாத்தாள் பாதுகாப்பு, தேர்வர்கள் அடையாளச் சரிபார்ப்பு, தேர்வு முடிவு செயலாக்கம் உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்தையும் பாதுகாப்பாக மாற்றக்கூடிய டிஜிட்டல் தீர்வுகளை ஆய்வு செய்து, தேர்வு பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த உதவுவது.
அனிதா கர்வால்
1988-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அனிதா கர்வால், 36 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவம் கொண்டவர். குறிப்பாக பள்ளிக் கல்வித் துறையில் விரிவான அனுபவம் பெற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை சிபிஎஸ்இ தலைவர் பதவியில் இருந்த அவர், பின்னர், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலராக பணியாற்றி, தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
2018-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ தலைவர் பதவியில் இருந்தபோது, வாரியத் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர் போராட்டங்களையும் அவர் எதிர்கொண்டார்.
பணிக்குழுவில் முக்கியத்துவம்: கல்விக் கொள்கை தொடர்பான தனது நிபுணத்துவத்தை வழங்குவது.
வி. காமகோடி
2022 முதல் ஐஐடி மெட்ராசின் இயக்குநராக உள்ள வி. காமகோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு நுண்செயலி (Shakti) உருவாக்கிய ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தியவர்.

ஐஐடி மெட்ராசின் முன்னாள் மாணவரான அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் அமைத்த செயற்கை நுண்ணறிவு (AI) பணிக்குழுவின் தலைவராகவும் உள்ளார். மேலும், உள்நாட்டு நுண்செயலி உருவாக்கம் தொடர்பான பல தேசியத் திட்டங்களையும் வழிநடத்தி வருகிறார்.
பணிக்குழுவில் முக்கியத்துவம்: கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவது.
அம்ரித் லால் மீனா
1989-ஆம் ஆண்டு பீகார் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அம்ரித் லால் மீனா, 36 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவம் கொண்டவர். இதில் 25 ஆண்டுகள் பீகார் அரசிலும், 11 ஆண்டுகள் மத்திய அரசிலும் பணியாற்றியுள்ளார். முன்னதாக பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலராகவும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலராகவும் இருந்த அவர், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (DPIIT) சிறப்புச் செயலாளர் (லாஜிஸ்டிக்ஸ்) கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார்.
பணிக்குழுவில் முக்கியத்துவம்: தேர்வு தொடர்பான லாஜிஸ்டிக்ஸ் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பில் தனது நிபுணத்துவத்தை வழங்குவது.

