‘நடிகர்களாக இருந்தாலும் யூட்யூப் தளத்தில் கிரியேட்டராக இருந்தால் தான் ஜெயிக்க முடியும்’ - மதன் கெளரி
"பெரிய திரையில்தான் செலிபிரிட்டி.. யூடியூப் என்ற களத்திற்கு வரும்போது செலிபிரிட்டிகள் கிரியேட்டர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் யூடியூப்பில் அவர்கள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது" என்கிறார் தென்னிந்தியாவின் பிரபல யூடியூபர்களில் ஒருவரான மதன்கௌரி.
யுவர்ஸ்டோரி Trell உடன் நடத்திய Creators Inc மாநாட்டின் ஒரு பகுதியாக தென்னிந்தியாவின் மிகப் பெரிய யூடியூபர்களில் ஒருவரான மதன் கௌரி, ஒரு தமிழ் யூட்யூபராக தான் வெற்றி அடைந்தது எப்படி என்றும் பிராந்திய மொழியில் உள்ளடக்கம் தருவது எந்த வகையில் தன் ரசிகர்களைக் கவந்துள்ளது என்று பகிர்ந்து கொண்டார்.
சுமார் 5.8 மில்லியன் அதாவது 58 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருக்கும் மதன் கெளரி, தான் யூடியூபராக உருவான கதை, தமிழில் வீடியோக்கள் வெளியிட்டதால் எதிர்கொண்ட சவால்கள், சமீபகாலமாக செலிபிரைட்டிகள் யூடியூபர்கள் ஆகி வருவது, கிரியேட்டர் எக்கனாமி எனப் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து யுவர்ஸ்டோரி தமிழ் ஆசிரியர் இந்துஜா ரகுனாதன் உடன் நடைப்பெற்ற நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்களின் யூடியூப் மோகம் அதிகரித்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலானவர்கள் தங்களுக்கென ஒரு சேனலை ஆரம்பித்து யூடியூபர்கள் ஆகி வருகின்றனர். செலிபிரிட்டிகளும் இதில் விதிவிலக்கல்ல.
ஏற்கனவே பிரபலமாக உள்ள போதும், புதிய வருமானத்திற்கான களமாகவும் யூடியூப்பை அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நல்ல கிரியேட்டர்களாக இருந்தால் மட்டுமே அவர்களால் வெற்றிகரமான யூடியூபராக இருக்க முடியும் என்கிறார் தமிழில் மிகவும் பிரபலமான, அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருக்கும் மதன்கௌரி.
யூடியூப் என்றாலே ஆங்கிலம் என்ற பிம்பம் இருந்த போது, தமிழில் கன்டென்ட் தர முடியும், அதற்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும் என எப்படி நம்பிக்கை வந்தது?
எனது முதல் வீடியோவை ஆங்கிலத்தில் தான் உருவாக்கினேன். பிறகு, பல வீடியோக்களை ஒரே உள்ளடக்கத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் சேர்த்து உருவாக்க ஆரம்பித்தேன். இரண்டையுமே அடுத்தடுத்து வெளியிட்டேன். ஆனால், எனது ஆங்கில வீடியோக்களைவிட தமிழ் வீடியோக்களுக்கு அதிகப் பார்வைகள் கிடைத்தது.
“நான் வீடியோ வெளியிட ஆரம்பித்த காலகட்டத்தில் ஆங்கிலத்தில் இருந்ததைவிட, தமிழில் வீடியோக்கள் குறைவு. தமிழில் பேசி வீடியோக்கள் போட ஆட்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அந்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.”
சென்னையில் இருந்து கொண்டே ஆங்கிலத்தில் யூடியூப் வீடியோக்கள் பதிவேற்றம் செய்தவர்களை அப்போதே எனக்குத் தெரியும். இப்போதும் அவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை சில விஷயங்களைத் தமிழில் பேசும்போது அது சரியாக இருக்கும், நிறைய பேரைச் சென்றடையும் எனத் தோன்றியது.
சென்னையில் இருந்து பார்த்தாலும், டெல்லியில் இருந்து பார்த்தாலும் எத்தனை பார்வைகள் கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதன் அடிப்படையில் தான் வருமானம். எனவே, தமிழ், ஹிந்தி, அல்லது பிறமொழிகளில் உள்ளடக்கம் தருவதில் மாற்றம் எதுவும் இருப்பதில்லை.
”ஒவ்வொரு வருடமும் வருமானம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே மொழி என்பது ஒரு தடையாக இருந்ததில்லை.”
உள்ளூர் மட்டுமின்றி உலக நடப்புகளையும் உங்கள் வீடியோக்களில் பேசுகிறீர்கள். அப்போது தமிழில் பேசுவதன் சாதக, பாதகங்கள் என்ன?
நான் போடும் வீடியோக்கள் இந்தியாவில் இருப்பவர்களுக்கான கண்டெண்ட் தான். உதாரணத்திற்கு நாசா அனுப்பும் ஒரு டெலஸ்கோப்பைப் பற்றி நான் பேசினால், நான் தரும் உதாரணங்கள் போன்றவை இந்தியர்களுக்கானதாகவே இருக்கும். எனவே, அதுமாதிரி நான் பேசும்போது இரண்டு விசயங்கள் இருக்கிறது,
ஒன்று நான் தமிழில் பேசுவதால், இந்தி, கன்னடம், தெலுங்கு என மற்ற மொழிகளில் யார் வீடியோ தயார் செய்தாலும், அது நிச்சயம் எனக்கு போட்டியாக இருக்கப் போவதில்லை. ஆனால் தமிழைத் தாண்டி என்னாலும் அந்த மொழிகளுக்குப் போக முடியாது என்பதைத் தான் ஒரு தடையாகப் பார்க்கிறேன்.
மற்ற மொழியைச் சேர்ந்தவர்களும் உங்கள் வீடியோவைப் பார்ப்பதற்கு என ஏதாவது டூல் பயன்படுத்துகிறீர்களா?
யூடியூப்பைப் பொறுத்தவரை அப்படி தனியாக எதையும் செய்யவில்லை. ஏனென்றால் என் சேனலில் நான் மக்களிடம் பேசுகிறேன். ஆனால், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் நான் ஆங்கிலத்தில்தான் பதிவுகளை வெளியிடுகிறேன். அதனை வெவ்வேறு மாநிலங்களில், நாடுகளில் இருப்பவர்களும் பார்வை இடுகிறார்கள். அதேபோல், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலதரப்பட்ட வீடியோக்கள், ரீல்கள் பதிவு செய்கிறேன். எனவே தமிழ் தெரியாதவர்கள்கூட என்னை அங்கு ஃபாலோ செய்கிறார்கள்.
“யூடியூப்பில் எனது வீடியோக்கள் கீழ் சப் டைட்டில்ஸ் தரும் திட்டத்தில் இருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் என்னுடைய வீடியோக்கள் சப் டைட்டிலுடன் வர ஆரம்பிக்கும்.”
ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை நான் தனி ஆளாகத்தான் என்னுடைய கன்டென்ட்டுகளை தயார் செய்கிறேன். இதற்கென்று தனியாக குழு என்று யாரும் என்னிடம் இல்லை. உள்ளடக்கம் தயார் செய்வது, பேசுவது, எடிட்டிங், வீடியோ அப்லோடிங் என எல்லாமே நான் தான் செய்கிறேன். டீம் ஒன்றை வைத்து டீமாக செயல்பட்டால் மேலும் வளர்ச்சி இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இப்போதும் எனது வளர்ச்சி நன்றாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது.
ஏன் டீம் வொர்க் என்ற மாடலுக்குள் செல்லவில்லை?
எனது பார்வையாளர்களுக்குத் தேவையானதை நான் உருவாக்குகிறேன். மதனிடம் இருந்து அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் நான் தருகிறேன்.
நான் வைக்கும் தம்ப்நெயிலில் இருந்து, வீடியோ வரை, மதன் இப்படித்தான் தருவார் என சிஸ்டம் உள்ளது. அந்த ஃபார்முலா என் மூளையில் அப்படியே பதிவாகி விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது சிந்தனைகளை வேறொருவரிடம் அப்படியே நான் எதிர்பார்க்க முடியாது. அது மாறுபடலாம். அந்த ஒரு பயத்தினால்தான் நான் டீம் என்ற கான்செப்ட்டிற்குள் போகவில்லை. மற்றபடி அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்ற எண்ணம் இல்லை.
புதிய யூடியூப்பர்களுக்கு இப்போதிருக்கும் சவால்கள்...
சரியாக நான் இரண்டாவது வீடியோ போஸ்ட் பண்ணிய போது, ஜியோ லாஞ்ச் செய்தார்கள். ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்திருந்தால், நானும் நான்கு, ஐந்து வீடியோக்கள் போட்டு, அதற்கு போதுமான பார்வைகள் கிடைக்காமல் போயிருந்தால், யூடியூப் நமக்கு சரிப்பட்டு வராது என நானும் பின்வாங்கி இருப்பேன்.
ஏனென்றால் அப்படிப்பட்டவர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். நானும் பொழுதுபோக்காகத்தான் ஆரம்பித்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சரியான நேரத்தில், சரியான இடத்தில் நான் இருந்தேன். அது எனக்கு சரியாக நடந்தது.
இப்போது அதுமாதிரி புதிதாக ஒரு சேனல் ஆரம்பிப்பது நிச்சயம் கஷ்டம்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்னை மக்கள் ஏற்றுக் கொள்ள நிறைய காலம் அவர்களுக்கு இருந்தது. இப்போது நிலைமை அப்படியில்லை. ஏறக்குறைய எல்லோருமே யூடியூப்பர்களாகத்தான் வளைய வருகிறார்கள். அப்படியிருக்கையில்,
ஒரு பதினைந்து நிமிடம் பார்வையாளர்களை உங்கள் வீடியோவைப் பார்க்க வைப்பது என்பது ரொம்பவே சவாலான விஷயம். காரணம் அவர்களுக்கு முன் நிறைய ஆப்சன்கள் இருக்கிறது. நிச்சயம் இப்போது மதன்கௌரி ஒரு சேனல் ஆரம்பித்திருந்தால், எல்லோரிடமும் அது சென்றடைந்திருக்காது.
யூடியூப் கிரியேட்டர்கள் ஆகும் செலிபிரிட்டிகள் பற்றி..
செலிபிரிட்டிகள் கண்டெண்ட் இல்லாமல் யூடியூப்பில் வீடியோக்கள் தர முடியாது. அவர்களுடைய பிரபலத்தின்ன் காரணமாக அவர்களது வீடியோக்களை நிறைய பேர் போய் பார்க்கலாம், லைக்குகள் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் அனைவருமே சப்ஸ்கிரைபர்களாக மாறுவார்களா என்பது சந்தேகமே.
அதனால்தான் அவர்களுடைய சில வீடியோக்கள் அதிக பார்வைகளைப் பெற்றிருக்கும், ஆனால் எல்லா வீடியோக்களுக்கும் அந்த வரவேற்பு இருக்காது. மக்களுக்கு செலிபிரிட்டிகளின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் எப்போதும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால், அது மற்ற ஊர்களில் எப்படியோ, ஆனால் நிச்சயம் நம் ஊரில் வேலைக்கு ஆகாது.
தமிழ் பார்வையாளர்களுக்கு என ஒரு வரையறை உள்ளது. இதைத்தான் பார்ப்பார்கள், இதைத்தான் விரும்புவார்கள் என. பெரிய திரையில் இருக்கும்வரை தான் நீங்கள் ஒரு செலிபிரிட்டி. போன், கம்ப்யூட்டர் என இந்த சின்னத்திரைகளுக்கு வரும் போது, அவர்கள் செலிபிரிட்டி கிடையாது. கிரியேட்டராக இருந்தால் மட்டுமே இங்கு சாதிக்க முடியும். இங்கே கிடைக்கும் அன்பாகட்டும், விமர்சனமாகட்டும். எல்லாமே வேறு மாதிரி இருக்கும்.
யூடியூப் வருமானம் பற்றி...
நான் யூடியூப்பிற்கு வந்தபோது இப்போது இருக்கும் அளவிற்கு அதிக விளம்பரங்கள் இல்லை. எனக்கு இப்போது கூகுள் வருமானம்தான் முதன்மையானதாக உள்ளது. ஆனால், நிறைய பேர் கூகுள் வருமானத்தை பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
பலர் விளம்பரங்களுக்காகத்தான் வீடியோவே போடுகிறார்கள். அது அவர்களது வீடியோவில் அப்பட்டமாகத் தெரியும். ஆனால் அதில் வரும் வருமானம் நிலையானதல்ல. உங்கள் வருமானங்களைப் பெருக்கிக் கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளது. லைவ் சேட், சேனல் மெம்பர்ஷிப் என பலவகைகளிலும் வருவாய் ஈட்டலாம்.
பணி சுதந்திரம்...
யூடியூப்பராக இருந்தால் யூடியூபராகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நான் விவசாயம் செய்கிறேன். அது யாருக்குமே தெரியாது. இப்போது டிஜே ஆக கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் சைக்கிளிங் நிறைய செல்வேன். அடிக்கடி டிரெக்கிங் போகிறேன். மற்றவர்களிடம் வேலை பார்க்கும்போதோ அல்லது ஒரு வியாபாரம் செய்யும்போதோ, நமக்கான நேரத் திட்டமிடல் மற்றவர்களைச் சார்ந்தே உள்ளது. ஆனால் எனக்கு அப்படியில்லை. இந்தத் துறையில் ஒரு சுதந்திரம் இருக்கிறது. நமக்குப் பிடித்தமாதிரி நம்முடைய ஒவ்வொரு 24 மணி நேரத்தையும் வகுத்துக் கொள்ளமுடியும்.
எதிர்காலத்தில் கிரியேட்டர்ஸ் பொருளாதாரம் எப்படி இருக்கும்...
நிச்சயம் வருமானம் மேலும் உயரும் என்பதில் சந்தேகமேயில்லை. மிஸ்டர் பீஸ்ட்தான் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர். அவரின் வருமானத்தில் பாதி தான், இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் நபராக கருதப்படும் நடிகர் அக்ஷய்குமாரின் வருமானம். இதுதான் கிரியேட்டர்ஸ் எகானமி. இந்த மாற்றம் மிகவும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அனைவரது கையிலும் செல்போன் உள்ளது. அங்கு 100% அனைவரும் யூடியூப்பிற்குள் வந்துவிட்டனர். ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. எனது சப்ஸ்கிரைபர்கள் 5 மில்லியன் தான். ஆனால் உலகமெங்கும் சுமார் 80 மில்லியன் பேருக்கு தமிழ் தெரியும். அவர்களையும் எனது சேனலைப் பார்க்க வைப்பதுதான் எனது மார்க்கெட். இதற்கான போட்டி தமிழ் பேசுபவர்களுக்கு இடையில் மட்டும்தான். எனவே கிரியேட்டர் எக்கனாமி நிச்சயம் உயரும் என்பதில் சந்தேகமேயில்லை.
இளம் கிரியேட்டர்களுக்கு சொல்ல விரும்புவது...
தமிழில் எல்லாவற்றையும் பேசும் சேனல்கள் இருக்கிறதா என்றால் இல்லை. நிறைய விஷயங்கள் இங்கு இன்னமும் பேசப்படாமலேயே இருக்கிறது.
மற்றவர்கள் செய்வதையே செய்யாமல், புதிது புதிதாக பண்ணும் போது, நிறைய பேர் விரும்பி வருவார்கள் என்பது எனது கருத்து. மற்றவர்கள் தொடாத புதிய துறையை நாம் கையில் எடுக்கும் போது, அதில் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும். போட்டியும் குறைவாக இருக்கும்.
என்னைப் பொருத்தவரையில் முன்பைவிட இப்போதுதான் அதிக சிரத்தையோடு கன்டென்ட் செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் நாம் சிறு விஷயத்தில் கோட்டை விட்டாலும், நம்மை பின்னுக்குத் தள்ளிவிடும் அளவிற்கு இப்போது போட்டி அதிகம். எனவே முன்பைவிட இப்போது அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கிறது. காலையில் எழுந்ததில் இருந்து, இரவு படுக்கும் வரை கன்டென்ட் தான் எனது மூளையில் ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை நான் விரும்பிச் செய்கிறேன். அதனால்தான் என்னால் உற்சாகமாக இதில் செயல்பட முடிகிறது.
மதன் கௌரியின் எதிர்காலத் திட்டம்?
பாடல் என்ற புதிய களத்திற்குள் இயங்கி வருகிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு வரை மதன் கௌரி பாடல் எல்லாம் பாடுவேனா என நானே நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் இப்போது எனது பாடலை மில்லியன் கணக்கில் மக்கள் கேட்கிறார்கள். நன்றாக இருக்கிறது என பாராட்டவும் செய்கிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்ததாக வெப் சீரிஸ் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான வேலைகள், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.