BRICS நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க ஆர்பிஐ முயல்வது ஏன்?
வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதும், அமெரிக்க டாலர் மீது உள்ள சார்பை குறைப்பதும் இதன் முக்கிய நோக்கம்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) நாடுகளின்
டிஜிட்டல் நாணயங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும் என்ற யோசனையை இந்திய ரிசர்வ் வங்கி முன்வைத்துள்ளது.
வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதும், அமெரிக்க டாலர் மீது உள்ள சார்பை குறைப்பதும் இதன் முக்கிய நோக்கம்.
2026-ஆம் ஆண்டு இந்தியா நடத்த உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கிய அஜெண்டாவாக இதை கொண்டு வர ஆர்பிஐ விரும்புகிறது. ஆனால், ‘இப்போது ஏன் இந்த முயற்சி?’ என்ற கேள்விக்கான பதில், உலக நிதி அமைப்பில் நடந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய மாற்றத்தில் உள்ளது.
ஸ்டேபிள்காயின்கள்: RBI-க்கு ஏன் கவலை?
உலகம் முழுவதும் நிறுவனங்களும் தனிநபர்களும் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளுக்கு ஸ்டேபிள்காயின்களை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஸ்டேபிள்காயின்கள் என்பது டாலர் போன்ற நாணயங்களுக்கு இணைக்கப்பட்ட (pegged) டிஜிட்டல் டோக்கன்கள். பெரும்பாலும் இவை அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டவை. இவற்றின் வளர்ச்சி கணிசமாக உள்ளது.
> USDC என்ற ஸ்டேபிள்காயினின் புழக்கம் ஒரே ஆண்டில் 108% உயர்ந்து 73.7 பில்லியன் டாலராகியுள்ளது.
> 2026 ஜனவரிக்குள் மொத்த ஸ்டேபிள்காயின் வெளியீடு 315 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.
> மாதாந்திர பரிவர்த்தனை அளவு 700 பில்லியன் டாலரை கடந்துவிட்டது.
> JPMorgan, Citi, Bank of America போன்ற பெரிய வங்கிகளே தங்களின் சொந்த டாலர் - ஆதார டிஜிட்டல் டோக்கன்களை உருவாக்கி வருகின்றன. இதனால் பாரம்பரிய வங்கி அமைப்புகளுக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது.
இன்றும் சர்வதேச பணப் பரிவர்த்தனைகளின் முக்கிய முதுகெலும்பு SWIFT அமைப்புதான். உதாரணமாக, நீங்கள் ஜப்பானில் உள்ள ஒருவரிடமிருந்து பணம் பெற வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வங்கிக்கும், அவர்களின் வங்கிக்கும் நேரடி தொடர்பு இருக்காது. எனவே அந்தப் பணம் நியூயார்க், ஹாங்காங் போன்ற இடங்களில் உள்ள இடைநிலை வங்கிகள் வழியாக ‘தாவி தாவி’ உங்கள் கணக்கை அடையும். இதற்கு 1 முதல் 5 வேலை நாட்கள் வரை எடுக்கும். ஒவ்வொரு இடைநிலை வங்கியும் கட்டணம் வசூலிக்கும்.
இந்நிலையை ஸ்டேபிள் காயின்கள் மாற்றுவது எப்படி?
ஸ்டேபிள்காயின்களில் ஒரு டிஜிட்டல் வாலெட்டை திறந்து ஸ்டேபிள்காயின்களை வாங்கி ‘Send’ பட்டனை அழுத்தினால் போதும், நிமிடங்களில் பணம் வந்து சேரும். மேலும், மதிப்பில் பெரிய ஏற்ற இறக்கம் இல்லை. இடைநிலை வங்கிகள் இல்லை. கட்டணம் மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ரஷ்ய வங்கிகள் SWIFT அமைப்பில் இருந்து நீக்கப்பட்டன. இதன் மூலம், பாரம்பரிய பணப் பரிவர்த்தனை அமைப்புகள் அரசியல் முடிவுகளுக்கு எவ்வளவு பாதிக்கப்படக் கூடியவை என்பதும் தெளிவானது.
இந்தியாவுக்கு ஏன் இது பிரச்சனை?
இந்திய ரிசர்வ் வங்கியின் பார்வையில், ஸ்டேபிள்காயின்கள் பல ஆபத்துகளை உருவாக்குகின்றன. இதனை ஆர்பிஐ கீழ்வருமாறு பட்டியலிடுகிறது.
> அரசாங்கம் வெளியிடாத தனியார் பணங்கள்
> ஒரே நாட்டில் நூற்றுக்கணக்கான ‘நாணயங்கள்’
> மூலதன கட்டுப்பாடுகளை (capital controls) தாண்டிச் செல்லும் வாய்ப்பு.
வங்கிகளில் உள்ள டெபாசிட்கள் குறைந்து, நிதி அமைப்பு பலவீனமாவதற்கான அபாயம் ஆகியவை இருப்பதாக ஆர்பிஐ கண்டுள்ளது. இதனால்தான் ஆர்பிஐ துணை ஆளுநர் டி.ரவி சங்கர், ஸ்டேபிள்காயின்களுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.
RBI-யின் மாற்று:
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC): இது ஸ்டேபிள்காயின்கள் தரும் தொழில்நுட்ப நன்மைகளை வழங்கும். ஆனால் முழு கட்டுப்பாடும் அரசாங்கத்திடம் இருக்கும். டிஜிட்டல் ரூபாய் ஏற்கெனவே சோதனை (pilot) கட்டத்தில் உள்ளது.
இந்த யோசனையை சர்வதேச அளவுக்கு விரிவுபடுத்துவதே BRICS திட்டம். BRICS நாடுகளின் CBDC-களை இணைத்தால், சுற்றுலா இரு தரப்பு வர்த்தகம் போன்றவை டாலரை பயன்படுத்தாமல் செய்ய முடியும்.
இது நடைமுறையில் எப்படி இருக்கும் என்றால், ஒவ்வொரு நாடும் தனது CBDC-யை வெளியிடும்.
மத்திய வங்கிகள் இயக்கும் ஒரு பொதுவான டிஜிட்டல் செட்டில்மெண்ட் தளம் உருவாகும். இதன் வழி பரிவர்த்தனைகள் நடைபெறும்.
உதாரணமாக, இந்திய சுற்றுலாப் பயணி பிரேசிலில் செலவு செய்யும்போது தனது டிஜிட்டல் ரூபாயில் பணம் செலுத்துவார் பின்னணியில், அந்த தொகை உடனடியாக டிஜிட்டல் ரியலாக மாற்றப்படும். பிரேசில் வணிகருக்கு உள்ளூர் நாணயம் கிடைக்கும். டாலருக்கு இதில் வேலையே இல்லை.
அதேபோல் இந்திய இறக்குமதியாளர் - ரஷ்ய ஏற்றுமதியாளர் வர்த்தகமும் டிஜிட்டல் ரூபாய் > டிஜிட்டல் ரூபிள் மூலம் நேரடியாக மத்திய வங்கிகளின் கணக்குகளில் செட்டில் ஆகும்.
ஸ்டேபிள்காயின்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பணத்தின் கட்டுப்பாட்டை இழக்க விரும்பாத இந்தியா, BRICS நாடுகளுடன் சேர்ந்து அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு டிஜிட்டல் மாற்று அமைப்பை உருவாக்க முயல்கிறது. இது நிதி தன்னாட்சிக்கும், டாலர் சார்பை குறைப்பதற்குமான ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan
