‘என்னை யாரும் பொதுவெளியில் புகழ வேண்டாம்’ - ஜோஹோ ஊழியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு விதித்திருக்கும் விதிமுறை!
Zoho நிறுவனத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு விதிமுறை என்னவெனில், எந்த ஊழியரும் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீதர் வேம்புவை பொதுவாகப் புகழ்ந்து பேசக் கூடாது," என்பதே. அதன் காரணத்தை தனது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார் வேம்பு.
சில நாட்களுக்கு முன், இணையத்தில் மீண்டும் ஒருமுறை ஸ்ரீதர் வேம்பு பெயர் பேசப்பட்டது. அரட்டை (Arattai) என்ற Zoho நிறுவனத்தின் மெசேஜிங் செயலியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து புதுப்பிப்புகள் வெளிவந்தபோது, அதனுடன் சேர்ந்து அவரது கொள்கைகளும், வாழ்க்கை நோக்கங்களும் பலரின் கவனத்தை ஈர்த்தன.
ஆனால், இம்முறை, Zoho நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் ஸ்ரீதர் வேம்பு தனது X பதிவில் ஒரு வித்தியாசமான விஷயத்தை வெளிப்படுத்தினார் — ’Zoho நிறுவனத்தில் எந்த ஊழியரும் தன்னைப் புகழ்ந்து பேச அனுமதி இல்லை’ என்ற அறிவிப்புதான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.

Sridhar Vembu, CEO of Zoho Corporation.
புகழ்ச்சி வேண்டாம் என்னும் கொள்கை:
ஸ்ரீதர் வேம்பு தன் பதிவில்,
“நிறுவனத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு விதிமுறை என்னவெனில், எந்த ஊழியரும் தலைமை நிர்வாகிகளை — என்னையும் சேர்த்து — பொதுவெளியிலோ, அலுவலகத்திலோ புகழ்ந்து பேசக் கூடாது. இதை நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நினைவூட்டுகிறோம். இது எங்கள் பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாகி விட்டது,” என்றார்.
அவரது விளக்கம் எளிமையானது — சொந்த பெருமை அல்லது பாராட்டுகளில் சிக்காமல், முழு கவனம் புதுமை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளில் இருக்க வேண்டும் என்பதே.
ஸ்ரீதர் வேம்பு மேலும் கூறும்போது,
“வாழ்க்கையில் நான் பின்பற்ற முயலும் ஆன்மிகக் கொள்கை என்னவெனில், புகழ்ச்சியும் கண்டனமும் இரண்டுமே என்னை பாதிக்கக்கூடாது. நான் என்னைப்பற்றிய வீடியோக்களையோ பதிவுகளையோ பார்க்க மாட்டேன். நான் எனக்கு அவ்வளவு முக்கியமானவன் அல்ல,” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் ஒரு அழகான சிந்தனையையும் பகிர்ந்தார் — “சத்சிதானந்தம் (Satchitananda- சத்+சித்+ஆனந்தம்)” என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லை எடுத்துக்காட்டாகக் கொண்டு, உண்மையும் உணர்வும் ஒன்றானால், ஐக்கியமானால் லபிக்கும் ஆனந்தமே வாழ்க்கை, இதுவே கடவுளின் பரிசு என்று கூறுகிறார்.
“உயிருடன் இருப்பது, சுவாசிப்பது, அறிவுடன் விழித்திருப்பது — இதுவே இறைவன் அளித்த பரிசு. அதற்காகவே நான் தினமும் நன்றி கூறுகிறேன்.” என்கிறார் வேம்பு.
புகழ்ச்சியே கூடாது என்றால் விமர்சிக்கவும் கூடாதோ என்ற சந்தேகம் எழலாம், ஆனால் விமர்சனங்களை வரவேற்கிறார் வேம்பு,
“எங்கள் தயாரிப்புகள் அல்லது நிறுவனத்தைப் பற்றிய விமர்சனங்களை நான் படிப்பேன். ஏனெனில், ஒருவராவது எங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதே ஒரு வரம். பெரும்பாலும் எந்தப் பொருளும் முழுமையாகப் புறக்கணிக்கப்படுவதே இயல்பான நிலை. ஆனால் ஒருவர் விமர்சனம் செய்ய நேரம் எடுத்துக்கொள்வது நம்மை வளர்ச்சிக்கு தூண்டுகிறது,” என்று விமர்சனத்தை உடன்பாட்டு நோக்குடன் அணுகுகிறார் அவர்.
இவரது கொள்கைகள் வெளியான அதே நேரத்தில் அரட்டை செயலியில் End-to-End Encryption – E2EE வரப்போகிறது என்ற செய்தியும் பரவியது.
ஒரு பயனர் @quantam_lock கேள்வி எழுப்பினார்:
“அரட்டையில் எப்போது E2EE வரும்? அது இல்லாமல் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியாது.”

அதற்கு வேம்பு,
“ஆம், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. பல கட்ட QA பரிசோதனைகள் செய்து வருகிறோம்,” என்றார்.
இதனால், ஒரு பக்கம் தொழில்நுட்பப் புதுமையில் Zoho தன் பாதையில் உறுதியாக நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் அதன் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, “புகழ்ச்சிக்கு தடை, புதுமைக்கு வழி,” என்ற புதிய மகா வாக்கியத்தைப் பின்பற்றி வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

