Vikram 1 ராக்கெட் வெற்றியின் பின்னால் இருந்த விவசாயியின் மகள் - யார் இந்த பிரித்வி சங்காணி?
Skyroot Aerospace-ன் விக்ரம்-1 ராக்கெட் வெற்றிக்கு காரணமானவர்களில் பிரித்வி சங்காணியும் ஒருவர். குஜராத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான இவரது கதை, பொறியியல் துறையில் சாதிக்க விரும்புகிறவர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும்.
இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்', நாட்டின் முதல் தனியார் சுற்றுவட்ட ராக்கெட்டை கடந்த 18ம் தேதி (ஜூலை 18) அன்று விண்ணில் ஏவியது. ‘மிஷன் ஆகமன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின்கீழ், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த முயற்சிக்கும், அதன் வெற்றிக்கும் பின்னணியில் பொறியாளர்கள் குழுவில் முக்கியமானவர் பிரித்வி சங்காணி. ராக்கெட்டின் தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பை (autopilot control system) உருவாக்குவதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
குஜராத்தின் விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அவர், தனது கனவுகளையும் விக்ரம் -1 ராக்கெட்டோடு இணைத்து விண்ணில் பறக்க விட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

விவசாய மண்ணிலிருந்து விண்வெளி துறை வரை
குஜராத்தின் ஜாம்நகரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பிரித்வி. சிறுவயதில் இருந்தே பொறியியல் துறை மீது ஆர்வம் கொண்ட இவர், நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு வளர்ந்துள்ளார்.
விண்வெளித்துறை பற்றிய எவ்வித பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பிரித்வியின் கனவுகள் விண்ணைத் தாண்டி உயர்ந்திருந்தன. அதனால்தான், ராஜ்கோட்டில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தப்பின், ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் (Missile Technology) நிபுணத்துவம் பெறுவதற்கான வழியைத் தனக்கானதாக அவர் தேர்வு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, புனேயில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் (guidance, navigation and control systems) நிபுணத்துவத்தைப் பெற்றார்.

DRDO டு ஸ்கைரூட் ஏரோபேஸ்
படித்து முடித்ததும், தனியார் விண்வெளித் துறையில் நுழைவதற்கு முன்பு, பிரித்வி தனது தொழில்முறைப் பயணத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) திட்டப் பொறியாளராகத் (Project Engineer) தொடங்கினார்.
அந்தக் காலகட்டத்தில், இந்திய ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களில் அவர் பங்காற்றியதுடன், சிக்கலான பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் சார்ந்த நேரடி அனுபவங்களையும் பெற்றார். ஏற்கனவே ஒரு மதிப்புமிக்க பணியில் இருந்தபோதிலும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் விண்வெளித் துறை புரட்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய அவர், இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' (Skyroot Aerospace) நிறுவனத்தில் இணைந்தார்;
அங்கு அவர், ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagaman) திட்டக் குழுவின் ஒரு பகுதியாகப் பணியாற்றினார்.

தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்புத் தலைவர்
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்-ல் பிரித்வி, விக்ரம்-1 இன் தானியங்கி விமானக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கான 'கட்டுப்பாட்டு அமைப்புத் தலைவர்' (Control System Lead) என்ற பொறுப்பில் இருந்தார். ராக்கெட்டின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றான இந்தத் தானியங்கி அமைப்பு, ராக்கெட் பறக்கும்போது அதைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, துல்லியமான கட்டுப்பாட்டு மாற்றங்களைச் செய்வதன் மூலம் அது திட்டமிடப்பட்ட பாதையிலேயே செல்வதை உறுதி செய்ய உதவுகிறது.
ராக்கெட்டை ஏவுவதற்கு, பெரும்பாலும் விண்கலத்தின் மீதே கவன ஈர்ப்பு இருந்தாலும், ஒவ்வொரு ராக்கெட்டின் பயண வெற்றியையும் உறுதிசெய்ய ஆயிரக்கணக்கான மணிநேர மென்பொருள் உருவாக்கம், உருவகப்படுத்துதல்கள் (simulations), சோதனைகள் மற்றும் பொறியியல் பணிகள் தேவைப்படுகின்றன. எனவே, ஏவுதலுக்கு வெகு காலத்திற்கு முன்பே மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, திரைக்குப் பின்னால் பிரித்வி போன்ற பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கதை
வெற்றிகள் எப்போதுமே ஒரு பயணத்தின் முடிவாக இருப்பதில்லை. தொடர்ந்து தங்கள் தேடுதலை விரிவு படுத்தி, அதில் மேலும் பல வெற்றிகளைக் குவிப்பதுதான் வெற்றியாளர்களின் வழக்கம்.
பிரித்வியும் அதுபோலவே, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விண்வெளித் துறை மைல்கற்களில் ஒன்றான இந்த விக்ரம் -1ன் வெற்றியைத் தொடர்ந்து, விண்வெளி தொழில்நுட்பங்களில் தனது நிபுணத்துவத்தை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக, மேற்படிப்பிற்கு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
பொருளாதாரமோ, வாழ்க்கைமுறையோ எந்த ஒரு முயற்சிக்கும் எப்போதுமே தடையாக இருப்பதில்லை என, விண்வெளிப் பொறியியல், ராக்கெட் தொழில்நுட்பம் அல்லது விண்வெளி ஆய்வுத் துறைகளில் பணிபுரியக் கனவு காணும் மாணவர்களுக்கு பிரித்வியின் வாழ்க்கை நல்லதொரு உதாரணம் ஆகும். விவசாயப் பின்னணியில் இருந்து வந்தபோதும், தனது கடின உழைப்பு மற்றும் தொடர் தேடல்கள் மூலம் விண்வெளித் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் பிரித்வி.
இந்தியாவில் தனியார் விண்வெளித் துறை சார்ந்த சூழலமைப்பு தொடர்ந்து விரிவடைந்து வரும் சூழலில், அத்துறையில் உள்ள வேலைவாய்ப்பை சிறிய நகரங்களைச் சேர்ந்த பொறியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு பிரித்வி ஒரு சான்று.

