FY24-ல் உச்சத்தை எட்டிய UPI மோசடிகள்; 2025ல் குறையும் அறிகுறிகள் தெரிவதாக நாடாளுமன்றத்தில் தரவு!
மார்ச் 2024-இல் முடிந்த FY24-ல், UPI தொடர்பான மோசடிகள் எண்ணிக்கையும், சம்பந்தப்பட்ட தொகையும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக பதிவாகின
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் UPI (Unified Payments Interface) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலில் ஏற்பட்ட மோசடிகள், 2023–24 நிதியாண்டில் (FY24) உச்சத்தை எட்டிய பின்னர், அதன் பின் குறையும் போக்கை காட்டுகின்றன என்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
மார்ச் 2024-இல் முடிந்த FY24-ல், UPI தொடர்பான மோசடிகள் எண்ணிக்கையும், சம்பந்தப்பட்ட தொகையும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக பதிவாகின. அந்த ஆண்டில் 13.42 லட்சம் UPI மோசடி சம்பவங்கள் பதிவாகி, இதில் ரூ.1,087 கோடி சம்பந்தப்பட்டுள்ளது. இது FY22-ஐ ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்வாகவும், முந்தைய ஆண்டைவிட சம்பவ எண்ணிக்கையில் இரட்டிப்பாகவும் உயர்ந்துள்ளது. ஆனால் அதன் பின்னர் நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதாக நாடாளூமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தரவு ஒன்று கூறுகிறது.
FY25-ல், மோசடி சம்பவங்கள் 12.64 லட்சமாக குறைந்ததுடன், சம்பந்தப்பட்ட தொகை ரூ.981 கோடியாக சரிந்தது. நடப்பு FY26-ல் (நவம்பர் வரை கிடைத்த தரவின்படி), 10.64 லட்சம் சம்பவங்கள் மற்றும் ரூ.805 கோடி மதிப்பிலான மோசடிகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், மோசடிகள் இன்னும் அதிகமாக இருந்தாலும், அதன் வளர்ச்சி வேகம் தணிந்து, குறைந்து கொண்டே வருவது தெளிவாகிறது.
2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், புகாரளிக்கப்பட்ட மோசடி வழக்குகளில் 22% வழக்குகள் 7 நாட்களுக்குள் 92% வழக்குகள் 30 நாட்களுக்குள் மீட்பு அல்லது நிராகரிப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
எனினும், மொத்த மோசடி சார்ஜ்பேக் வழக்குகளில் சுமார் 6% மட்டுமே வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பணம் மோசடி செய்யப்பட்ட பிறகு அதை மீட்பதில் உள்ள சவால்கள் வெளிப்படுகின்றன.
இந்த தகவல்கள், சைபர் குற்றங்கள் மற்றும் UPI மோசடிகள் அதிகரிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மூலம் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டன. டிஜிட்டல் கட்டணங்களின் வேகமான வளர்ச்சியோடு மோசடிகளும் அதிகரித்ததை அரசு ஒப்புக்கொண்டாலும், அவற்றை கட்டுப்படுத்த பல கட்டுப்பாட்டு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
ரிசர்வ் வங்கி (RBI), FY25-ல் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டலிஜென்ஸ் பிளாட்ஃபாரம் ஒன்றை அமைக்க முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு இடையே நேரடி முறையில் பகிரப்படும்.
எந்த தரவுகள் பகிரப்பட வேண்டும், மோசடி எச்சரிக்கைகள் மைய மோசடி அறிக்கை அமைப்புக்கு எவ்வாறு அனுப்பப்பட வேண்டும் என்பதைக் குறிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
NPCI நடவடிக்கைகள்
UPI-யை இயக்கும் NPCI கடந்த இரண்டு ஆண்டுகளில் பல விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அவற்றில்:
- கடுமையான டிவைஸ் பைண்டிங்
- UPI PIN மூலம் கட்டாய இரு-அடுக்கு அங்கீகாரம்
- தினசரி பரிவர்த்தனை வரம்புகள்
- மோசடிக்கு அதிக வாய்ப்புள்ள பயன்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்
மேலும், AI மற்றும் மெஷின் லெர்னிங் அடிப்படையிலான நேரடி கண்காணிப்பு அமைப்புகள் மூலம் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டு, வங்கிகள் அவற்றை தடுக்க அல்லது நிராகரிக்க முடியும்.
சமீப காலத்தில், NPCI UPI API பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிக அடிக்கடி பயன்படுத்தப்படும் API-களான பேலன்ஸ் விசாரணை, கணக்கு பட்டியல் பெறுதல், பரிவர்த்தனை நிலை சரிபார்ப்பு ஆகியவற்றிற்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன; தொடர்ந்து கோரிக்கைகள் விடுப்பதற்கு இடையில் கட்டாய இடைவெளி (cooldown period) அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பரிவர்த்தனைக்கு முன் பெறுநரின் பதிவு செய்யப்பட்ட பெயர் மற்றும் பரிவர்த்தனை ஐடியை காட்டுவது கட்டாயமாக்கப்பட்டு, தவறான அல்லது போலி பரிவர்த்தனைகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: முத்துகுமார்

