‘டாடா’வுக்குப் பிறகு என்.சந்திரசேகரன் என்ன செய்யப் போகிறார்? அடுத்த பயணத்துக்கான 5 சாத்தியக் கூறுகள்!
சந்திரசேகரன் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதையும் இதுவரை முடிவு செய்ததாக எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், அதற்கான 5 சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன.
2009-2010-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் அப்போதைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த என்.சந்திரசேகரன், நிதி முடிவுகள் வெளியீட்டிற்குப் பிந்தைய ஒரு நேர்காணலில் பங்கேற்றார்.
அந்த உரையாடலின் முடிவில், ‘வேலைப் பலுவிலிருந்து விடுபட்டு ஓய்வெடுக்க என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு சந்திரசேகரன் அளித்த பதில்:
“நான் சமீபத்தில் ஒரு வார கால மலையேற்றச் சுற்றுலா சென்று வந்தேன். அதைவிடக் கூடுதல் நாட்கள் ஓய்வெடுத்தால், எனக்கு ஒருவித படபடப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டு, மீண்டும் பணிக்குத் திரும்பவே மனம் துடிக்கும்.”
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான இந்தச் சம்பவத்தின் சில விவரங்கள் காலப்போக்கில் மங்கியிருக்கலாம். ஆனால், சந்திரசேகரன் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க விரும்புபவர் என்பது புலப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு அவர் அளித்த மற்றொரு நேர்காணலில் கூறியது:
“சொந்த வாழ்க்கைக்காகவும், தொழில்முறை வாழ்க்கைக்காகவும் தனித்தனியாக இரண்டு ‘செய்ய வேண்டிய பணிகள்’ பட்டியல்களை வைத்திருக்க வேண்டும் என்று நான் நம்பவில்லை. உங்களிடம் ஒரே ஒரு பட்டியல் மட்டுமே இருக்க வேண்டும். அதையும் மிகவும் சுருக்கமாக வைத்திருக்க வேண்டும்.”
அன்று அவர் உதிர்த்த அந்தத் தத்துவம் இப்போது மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
2027 பிப்ரவரி 20 அன்று தனது தற்போதைய பதவிக் காலம் முடிவடையும்போது, டாடா சன்ஸ் தலைவராக மற்றொரு பதவிக் காலத்தை நாடப்போவதில்லை என்று சந்திரசேகரன் முடிவு செய்துள்ளார். எனவே, டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை வாழ்க்கைக்குப் பிறகு, சந்திரசேகரனின் அடுத்தப் பட்டியலில் என்ன இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்திரசேகரன் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதையும் இதுவரை முடிவு செய்ததாக எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், அதற்கான 5 சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன. அவை:
1. ராமதுரை, நந்தன் நிலேகணி பாணியிலான பொது நிறுவன சேவை:
சந்திரசேகரனின் மிக முக்கியமான இரண்டாவது பயணம் என்பது மீண்டும் ஒரு கார்ப்பரேட் நிறுவனப் பணியாக இருக்காது என்பதே சாத்தியமான ஒன்றாகும். 1997 முதல் 1999 வரை, எஸ்.ராமதுரையின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றினார் சந்திரசேகரன். அந்த காலகட்டத்தில், 2009-ஆம் ஆண்டில் ராமதுரைக்குப் பிறகு டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக, வாடிக்கையாளர் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் நிறுவன விரிவாக்கம் ஆகியவற்றில் அவர் பெரும் அனுபவத்தைப் பெற்றார்.
டிசிஎஸ் நிறுவனத்திற்குப் பிறகு ராமதுரையும் அப்படியே ஓய்வெடுத்துவிடவில்லை. இப்போது 81 வயதாகும் அவர், சிவில் சர்வீஸ் திறன் மேம்பாட்டு முயற்சியான ‘மிஷன் கர்மயோகி’யின் மையப் புள்ளியாக விளங்கும் அரசு சார்ந்த அமைப்பான ‘கர்மயோகி பாரத்’ நிறுவனத்தின் தலைவராகவும், ‘பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்ச்’ அமைப்பின் வாரியத் தலைவராகவும் உள்ளார்.
ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்திய அனுபவத்தைக் கொண்டு, அந்த நிர்வாகத் திறன்களை பிற பொதுத் துறைத் துறைகளில் செயல்படுத்துவது என்ற ஒரு முன்மாதிரியை இது வழங்குகிறது.
நந்தன் நிலேகணி மற்றொரு முன்மாதிரியைத் தருகிறார். அவர் இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகி, UIDAI தலைவராகப் பொறுப்பேற்று, திட்டத்தின் தொடக்கக் காலத்தை முன்னெடுத்தார். மத்திய அரசு தொடர்ந்து அவரைப் பொதுப் பணிகளுக்கு அழைத்து வருகிறது. சமீபத்தில் தேர்வுச் சீர்திருத்தங்கள் தொடர்பான உயர்நிலைக் குழுவை வழிநடத்த அவரை நியமித்தது.
சந்திரசேகரன் இவ்விரண்டின் கூறுகளையும் ஒன்றிணைக்க முடியும். ஓர் அரசு மிஷன், ஓர் கல்வி நிறுவனம், ஒரு தொழில்நுட்ப வாரியம் அல்லது கல்வி, திறன் மேம்பாடு அல்லது மேம்பட்ட உற்பத்தியில் கவனம் செலுத்தும் சொந்த நிறுவனம் என எதுவாகவும் அது இருக்கலாம். அவரது டிசிஎஸ் காலத்திலிருந்தே இத்தகைய பணிகள் அவருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதற்கான குறிப்புகள் உள்ளன.
2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட TCS iON அமைப்பின் முதன்மை வடிவமைப்பாளராக சந்திரசேகரன் இருந்தார். இது இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கிளவுட் அடிப்படையிலான தளமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் கல்வி, ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீடுகளுக்கு விரிவாக்கப்பட்டது.
பாஸ்போர்ட் சேவா திட்டமும் இவரது டிசிஎஸ் சிஇஓ பதவிக் காலத்தில் நாடு தழுவிய அளவில் விரிவாக்கப்பட்டது. இத்திட்டம் அவர் சிஇஓ ஆவதற்கு முன்பே தொடங்கப்பட்டு, 2008-ல் டிசிஎஸ் சேவை வழங்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், மே 2010-ல் சோதனைகள் தொடங்கி, ஜூன் 2012-க்குள் அனைத்து 77 பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களும் செயல்பாட்டிற்கு வந்தன.
சஹஸ்ராம்ஷு டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநருமான சித்தார்த் பை, சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டு இன்னும் ஒரு படி மேலே சென்றார். சந்திரசேகரனை பக்கவாட்டு நுழைவு மூலம் மூத்த அமைச்சராக அரசாங்கத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். சந்திராவுக்கு முறையான அரசாங்கப் பதவி தேவையா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரியவில்லை.
2. ரத்தன் டாட்டா வழியில் ‘ஸ்டார்ட்-அப் உறுதுணை’கள்:
பாம்பே ஹவுஸுக்கு மிக அருகில் மற்றொரு முன்மாதிரியும் உள்ளது. டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ரத்தன் டாட்டா இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பின் மிக முக்கியமான தனிநபர் ஆதரவாளர்களில் ஒருவராக மாறினார். ஓலா, பேடிஎம், ஸ்னாப்டீல், அர்பன் லேடர், புளூஸ்டோன், ஃபர்ஸ்ட்கிரை மற்றும் கார்தேகோ போன்ற பல முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவை அவர் உருவாக்கினார்.
சந்திரசேகரனின் ஸ்டார்ட்-அப் முதலீட்டு பாணி மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும். செயற்கை நுண்ணறிவு, டீப்டெக், மேம்பட்ட உற்பத்தி, செமிகண்டக்டர்கள், என்டர்பிரைஸ் மென்பொருள் அல்லது காலநிலை உள்கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கி அவர் நகரக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது.
இந்தியாவில் செக் எழுதி முதலீடு செய்யக்கூடிய மனிதர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிர்வகித்து, அரசாங்கங்கள் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்து, பல பில்லியன் டாலர் மூலதனச் செலவினத் திட்டங்களை மேற்பார்வையிட்டு, பல தொழில்நுட்ப சுழற்சிகளைக் கடந்து வந்த அனுபவம் கொண்டவர்கள் மிகச் சிலரே.
ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை பெரிய நிறுவனமாக உயர்த்த முயலும் ஒரு நிறுவனருக்கு, சந்திரசேகரனின் நிர்வாக அனுபவமும் வழிகாட்டுதலும் விலைமதிப்பற்றதாக இருக்கும்.
3. இந்திய அளவிலான செயற்கை நுண்ணறிவு மிஷன்:
பொதுச் சேவை என்பது மிகவும் பரந்ததாக இருந்தால், சந்திரசேகரனுக்கு ஒரு குறிப்பிட்ட பணி வழங்கப்படுவதைக் கற்பனை செய்யலாம்: அதுதான் தேசிய ஏஐ உள்கட்டமைப்பு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ‘இந்தியா ஏஐ இம்பேக்ட் உச்சிமாநாடு’ நிகழ்வில், ஏஐ தொழில்நுட்பத்தை ‘அறிவின் உள்கட்டமைப்பு’ என்று விவரித்தார் சந்திரசேகரன். மேலும் ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் ஏஐ கருவிகளை ஒப்படைப்பதே முதன்மை மிஷனாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதன் அனைத்து நிலைகளிலும் அவருக்கு அரிய அனுபவம் உள்ளது. டிசிஎஸ் அவருக்கு மென்பொருள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனப் பார்வையைத் தருகிறது, டாடா எலக்ட்ரானிக்ஸ் அவருக்கு செமிகண்டக்டர் உற்பத்தித் துறையின் அனுபவத்தை அளிக்கிறது. மேலும், குழுமத்தின் மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு அமைப்புகள் கணக்கீட்டு வசதிகளின் மிகப்பெரிய இயற்பியல் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
சிப்கள், அமைப்புகள், ஆற்றல் மற்றும் பயன்பாடுகள் என இந்தியாவின் ஏஐ வாய்ப்புகள் பரந்து விரிந்து கிடப்பதாகச் சந்திரசேகரனே விவரித்துள்ளார். இந்தியாவில் ஏற்கெனவே ‘இந்தியா ஏஐ மிஷன்’, செமிகண்டக்டர் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை உள்ளன. இப்போது உள்ள சவால் இவற்றைச் செயல்படுத்துவதுதான். சிப்கள், மின்சாரம், வழிமுறைகள் மற்றும் திறமைகளை இணைத்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே அந்தச் சவால்.
வெறும் ஆலோசனைக் குழுக்களில் உட்காருவதை விட, தெளிவான இலக்குகளைக் கொண்ட ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட தேசிய மிஷன் சந்திரசேகரனின் இயல்புக்குப் கச்சிதமாகப் பொருந்தும்.

4. குளோபல் பிரைவேட் ஈக்விட்டி நிறுவன ஆப்பரேட்டிங் பார்ட்னராக மாறுதல்:
உலகளாவிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுக்கு, முதலீட்டுக் குழுக்களில் வெறுமனே உட்காருபவர்களைத் தாண்டி பல விஷயங்களைச் செய்யக்கூடிய நிர்வாகிகள் தேவைப்படுகிறார்கள். வணிகங்களை மாற்றியமைக்கவும், மூலதனத்தைப் பிரித்தளிக்கவும், மேலாண்மைக் குழுக்களை உருவாக்கவும், தொழில்நுட்ப மாற்றங்களைக் கையாளவும் கூடிய மனிதர்கள் அவர்களுக்குத் தேவை.
சந்திரசேகரன் அளவுக்குப் பரந்த அனுபவம் கொண்ட நிர்வாகிகள் மிகவும் குறைவு. அவர் ஒரு உலகளாவிய ஐடி சேவை நிறுவனத்தை நடத்தியுள்ளார். பின்னர், விமானப் போக்குவரத்து, எஃகு, வாகனங்கள், மின்சாரம், ஹோட்டல்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் சார்ந்த வணிகங்களை உள்ளடக்கிய குழுமத்தின் தலைவராக இருந்துள்ளார்.
ஏர் இந்தியா வாரிய உறுப்பினராக சந்திரசேகரனை நெருக்கமாகக் கவனித்த எச்யுஎல் முன்னாள் சிஇஓ சஞ்சீவ் மேத்தா, ஒருமுறை லிங்க்ட்இன் தளத்தில், ‘சந்திரசேகரன் பெரிதாக சிந்திக்கிறார், பெரியதாகச் செயல்படுகிறார், மேலும் செயல்பாட்டில் அபாரமான வேகத்தைக் கொண்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஓர் உலகளாவிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் அவருக்குப் பெரிய அளவிலான செயல்பாட்டுப் பொறுப்பை வழங்க முடியும். ஆனால் இதில் உள்ள ஒரே சிக்கல் என்னவென்றால், 40 ஆண்டுகளாக நிர்வாகப் பொறுப்பைத் தன் கைகளில் வைத்திருந்த தலைவருக்கு, பிறரின் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவது மிகவும் செயலற்ற ஒன்றாகத் தோன்றலாம்.
5. மற்றொரு பெரிய நிறுவனத்தை முன்னின்று நடத்துதல்:
சந்திரசேகரன் எளிதாக மற்றொரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கக்கூடும். 63 வயதாகும் அவருக்கு, 2027 பிப்ரவரியில் டாடா சன்ஸ் பதவிக் காலம் முடிவடையும்போது, இன்னும் நீண்ட தூரம் பயணிப்பதற்கான ஆற்றல் இருக்கும்.
டாடா சன்ஸுக்கு நிகரான ஒரு தளத்தைக் கண்டறிவதுதான் கடினமான பகுதி. வழக்கமான ஒரே ஒரு தொழில் செய்யும் நிறுவனப் பொறுப்பை ஏற்பது என்பது அவரது எல்லைக்கு கடுமையான சுருக்கமாக அமையும். மிகப் பெரிய மாற்றத்தில் இருக்கும் ஒரு உலகளாவிய கார்ப்பரேஷன் அல்லது புதிதாக உருவாக்கப்படும் ஒரு லட்சியமிக்க புதிய தொழில்துறை தளம் போன்ற விதிவிலக்கான வாய்ப்பாக அது இருந்தால் மட்டுமே அவர் அதைத் தேர்ந்தெடுக்கக்கூடும்.
ராமதுரை ஆரம்பத்திலேயே சந்திரசேகரனின் திறனைக் கண்டறிந்து, டிசிஎஸ் பொறுப்பை ஒப்படைப்பதற்கு முன்பு வாடிக்கையாளர்கள், செயல்பாடுகள், விற்பனை மற்றும் சர்வதேச விரிவாக்கம் போன்ற பல்வேறு பொறுப்புகளில் அவரைச் செயல்பட வைத்தார். எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரு தலைவரை நகர்த்திக் கொண்டே இருக்க, ஒரு முழு அளவிலான செயல்பாட்டுப் பொறுப்பே எளிமையான வழியாக இருக்கும்.
சந்திரசேகரனின் பட்டியலில் அடுத்து என்ன?
சந்திரசேகரன் இந்த வழிகளில் எதைத் தேர்ந்தெடுப்பார் என்பதைப் பற்றி இதுவரை எந்த அறிகுறியும் இல்லை. மேலும், 2027 பிப்ரவரிக்கு முன் பாம்பே ஹவுஸில் முடிக்க வேண்டிய முக்கியமான பணிகள் இன்னும் உள்ளன. ஏர் இந்தியாவின் மாற்றப் பணிகள் இன்னமும் சிக்கலான கட்டத்தில் உள்ளன, குழுமத்தின் செமிகண்டக்டர் மற்றும் பேட்டரி திட்டங்கள் உருவாக்கும் கட்டத்தில் உள்ளன. மேலும் டாடா சன்ஸ் தனது சொந்த தலைமை மாற்றத்தைக் கையாள வேண்டியுள்ளது.
சந்திரசேகரனுக்கு வாய்ப்புகள் உள்ளதா என்பது கேள்வி அல்ல. மாறாக, அவரது அடுத்த பத்தாண்டு கால நிர்வாக வாழ்க்கை எங்கு மிகச் சிறந்த பலனைத் தரும் என்பதே சுவாரஸ்ய கேள்வி.
மலையேற்றம் பற்றிய அந்த உரையாடலுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், சந்திரசேகரனின் பதிலுக்குப் பின்னால் இருந்த சிந்தனை கவனிக்கத்தக்கது. ஒரு வாரம் ரிலாக்ஸ் செய்வது போதுமானது. அவர் மீண்டும் பணிக்குத் திரும்பவே விரும்புவார். டாடா குழுமத்துடனான 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் கணிசமாகக் குறையப் போகிறது. ஆனால், அது நீண்ட காலம் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
- மூலம்: அதித் சார்ளி, தமிழில்: ஜெய்
Edited by Induja Raghunathan

