இன்ஸ்டா போஸ்ட் மூலம் கோடிகளை ஈட்டும் கோலி, பிரியங்கா...!
சோஷியல் மீடியாவில் போட்டோக்களை பதிவேற்றுவது பொழுதுபோக்கிற்கு அல்ல இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை வைத்துள்ள விராட் கோலியும், பிரியங்கா சோப்ராவும் ஒரு விளம்பர போட்டோவிற்கே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்.
திரைத்துறையினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது திறமையாலும், ஃபிட்னஸ் விஷயங்களாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களாக வைத்துள்ளார்.
கோலியை இன்ஸ்டாவில் 38.2 மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்கின்றனர். இதே போல பாலிவுட், ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் உலக அளவில் 43.4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்.
விராட்டும், பிரியங்காவும் வைத்துள்ள ஃபாலோயர்களின் எண்ணிக்கையை வைத்து, அவரவர்கள் வெளியிடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தங்கள் விளம்பரப் பதிவுகள் மூலம் பிரபலங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள 2019 இன்ஸ்டாகிராம் பணக்காரப் பட்டியலில் விராட் கோலியும், பிரியங்கா சோப்ராவும் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி அமெரிக்க தொழிலதிபரும் தொலைக்காட்சி நெறியாளருமான கைலி ஜென்னர் முதலிடத்தில் உள்ளார்.
ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒவ்வொரு இன்ஸ்டா பதிவிற்கும் ஜென்னர் 1.266 மில்லியன் டாலர் பணம் வசூலிக்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 8.74 கோடியாகும். ஜென்னருக்கு 141 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். 2வது இடத்தில் பாடகி அரியானா கிராண்டே (Ariana Grande) 996,000 டாலர் (சுமார் ரூ .6.87 கோடி) வசூலிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 23வது இடத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஒவ்வொரு பதிவிற்கும் 196,000 டாலர்கள் (சுமார் ரூ. 1.35 கோடி) வசூலிக்கிறார்.
விராட் கோலி பிரபலமான விளையாட்டு பிராண்டுகளுடன் பார்ட்னர்ஷிப் வைத்து விளம்பர பதிவுகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்கு 271,000 டாலர்கள் (சுமார் ரூ. 1.87 கோடி) வசூலிக்கிறார்.
37 வயதான இந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார், இன்ஸ்டாவில் 43 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். 2019 இன்ஸ்டாகிராம் பணக்கார பட்டியலில் பிரியங்கா சோப்ரா 19வது இடத்தை பிடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா பல ஸ்கின்கேர் பிராண்டு மற்றும் பியூட்டி பிராண்டுகளுடன் இணைந்து விளம்பர பதிவுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி