America party: புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்: கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் வைபவ் தனேஜா யார்?
எலான் மஸ்க் தொடங்கியுள்ள அமெரிக்கா பார்ட்டி கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக பணி புரிந்து அவர், கட்சியின் ஆவணக் காப்பாளர் பொறுப்பும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள புதிய மசோதா, அமெரிக்காவின் இரு அவைகளிலும் நிறைவேறியதைத் தொடர்ந்து, அதற்கு தன் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், அதிரடியாக, ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.
இந்தக் கட்சியின் பொருளாளர் மற்றும் ஆவணக் காப்பாளருமாகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டுள்ளார். 47 வயதான இவர், டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக பணி புரிந்து வருபவர் ஆவார்.

அமெரிக்கா பார்ட்டி
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவரான எலான் மஸ்க், தற்போது நேரடி அரசியலிலும் களமிறங்கி விட்டார். ஏற்கனவே, ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூகவலைதலத்தளம், ஓப்பன் ஏஐ என பல்வேறு தளங்களில் தனது வெற்றிகளைக் குவித்து வரும் மஸ்க், அமெரிக்க அதிபர் டிரம்புடனான கருத்து மோதலைத் தொடர்ந்து, தற்போது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். தனது கட்சிக்கு அவர், ‘அமெரிக்கா பார்ட்டி’ (America Party) எனப் பெயரிட்டுள்ளார்.
அமெரிக்க அரசியலைப் பொறுத்தவரை இரு கட்சி முறை உள்ளது. மாற்றி மாற்றி இந்த இரு கட்சியைச் சேர்ந்தவர்களே அமெரிக்க அதிபர்களாகப் பதவி வகித்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கத்தை உடைக்கும் வகையில், அமெரிக்கா பார்ட்டி கட்சியைத் தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றிக்கு எலான் மஸ்க்கின் பங்கும் முக்கியமானது. அப்போதிருந்தே இருவரும் நட்பாகவே இருந்து வந்தனர். டிரம்பும் தனது நிர்வாகத்தில், அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக எலான் மஸ்க்கை நியமித்து, தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
நன்றாகச் சென்று கொண்டிருந்த இவர்களது உறவில், உள்நாட்டு செலவினம், வரி குறைப்பு தொடர்பான மசோதா விரிசலை ஏற்படுத்தியது. இந்த மசோதாவை டிரம்ப் தாக்கல் செய்ததில், எலான் மஸ்க்கிற்கு உடன்பாடில்லை. அதனை அவர் வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். இந்த மசோதா தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் என இருவருமே மாறி, மாறி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கினர்.

மசோதாவால் கோபம்
எலான் மஸ்க்கின் எதிர்ப்பை மீறி, தனது மசோதாவை அமெரிக்காவின் இரு அவைகளிலும் நிறைவேற்றினார் டிரம்ப். இதனால் கோபமடைந்த எலான் மஸ்க், தனது சமூகவலைதளப் பக்கம் வாயிலாக புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
“இரண்டு கட்சி மட்டுமே அமெரிக்காவை ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப் போக்கை முறியடிப்போம். இன்று அமெரிக்க கட்சி உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்ப கொடுக்க உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்,” என அப்பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, மஸ்க்கின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இந்தியர் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்பில் இருப்பது வழக்கம். இது அவரது அரசியல் பிரவேசத்திலும் மாறவில்லை. மஸ்க்கின் அமெரிக்கா பார்ட்டி கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான வைபவ் தனேஜாவிற்கு பொருளாளர் மற்றும் ஆவணக் காப்பாளர் என்ற முக்கிய இரு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பெடரல் தேர்தல் ஆணையத்திடம் எலான் மஸ்க் வழங்கியுள்ள தனது கட்சி ஆவணங்களில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

வைபவ் தனேஜா(இடது) மற்றும் எலான் மஸ்க் (வலது)
யார் இந்த வைபவ் தனேஜா?
இந்தியாவில் பிறந்து வளர்ந்தவரான வைபவ் தனேஜா, கடந்த 2023ம் ஆண்டு முதல் டெஸ்லாவின் தலைமை நிதித் தலைவராக பதவி வகித்து வருகிறார். டெஸ்லா வெற்றியின் பின்னணியில், வைபவ் தனேஜாவின் பங்களிப்பும் உண்டு. அவர் அதன் நிதிநிலைமையைச் சரியாகக் கையாண்டதும் வெற்றிக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் பட்டம் பெற்ற இவர், சுமார் 17 ஆண்டுகள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தார். 2016ம் ஆண்டு இவர் பணி புரிந்து கொண்டிருந்த சோலார்சிட்டியை டெஸ்லா கையகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, அந்த இரு நிறுவனங்களின் கணக்கியல் குழுக்களை ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பு வைபவுக்கு வழங்கப்பட்டது. 2018ல் டெஸ்லாவின் நிறுவனக் கட்டுப்பாட்டாளராகவும், 2019ல், அவர் டெஸ்லாவில் தலைமை கணக்கியல் அதிகாரியாகவும் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றார்.
நிதியை அவர் திறமையாக கையாளும் விதத்தைப் பார்த்து, 2023ம் ஆண்டு டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக்கினார் எலன் மஸ்க். அதன்மூலம் டெஸ்லாவின் இரண்டாவது இந்திய வம்சாவளி தலைமை நிதி அதிகாரி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. முதல் இடத்தில் இருந்தவர் தீபக் அஹூஜா ஆவார்.

தொழில் சிறப்பம்சங்கள்
வைபவ் தனேஜா ஒரு சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர் (CPA) ஆவார். பட்டய கணக்காளரான இவர், பின்வரும் துறைகளில் ஆழ்ந்த அனுபவத்தைக் கொண்டவர்...
- US GAAP நிதி அறிக்கை
- SEC இணக்கம் மற்றும் ஒழுங்குமுறை தாக்கல்கள்
- உள் கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கை மேற்பார்வை
- C-சூட் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவை ஆதரித்தல்
- IPOக்கள் மற்றும் முக்கிய பொது சலுகைகள் மூலம் நிறுவனங்களை வழிநடத்துதல்
- வருவாய் கசிவைத் தடுக்க வணிக செயல்முறைகளை நெறிப்படுத்துதல்
சம்பளத்திலும் சாதனை
பதவியில் மட்டும் உயர்வைக் கொடுக்காமல், சம்பளத்திலும் சாதனை படைத்தவர் வைபவ். கடந்தாண்டு இவரது சம்பளத் தொகுப்பைக் கேட்டு, மக்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஏனென்றால், சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி, 139 மில்லியன் டாலரை சம்பளமாகப் பெற்றிருந்தார் வைபவ். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,157 கோடி ஆகும்.
நிதிப் பொறுப்புகள் மட்டுமில்லாது, டெஸ்லாவின் இந்தியத் திட்டங்களிலும் இவரது பங்கு இன்றியமையாதது. டெஸ்லாவின் இந்தியப் பிரிவின் குழுவிலும் வைபவ் உள்ளார்.
ஏற்கனவே இப்படிப் பல முக்கிய பொறுப்புகளை நிர்வகித்து வரும் வைபவ் தனேஜாவிற்கு, தற்போது தனது கட்சியிலும் முக்கியப் பொறுப்புகளை எலான் மஸ்க் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சலசலப்பு
எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கியிருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புதிய புரட்சியாகப் பார்க்கப்பட்டாலும், அவரது அமெரிக்கக் கட்சியில் இந்தியருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது அமெரிக்கர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும், அனுமதிக்கும் H-1B திட்டத்தின் ஆதரவாளராக எலான் மஸ்க் இருந்து வருகிறார் என்ற அதிருப்தி அந்நாட்டு மக்கள் மத்தியில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், தனது கட்சியிலேயே வெளிநாட்டவருக்கு (இந்தியரான வைபவ் தனேஜாவிற்கு) எலான் மஸ்க் முக்கிய பொறுப்பை அளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

