‘என்னையும் மகனையும் கைவிட்டுவிட்டார்’ - பிரிந்த மனைவியின் புகார்; ஸ்ரீதர் வேம்பு சொல்வது என்ன?
தனக்குச் சொந்தமான பங்குகள், சொத்துகள் மீதான உரிமையை மாற்றியது உள்ளிட்ட புகார்களை ஜோஹோ (ZOHO) நிறுவன சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அடுக்கியிருக்கிறார், அவரைப் பிரிந்து வாழும் மனைவி பரிமளா ஸ்ரீனிவாசன்.
பிரபல ‘ஜோஹோ’ நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஐ.டி துறையில் தனது தனித்துவ அணுகுமுறையால் புகழ்பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு மீது அவரைப் பிரிந்து வாழும் மனைவி பரிமளா ஸ்ரீனிவாசன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது அதிர்வலைகளை எற்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஸ்ரீதர் வேம்பு மறுத்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
பரிமளா ஸ்ரீனிவாசனின் குற்றச்சாட்டுகள் அடங்கிய செய்திக் கட்டுரை ஒன்று ‘ஃபோர்ப்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. 5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ‘ஜோஹோ’ நிறுவனத்தின் இணை நிறுவனரும், சி.இ.ஓ-வுமான ஸ்ரீதர் வேம்பு கடந்து வந்த பாதையுடன் தொடங்கும் அந்தக் கட்டுரையில், கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கில் ஜனவரி மாதம் பிரமிளா ஸ்ரீனிவாசன் தரப்பு வாதங்களில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
“திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், என்னை மட்டுமின்றி தனது சிறப்பு கவனம் தேவைப்படும் ஆட்டிஸம் பாதித்த மகனையும் 2020-ல் என் கணவர் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அத்துடன், எங்களுக்குள் பொதுவாக இருந்த நிறுவனப் பங்குகள், சொத்துகளை என்னைக் கேட்காமலேயே, என் சம்மதம் இல்லாமலேயே அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார்" என்று பரிமளா குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு சென்னை ஐஐடியில் தனது படிப்பை முடித்த பிறகு, கடந்த 1989-ல் ஆய்வுப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு தன்னுடன் பயின்ற பிராமிளாவுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் 1993-ல் திருமணம் செய்து கொண்டனர். 2020-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார் ஸ்ரீதர் வேம்பு. 2021-ல் இருவரும் விவாகரத்து கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தை நாடினர். அந்த வழக்கையொட்டிய வாதங்களில்தான் ஸ்ரீதர் வேம்பு மீதான புகார்களை பிரமிளா அடுக்கியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு மறுப்பு
தன்னைப் பிரிந்து வாழும் மனைவி பிரமிளாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, “தற்போது 24 வயதை எட்டிய எங்கள் மகனுக்கான சிகிச்சைகள் (ஆட்டிசம்) உரிய பலன் தரவில்லை. எனவே, இந்தியாவில் கிராமச் சூழலில் அன்பானவர்கள் உடன் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இந்தியாவுக்குத் திரும்பினேன். ஆனால், நான் மகனின் சிகிச்சை விஷயத்தில் நான் பின்வாங்குவதாக பிரமிளா நினைத்துக்கொண்டார். அந்தத் தவறான புரிதலால் எங்கள் திருமண வாழ்க்கை உடைந்தது.
எங்களின் மண முறிவானது புதிய பிரச்சனையை உருவாக்கிவிட்டது. ஜோஹோ நிறுவனம் மீதான என் பங்குகள் குறித்தும், சொத்துகள் பற்றியும் என் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுகளை பிரமிளா முன்வைத்துள்ளார். என் பதில்கள் அனைத்தும் பொதுவிலேயே இருக்கின்றன.
நான் நிறுவனப் பங்குகளை வேறு யாருக்கும் மாற்றவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூறுகிறேன்.
என் மனைவியையும் மகனையும் நிதி ஆதரவு தராமல் கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது முழுக்க முழுக்க கற்பனைக் குற்றச்சாட்டு. என்னை விடவும் என் மனைவியும் மகனும் சொகுசான வாழ்க்கையை வாழ்கின்றனர். இன்று போலவே எப்போதும் என் மனைவிக்கும், என் மகனுக்கும் உறுதுணையாக இருப்பேன்.
உண்மையும் நீதியும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்னரும் பல தனிப்பட்ட தாக்குதல்களைச் சந்தித்தித்த நான், இதையும் எதிர்கொண்டு மீள்வேன். என் எஞ்சிய காலத்தை இந்தியாவில் நிறுவனங்களைக் கட்டமைக்கவும், கிராமப்புற இளைஞர்களை மேம்படுத்தவும் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.
ஜோஹோ பின்புலம்
ஸ்ரீதர் வேம்பு, டோனி ஜி தாமஸ், ஸ்ரீனிவாஸ் கனமுரு, குமார் வேம்பு, சேகர் வேம்பு, சைலேஷ் குமார் தவே ஆகியோர் இணைந்து ஜோஹோ நிறுவனத்தை நிறுவினர். 2000-ம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு சிஇஓ பொறுப்பேற்றார்.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர், மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது. 10,000-க்கும் மேற்பட்டோர் இவற்றில் பணியாற்றுகின்றனர். ஜோஹோ ஆர்&டி பிராஜெக்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. கிராமப்புறங்களில் விரிவடைந்து அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கிளைகளைத் தொடங்கி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஸ்ரீதர் வேம்புவின் முன்னெடுப்புகள், அவருக்கு மக்கள் மத்தியில் புகழும், அரசின் கெளரவிப்புகளுக்கும் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Induja Raghunathan