இந்தியாவில் 3 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் Vinfast - 2026ல் ஷோரூம்களை அதிகரிக்கத் திட்டம்!
வின்ஃபாஸ்ட் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளூர் உற்பத்தியைத் தொடங்கியதுடன், இதுவரை VF-6 மற்றும் VF-7 என்ற மின்சார எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார வாகன உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட் இந்தியா, நாட்டில் மூன்று புதிய மின்சார வாகன மாடல்களை அறிமுகப்படுத்தவும், தனது விற்பனை மற்றும் சேவை கட்டமைப்பை இந்த ஆண்டில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாபன் கோஷ் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மாடல்கள் வெறும் தொழில்நுட்ப விவரங்களுக்காக அல்லாமல், இந்திய நுகர்வோரின் உண்மையான பயன்பாட்டு பழக்கங்கள் மற்றும் பிரீமியம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. விலை உணர்வுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குவதே இதன் நோக்கம், என அவர் கூறினார்.
“முதலில் ஏழு பேர் அமரக்கூடிய எம்பிவி மாடலை அறிமுகப்படுத்த உள்ளோம். இது குடும்ப பயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் ஏற்ற, பிரீமியம் தன்மையுடனும் நடைமுறைபூர்வமாகவும் உருவாக்கப்பட்ட மின்சார எம்பிவி,” என்று கோஷ் தெரிவித்தார். இந்தியாவில் மின்சார வாகனப் பயன்பாடு தனிப்பட்ட தேர்வாக மட்டுமல்லாமல், பகிர்வு மற்றும் ஃப்ளீட் பயன்பாட்டாகவும் வளர்ந்து வருவதாக வின்ஃபாஸ்ட் கருதுவதை இது பிரதிபலிக்கிறது என்றார்.
இதற்குப் பிறகும், பல்வேறு பிரிவுகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் கூடுதல் மாடல்கள் அறிமுகமாகும் என்றும், தற்காலிக போக்குகளைத் துரத்துவதற்குப் பதிலாக பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால மதிப்பு போன்ற அடிப்படை அம்சங்களிலேயே நிறுவனத்தின் கவனம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
வின்ஃபாஸ்ட் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளூர் உற்பத்தியைத் தொடங்கியதுடன், இதுவரை VF-6 மற்றும் VF-7 என்ற மின்சார எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 இறுதிக்குள் முக்கிய நகரங்களில் 35 ஷோரூம்களை நிறுவியுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 75 ஆக உயர்த்துவதே இலக்கு, என்றும் கோஷ் தெரிவித்தார்.
தற்போது மெட்ரோ நகரங்கள் மற்றும் ஒன்றாம் நிலை இரண்டாம் நிலை நகரங்களில் வின்ஃபாஸ்ட் இருப்பதாகவும், இனி மூன்றாம் அடுக்கு மற்றும் நான்காம் அடுக்கு நகரங்களிலும் ஷோ ரூம்களை விரிவுபடுத்துவதோடு, அதிக விற்பனை அளவு கொண்ட பெரிய நகரங்களிலும் ஷோரூம் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், வின்க்ரூப் நிறுவனத்தின் பசுமை மொபிலிட்டி சூழல் கூட்டாளிகளுடன் இணைந்து சார்ஜிங் உட்கட்டமைப்பு மற்றும் முழுமையான மின்சார ரைடு-ஹெய்லிங் தீர்வுகளை இந்தியாவில் கொண்டு வர வின்ஃபாஸ்ட் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மின்சார வாகனங்கள் வாங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தினசரி வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் நிலை உருவாகும், என்றார்.
இது வின்ஃபாஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் முழு மின்சார வாகன சந்தைக்கும் முக்கியமானதாக இருக்கும் என்றும்,
“மின்சார வாகனங்கள் பெரிய அளவில் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படுவதை மக்கள் பார்க்கும்போது, அவர்களின் தயக்கம் குறையும். அத்தகைய தினசரி பயனாளர்களே மின்சார வாகனங்களின் சிறந்த தூதர்களாக மாறுவார்கள்,” என்றும் கோஷ் கூறினார்.
