முதலமைச்சர் விஜய் தலைமையில் 4 சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் - தமிழ்நாட்டில் 2,920 பணிகள் உருவாக வாய்ப்பு!
சுவிட்சர்லாந்த் நிறுவனத்தின் ஜிசிசி மையம், ஜெர்மனியைச் சேர்ந்த Nordex நிருவன R&D மையம், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் வளாகம் மற்றும் தென் கொரியாவின் வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான MotiveLink-இன் தொழிற்பூங்கா அமைப்பதற்கான 4 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.
சென்னையில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் புதிய முதலீடுகள் மூலம் 2,900-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும், என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி உலகளாவிய நிறுவனமான 'Chubb', சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்க உள்ளது. இந்த மையம் மூலம் சுமார் 220 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஜெர்மனியைச் சேர்ந்த 'நார்டெக்ஸ்' (Nordex) நிறுவனம், சென்னையில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை நிறுவவுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த இரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மட்டும் மொத்தம் 1,220 உயர்ந்த ஊதியம் வழங்கும் பணியிடங்கள் உருவாக உள்ளன.

இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை மாநகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என அரசு தெரிவித்துள்ளது. புத்தாக்கம் சார்ந்த தொழில் வளர்ச்சி, அறிவுசார் முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநில அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த முதலீடுகள் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia – UWA), பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) 2023 ஒழுங்குமுறைகளின் கீழ், இந்தியாவில் தனது முதல் வளாகத்தை சென்னை வேளச்சேரியில் நிறுவ உள்ளது. தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகம் என்ற பெருமையையும் இது பெறுகிறது.
1911-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-இல் 77-வது இடத்தைப் பெற்றுள்ளது. சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில், ₹125 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இந்த வளாகம் மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தொழில்துறை அமைச்சர் கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க் (MotiveLink), காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ₹300 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முதலீடுகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான முன்னணி மையமாக தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாநில அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

