தூத்துக்குடியில் விண்வெளி வாகன பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசுடன் IN-SPACe ஒப்பந்தம்!
தூத்துக்குடி அல்லிக்குளத்தில் அமையும் இந்த மையம், மாநிலத்தில் விண்வெளி உற்பத்திக்கான உலகத்தரமான சூழலை உருவாக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும். இந்த ஒப்பந்தம் படி, இன்-ஸ்பேஸ் ரூ.100 கோடி மதிப்பிலான கருவிகளை வழங்கும்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில், விண்வெளி வாகனங்கள் பொது தொழிநுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் இன்–ஸ்பேஸ் (IN-SPACe) நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை தொழில் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் டிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தா.கார்த்திகேயன் மற்றும் இன்–ஸ்பேஸ் நிறுவனம் சார்பில் இணைச் செயலாளர் அனுபம் ஆனந்த் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

குஜராத்தில் நடைபெற்ற 10வது இன் ஸ்பேஸ் தொழில் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது மாநிலத்தில் விண்வெளி உற்பத்திக்கான உலகத்தரமான சூழலை உருவாக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும், என இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் படி, இன்-ஸ்பேஸ் ரூ.100 கோடி மதிப்பிலான கருவிகளை வழங்கும்.
இந்த மையம் அதிர்வு, அதிர்ச்சி, வெப்ப ஒற்றிடம், மின் சார்ந்த குறுக்கீடு/ ஒத்திசைவு, அழுத்தம் மற்றும் ஓட்டம் , சோதனை, ஏவுகனை வாகன கூட்டமைப்பு, உதிரிபாகங்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான அதிநவீன சோதனை மற்றும் தர நிரணய வசதிகளை வழங்கும். இதற்கான செலவு மற்றும் நேரத்தையும் குறைக்கும்.
குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள ஏவுகணை தளம் அருகே அமைய உள்ள இந்த தொழிற்பூங்கா, ஏவுகணை வாகனக்கூறுகள், செயற்கைகோள் அமைப்புகள், வான்வழி மின்னணு அமைப்புகள், பிற முக்கிய விண்வெளி உபகரணங்களை உற்பத்தி செய்யும்.
இந்த முயற்சி, தனியார் முதலீடுகளை ஈர்க்க, உயர்தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்நாட்டு தொழில்முனைவு சூழலை வலுவாக்கி, விண்வெளித் துறையில் புதுமை முயற்சிகளை அதிகமாக உருவாக்க உதவும், என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய தொழில்கள் துவங்க வழி செய்வதுடன், உள்நாட்டுத்திறன்களை மேம்படுத்த, உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் போட்டித்திறனை அதிகரிக்க உதவும்.
இந்த வசதி தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாக நிலை நிறுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan

