Zerodha கேப்பிடல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 44% உயர்வு!
இந்த வளர்ச்சிக்கு நிறுவனத்தின் கடன் புத்தகத்தில் ஏற்பட்ட வலுவான விரிவாக்கமே காரணம். மேலும் நிறுவனத்தின் நிகர லாபம் 2024-25 நிதியாண்டின் ரூ.12.2 கோடியிலிருந்து 2025-26 நிதியாண்டில் ரூ.14.7 கோடியாக உயர்ந்து 20.4% வளர்ச்சி கண்டுள்ளது
Zerodha கேப்பிடல் (ZCPL) நிறுவனத்தின் மொத்த வருமானம் 2025-26 நிதியாண்டில் 44.2% உயர்ந்து ரூ.53.5 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு நிறுவனத்தின் கடன் புத்தகத்தில் ஏற்பட்ட வலுவான விரிவாக்கமே முக்கியக் காரணமாக இருந்ததாக ICRA Limited தனது மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிகர லாபம் 2024-25 நிதியாண்டின் ரூ.12.2 கோடியிலிருந்து 2025-26 நிதியாண்டில் ரூ.14.7 கோடியாக உயர்ந்து 20.4% வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக, பத்திரங்களை அடமானமாகக் கொண்டு வழங்கப்படும் கடன் (Loan Against Securities - LAS) பிரிவில் ZCPL குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2026 மார்ச் 31 நிலவரப்படி, அதன் LAS கடன் புத்தகம் ரூ.580 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு ஜீரோதா புரோக்கிங் நிறுவனத்தின் விரிவான வாடிக்கையாளர் அடித்தளம் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ICRA, ZCPL நிறுவனத்திற்கான தனது கடன் மதிப்பீட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், நிறுவனத்தின் எதிர்கால நிலை குறித்து "ஸ்டேபிள்" (Stable) என்ற மதிப்பீட்டு கண்ணோட்டத்தையும் தொடர்ந்துள்ளது.
மேலும், Zerodha குழுமத்தின் வலுவான பிராண்ட் மதிப்பு, பொதுவான நிறுவனர்கள், மற்றும் குழுமத்தின் முக்கிய தொழிலாக கடன் சேவை இருப்பது ஆகியவை தேவையான நேரத்தில் நிறுவனத்திற்கு நிதி மற்றும் செயல்பாட்டு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ICRA கூறியுள்ளது.
எதிர்காலத்தில் தொழில் விரிவாக்கத்தால் நிறுவனத்தின் கடன் சார்ந்த நிதி பயன்பாடு அதிகரிக்கலாம் என்றாலும், அதன் கடன்-மூலதன விகிதம் நான்கு மடங்கிற்கும் குறைவாகவே இருக்கும், என ICRA எதிர்பார்க்கிறது.
அதேசமயம், பங்குச்சந்தை ஏற்ற இறக்க காலங்களில் அடமானமாக வைக்கப்பட்டுள்ள பத்திரங்களின் மதிப்பு குறையக்கூடும் என்பதால், LAS தொழில் கடன் அபாயம், சந்தை அபாயம் மற்றும் தொழில்நுட்ப அபாயங்களுக்கு உட்பட்டதாகவும் ICRA சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், பங்கு தரகர் துறையில் ஜெரோதா குழுமத்தின் நீண்டகால அனுபவம், வலுவான அபாய மேலாண்மை நடைமுறைகள், கடந்த சில ஆண்டுகளில் வாராக்கடன் (NPA) இல்லாத சாதனை மற்றும் மிகக் குறைந்த கடன் செலவுகள் ஆகியவை நிறுவனத்திற்கு சாதகமான அம்சங்களாக இருப்பதாக ICRA தெரிவித்துள்ளது.
