2025-ன் ‘CEO ஆஃப் தி இயர்’ ஆன தமிழர் - யூடியூபை உலகப் பிரபலம் ஆக்கிய நீல் மோகன்!
2023 ஆம் ஆண்டு யூடியூபில் தலைமை பொறுப்பை ஏற்ற நீல் மோகன், இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதும் நுகர்வதும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஒரு ‘கலாச்சார வடிவமைப்பாளர்’ என TIME புகழாரம் சூட்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய வீடியோ தளமான யூடியூபின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நீல் மோகனை, TIME இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான ‘CEO of the Year’ விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டு யூடியூப் தலைமை பொறுப்பை ஏற்ற மோகன், இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதும் நுகர்வதும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஒரு “கலாச்சார வடிவமைப்பாளர்” என TIME புகழாரம் சூட்டியுள்ளது.
“மோகன் ஒரு விவசாயி போன்றவர்; அவர் பயிரிடுவது தான் நாம் உண்ணப்போகும் உணவு. யூடியூப் மண்ணாக உள்ளது; அதில் நல்லதோ, தீங்கோ எதையும் விதைக்க அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. உலகம் இன்று நுகர்வதற்கான கலாச்சார உணவைக் உருவாக்கும் தளம் யூடியூப்,” என TIME இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

‘CEO of the Year’ விருது வென்ற தமிழர்
52 வயதான நீல் மோகன், 1973 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன் ஆர்பர் நகரில் பிறந்தவர். 1980-களின் நடுப்பகுதியில், அவரது தமிழ் பெற்றோர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு மோகன் ஹிந்தியில் திறம்பட பேசக் கற்றுக்கொண்டதுடன், சமஸ்கிருதத்தையும் பயின்றார். சமஸ்கிருதத்தின் விதிமுறை சார்ந்த அமைப்பை கணினி நிரலாக்கத்துடன் அவர் பின்னர் ஒப்பிட்டுள்ளார்.
மோகன் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் உயர்கல்விக்காக மீண்டும் அமெரிக்கா திரும்பினர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், எம்பிஏ பட்டமும் பெற்றார். அவரது சகோதரர் அனுஜ், 30 வயதில் நீச்சல் குள விபத்தில் உயிரிழந்தது மோகனின் வாழ்க்கையில் பெரும் சோகமாக அமைந்தது.
ஆலோசனை (Consulting) துறையில் தனது பணியை தொடங்கிய மோகன், பின்னர் NetGravity என்ற டிஜிட்டல் விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனம் DoubleClick மூலம் வாங்கப்பட்டது. DoubleClick நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த அவர், 2007 ஆம் ஆண்டு Google நிறுவனம் DoubleClick-ஐ 3.1 பில்லியன் டாலருக்கு வாங்கிய ஒப்பந்தத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒருகட்டத்தில் ட்விட்டருக்கு செல்ல யோசித்த மோகன், Google வழங்கிய சிறப்பு தக்கவைப்பு (Retention) சலுகையால் அங்கேயே தொடர்ந்தார்.
யூடியூப் தலைமை!
DoubleClick ஒப்பந்தத்தின் மூலம் மோகன், யூடியூபின் முன்னாள் CEO சூசன் வோஜ்சிக்கியுடன் நெருக்கமாக பணியாற்றினார். பின்னர், அவர் மோகனை யூடியூபுக்கு அழைத்து வந்தார். பல ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றினர்.
சூசன் வோஜ்சிக்கி தன் புற்றுநோய் பாதிப்பை மோகனிடம் தெரிவித்தபோது, அவர் யூடியூபின் பல முக்கிய பொறுப்புகளை ஏற்றார். 2023 ஆம் ஆண்டு, அவர் யூடியூபின் CEO ஆக பொறுப்பேற்றார். வோஜ்சிக்கி ஆகஸ்ட் 2024ல் உயிரிழந்தார்.

சர்ச்சைகள் மற்றும் சட்ட விவகாரம்
2021 ஆம் ஆண்டு, ஜனவரி 6 கேபிடால் தாக்குதலுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்பின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதை எதிர்த்து, ட்ரம்ப் உள்ளிட்டோர் யூடியூபை வழக்குத் தொடர்ந்தனர். இது கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். ட்ரம்பின் சேனல் 2023ல் மீண்டும் செயல்படுத்தப்பட்டாலும், வழக்கு தொடர்ந்தது.
நீல் மோகனின் தலைமையில், இந்த வழக்கு 2025 செப்டம்பரில் 24.5 மில்லியன் டாலருக்கு சமரசமாக முடிவடைந்தது. இதில் தவறை ஒப்புக்கொள்ளாமல் யூடியூப் ஒப்பந்தம் செய்தது. அந்த தொகையில் 22 மில்லியன் டாலர் வெள்ளை மாளிகை பால்ரூம் திட்டத்தை ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது.
நீல் மோகன், அவரது மனைவி ஹேமா சரீன் மோகன் உடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

