‘தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்’ - UmagineTN- 2026 உச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின்
தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும், தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் சார்பில் நடைபெற்ற 'UmagineTN- 2026' தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நேற்று (08.01.2026) தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர்,
“தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கானது மட்டுமல்ல, அது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இங்குள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது,” எனப் பேசினார்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல்கல்
‘UmagineTN- 2026' மாநாட்டை தொடங்கி வைக்க வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனித ரோபோ கைகொடுத்து வரவேற்றது. இந்த மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், EROS Gen AI, Better Computer works Inc, Phantom Digital Effects Limited, Rewin Health, Cube84, WeLoadin Sudio LLP பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணமாக இந்த இரண்டு நாள் மாநாடு அமையும் என்று நம்புவதாக’ தெரிவித்தார்.
மேலும் அவர்,
“தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு படி முன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதை நிறைவேற்றுவது போல இந்த மாநாடு அமைந்திருக்கிறது,” என்றார்.
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இந்த மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். நாம் ஆட்சிக்கு வந்த பிறகே இந்த மாநாட்டை தொடங்கினோம். இன்று அது பெரும் வளர்ச்சியை அடைந்திருப்பது மிகுந்த பெருமையை அளிக்கிறது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மையமாக தகவல் தொழில்நுட்பம் விளங்குகிறது. அந்த வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இந்த மாநாடு செயல்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான சக்தியாக நாம் பார்க்க வேண்டும்.
அனைத்துத் துறைகளும் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கின்றன. அறிவியல் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு செயல்படுகிறது. தொழில்நுட்பத்தின் பயன் அனைவருக்கும் சமமாக சென்றடைய வேண்டும். புதுமையான நவீன தொழில்நுட்பங்களில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய திறன் மையங்களின் தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது.
32 மாவட்டங்கள் மென்பொருள் ஏற்றுமதி
தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மாநிலத்தின் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது, என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளே திராவிட மாடல் அரசின் வெற்றியை எடுத்துக்காட்டுகின்றன.
தமிழ்நாட்டின் இலக்குகள் தெளிவானது. புதுயுகத்தின் டெக்னாலஜியில் தமிழ்நாடுதான் டாப்பில் இருக்க வேண்டும்! ஆனால் வளர்ச்சியில் யாரும் விடுபட்டு விடக்கூடாது. அறிவானாலும் தொழில்நுட்பமானாலும் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்.
இன்றைய UmagineTN வருங்காலத்தை நோக்கிய நம் பயணத்திற்கான பிரகடனம். நம் நாளைய வெற்றிக்கான தொடக்கம், என இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டில் உரையாற்றினார்.

