'UPI பயனர்களின் எண்ணிக்கை 100 கோடியாக உயரும்' - ரிசர்வ் வங்கி துணை கவர்னர்!
உலகின் மொத்த சில்லறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சுமார் 50% இந்தியாவில் நடைபெறுகின்றன.
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளமான யுபிஐ (UPI) பயனர்களின் எண்ணிக்கை, தற்போதைய 40 கோடியிலிருந்து 100 கோடியாக (1 Billion) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை கவர்னர் டி.ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 'உலகளாவிய உள்ளடக்கிய நிதி இந்தியா உச்சிமாநாட்டில்' (Global Inclusive Finance India Summit) உரை ஆற்றிய ஆர்பிஐ துணை கவர்னர் சில முக்கிய அம்சங்கள் பகிர்ந்து கொண்டார்.
உலகின் மொத்த சில்லறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சுமார் 50% இந்தியாவில் நடைபெறுகின்றன.
“இந்தியா முன்னிலையில் இருந்தாலும், ஒரு நபர் மேற்கொள்ளும் சராசரி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் வளர்ந்த நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. உதாரணமாக, கென்யாவில் ஒரு நபர் மேற்கொள்ளும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவை விட இரண்டு மடங்கு அதிகம்.,” என்றார்.
யுபிஐ தொழில்நுட்பம் நாட்டின் நிதி கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, என்று கூறிய அவர், வீட்டில் இருக்கும் ஒரு இல்லத்தரசி கூட யுபிஐ மூலம் தனது சிறுதொழிலை பாதுகாப்பாக நடத்த முடிகிறது.
”டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படும் 10% வளர்ச்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.3% உயர்வை ஏற்படுத்தும் என்ற ஆய்வு முடிவுகளை பகிர்ந்து கொண்டார்.”
அசுர வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு
2017-18 நிதியாண்டில் ரூ.2,071 கோடியாக இருந்த மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு, 2024-25 நிதியாண்டில் ரூ. 22,831 கோடியாக உயர்ந்துள்ளது. இது 41% வருடாந்திர கூட்டு வளர்ச்சியாகும் (CAGR).
”இந்தியாவின் மொத்த சில்லறை பணப்பரிவர்த்தனைகளில் 81% யுபிஐ மூலமே நடைபெறுகின்றன. இந்தியாவின் யுபிஐ தற்போது உலக நாடுகளுடனும் இணைக்கப்பட்டு வருகிறது," என்றார்.
டிஜிட்டல் மோசடிகளைக் கட்டுப்படுத்த 'மியூல் ஹண்டர்' (Mule Hunter) உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறதாக பகிர்ந்து கொண்டார்.
ரிசர்வ் வங்கி, இருதரப்பு அடிப்படையில் பிற நாடுகளின் ஃபாஸ்ட் பேமெண்ட் சிஸ்டம்கள் (Fast Payment Systems – FPS) உடன் UPI இணைப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து வரும் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பணப்பரிவர்த்தனைகள் சாத்தியமாகின்றன. தற்போது, சிங்கப்பூருடன் இந்த இணைப்பு 2023 பிப்ரவரி மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் நேபாளத்துடன் இதேபோன்ற திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் UPI செயலிகளை QR கோடு மூலம் ஏற்கும் வசதி பூடான், பிரான்ஸ், மொரீஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், வெளிநாடுகளில் இருக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் வணிகப் பயணிகள் தங்களுடைய இந்திய UPI செயலிகளை பயன்படுத்தி அங்குள்ள வணிகர்களுக்கு பணம் செலுத்த முடிகிறது.

