ஒரே ஆண்டில் நீட் தேர்ச்சி: அசத்திய நெசவாளர் வீட்டு 3 சகோதரர்கள்!
நெல்லை அருகே நெசவுத் தொழிலாளியின் மூன்று மகன்கள் அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், இந்தாண்டு ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.
வாழ்க்கையில் உயர, பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள, சமூகத்தில் தங்களுக்கென ஒரு அந்தஸ்தைப் பெற ஏழைகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் கல்விதான். அதனால்தான் தனியாக அதிக பணம் கட்டி, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களைவிட, ஏழை மாணவர்கள் வைராக்கியத்துடன் படித்து, ஒவ்வொரு ஆண்டும் சாதனைகள் படைத்து வருகின்றனர்.
ஒரு கிராமத்தில் அல்லது ஒரு ஏழைக் குடும்பத்தில் இருந்து ஒரு மாணவரோ அல்லது மாணவியோ, மருத்துவக் கல்லூரிக்குச் சேர்ந்தாலே அது செய்தியாகி விடும். அப்படி இருக்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் அரசுப் பள்ளியில் படித்து, ஒரே ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க தேர்வானார்கள் என்றால், கேட்கவா வேண்டும்.
இந்த ஆச்சர்ய சம்பவம் நெல்லை மாவட்டத்தில்தான் நடந்துள்ளது.

(இடமிருந்து வலம்) சகோதரர்கள் தரண், வெங்கடஸ்ரீ மற்றும் அருண்
ஒரே கனவு கொண்ட 3 சகோதரர்களுக்கும்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளங்குழி கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவுத் தொழிலாளி ராம்குமார். இவருக்கு வெங்கட்ஸ்ரீ (22), அருண் (18) மற்றும் தரண் (18) என மூன்று மகன்கள். இவர்களில் அருணும், தரணும் இரட்டையர்கள். இவர்கள் மூன்று பேருமே வெள்ளாங்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்.
சகோதரர்கள் மூன்று பேருக்குமே சிறுவயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்து வந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற வெங்கட்ஸ்ரீ, நீட் தேர்வில் 300 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். எனவே அப்போது அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
எனவே, 2025ம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதினார். அப்போது 420 மதிப்பெண்கள் பெற்றும், அவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. மனம் தளராத வெங்கட்ஸ்ரீ, இந்தாண்டு விடாமுயற்சியுடன் மீண்டும் நீட் தேர்வை எழுதி, இம்முறை 440 மதிப்பெண்கள் பெற்றார்.
இதற்கிடையே, அவரது இரட்டை சகோதரர்களான அருணும், தருணும் பிளஸ் டூ முடித்து, இந்தாண்டு நீட் தேர்வை எழுதினர். அத்தேர்வில் அவர்கள் முறையே, 511 மற்றும் 494 மதிப்பெண்களைப் பெற்றனர்.

3 மகன்களுக்கும் மருத்துவ சீட்
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில், சகோதரர்கள் மூன்று பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்குக் கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.
ஒரே ஆண்டில் தனது மூன்று மகன்களும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளதாக, இம்மாணவர்களின் தந்தை ராம்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரச் சூழல் உட்பட பல்வேறு சவால்களைக் கடந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள், ஒரே ஆண்டில் மருத்துவக் கல்விக்குள் நுழைந்துள்ள நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளப் பக்கங்களில் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

