Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.50 ஆயிரம் முதலீட்டில் அதிக லாபம் தரும் 10 சிறு தொழில்கள்!

சோப்பு, ஷூ லேஸ், பேப்பர் பைகள் தயாரிப்பு என குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய தொழில்கள் தொடங்க டிப்ஸ் இதோ...

ரூ.50 ஆயிரம் முதலீட்டில் அதிக லாபம் தரும் 10 சிறு தொழில்கள்!

Thursday January 02, 2020 , 4 min Read

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் தொழில்தான், தொழில் தொடங்க விரும்பும் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கும். நாம் தொடங்க விரும்பும் தொழிலை முறையாக வரையறுத்து தெளிவாக திட்டமிடவேண்டியது அவசியம்.

Small business

உங்களது தொழில்முனைவு ஆர்வத்திற்கு வலுசேர்க்கக்கூடிய தொழில் யோசனைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

டிசைனர் லேஸ்

டிசைனர் லேஸ் பொதுவாக ஆடைகளிலும் கலை வேலைப்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமான இந்த வணிகத்தை எளிதாக வீட்டிலேயே தொடங்கலாம்.

1

ஃபேஷன் பிரிவு மிகவும் பிரபலமாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் வெவ்வேறு வகையான லேஸ்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே புதுமையான வகையில் இவற்றை தயாரித்தால் வெற்றி நிச்சயம். அத்துடன் லேஸ் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் இதில் ஈடுபடுவது சிறந்த தேர்வாக இருக்கும்.


ஃபேஷன் லேஸ் பிசினஸை தொடங்க கையில் 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்.

ஷூ லேஸ்

சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகளவிலான காலணிகள் தயாரிக்கப்படுகிறது. விளையாட்டு, ஃபார்மல், கேஷுவல் என பல்வேறு பிரிவுகளின்கீழ் தயாரிக்கப்படுகிறது. எனவே ஷூ லேஸ் தேவையும் அதிகரித்துள்ளது.

2

லேஸ் தயாரிக்க காட்டன், பாலிஸ்டர், நைலான், பாலிப்ரொப்பிலீன் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். லேஸ் முனைகளை பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கலாம். தயாரிப்பு முறைக்கு பின்னல் இயந்திரம் தேவைப்படும். ஷூ லேஸ் தயாரிப்பு வணிகத்தில் சிறியளவில் ஈடுபட்டாலும் மிகவும் லாபகரமாக செயல்படலாம்.


சிறிய இயந்திரம் வாங்கி ஷூ லேஸ் தொழிலை 25 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்கமுடியும்.

பேப்பர் தட்டு மற்றும் கப்

இந்தியாவில் சுற்றுலா செல்லும்போதும் விழாக்களிலும் அப்புறப்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கப்கள் அதிகளவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாலைகளில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களும் இவற்றை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

3

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பேப்பரால் தயாரிக்கப்படும் தட்டு மற்றும் கப் வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.


குறைந்த விலையில் பேப்பர்களை வாங்கி இவற்றைத் தயாரித்து லாபமடையலாம். இதற்கு 25000- 50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

ஸ்டேபிள் பின்

பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என ஸ்டேப்ளர் பயன்பாடு எங்கும் நிறைந்துள்ளது. வழக்கமாக ஸ்டேப்ளர் பின் வெள்ளை நிற கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு வயர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

4

தரமான இரும்பு பயன்படுத்தினால் பின்களின் உறுதித்தன்மை சிறப்பாக இருப்பதும் அவை நீடித்திருக்கும். பின்கள் தயாரிப்பு முறையை எளிதாக்க தானியங்கி இயந்திரங்கள் உள்ளன. இந்த இயந்திரங்கள் இரும்பு வயரை தட்டையாக்கி நிர்ணயிக்கப்பட்ட நீளத்தில் பின்களைத் தயாரிக்கும்.


ஒரு நிமிடத்தில் 350 ஸ்டேபில் பின்கள் தயாரிக்கக்கூடிய இயந்திரம் 3.5 லட்ச ரூபாய் ஆகும். தொடங்கும் போது சிறிய முதலீட்டுடன் ஆரம்பித்து தொழில் வளர்ச்சி அடைந்தவுடன் இதுபோன்ற இயந்திரங்களை வாங்கி தொழில் விரிவாக்கம் செய்யலாம்.

பேப்பர் தயாரிப்பு

பேப்பர் தயாரிப்பு குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய வணிகம். பேப்பர் பயன்பாடு இல்லாத இடங்களே இல்லை எனும் அளவிற்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகம் டிஜிட்டல்மயமாகி வரும் இன்றைய காலகட்டத்திலும் பேப்பருக்கான தேவை குறையவில்லை.

5

பேப்பர் தயாரிப்புத் துறையில் அதிகளவில் வாய்ப்பு உள்ளது. போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்க இவற்றைத் தயாரிப்பதற்கான சரியான இடத்தை தேர்வு செய்வது அவசியம். இதனால் அதிக லாபம் ஈட்டலாம். பேப்பர் செய்ய தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கட்டிங் செய்ய தேவையான கருவிகளை வாங்கி இத்தொழிலை தொடங்கலாம்.


A2, A3, A4 அளவு பேப்பர்களை தானியங்கி இயந்திரங்கள் மூலமும் தயாரிக்க முடியும். இதற்கான முதலீடு ரூ.2 லட்சம் வரை போகலாம்.

ஆர்கானிக் சோப்பு

நீங்கள் சிறியளவில் வணிகத்தைத் தொடங்க விரும்புபவராக இருந்தால் ஆர்கானிக் சோப்பு சந்தையில் செயல்படலாம். இன்று மில்லியன் கணக்கானோர் ஆர்கானிக் சோப்பு பயன்படுத்துவதால் இதன் தேவை அதிகரித்துள்ளது.

6

மூலிகை சோப்பு வணிகம் துவங்க திட்டமிட்டால் கிளிசரின், மூலிகை, நறுமண எண்ணெய், அச்சு, மைக்ரோவேவ் அவன் போன்ற முக்கியப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பைத் தொடங்கலாம். சிறியளவில் செயல்படும் பட்சத்தில் இதற்கென பிரத்யேக இடத்தைத் தேடாமல் வீட்டிலேயே தயாரிக்கலாம். சோப்பு தயாரிப்பு செயல்முறையைக் கற்றுக்கொள்ள விரும்பினால் அரசு வழங்கும் பல்வேறு பயிற்சிகள் மூலம் பலடையலாம்.


ரூ.50 ஆயிரம் முதலீட்டில் வீட்டில் சிறிய அளவில் சோப்பு தயாரித்து அதனை நன்கு வர்த்தகம் செய்யத் தொடங்கியவுடன், தொழிலை விரிவாக்கம் செய்ய ரூ.1.5 முதலீடு செய்தால் சோப்பு உற்பத்தியை பெருக்க முடியும், அதன் மூலம் அதிக லாபமும் அடையலாம்.

தேங்காய் எண்ணெய்

இன்று மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் காரணத்தால் இயற்கைப் பொருட்களைத் தேடி வாங்கும் மனநிலையில் உள்ளனர். ஆரோக்கியம் மற்றும் அழகுப் பிரிவைப் பொறுத்தவரை தரமான பொருட்களை வாங்குவதற்காக அதிகம் செலவிடவும் மக்கள் தயாராக உள்ளனர். எனவே உள்ளூர் விவசாயிகளுடன் கைகோர்த்துக்கொண்டு சிறந்த முறையில் தேங்காய் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யலாம்.

7

குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு சிறிய இடத்தில் நீங்கள் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை தொடங்கலாம். இதற்கு அருகாமையிலுள்ள தென்னை விவசாயிகளுடன் கைக்கோர்த்தால் தொழில் பெருக நல்ல வாய்ப்பு உள்ளது.

ஸ்மார்ட்போன் டெம்பர்ட் கிளாஸ்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வருகிறது. இந்திய சந்தையில் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் 32 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (IDC) தெரிவிக்கிறது.

ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்திருப்பதால் டெம்பர்ட் கிளாஸ் தேவையும் அதிகரித்து வருகிறது. இவை உயர் வெப்பநிலையில் தயாரிக்கப்படுகிறது.

8

கிளாஸ் வெப்பமூட்டப்பட்டு விரைவாக குளிரூட்டப்படுகிறது. டெம்பர்ட் கிளாஸ் கடினத்தன்மையும் உடையும்தன்மையும் பரிசோதிக்கப்படும். டெம்பர்ட் கிளாஸ் ஸ்மார்ட்போன் திரையுடன் ஒட்டிக்கொள்ள உதவும் பசை டெம்பர்ட் கிளாஸ் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் ஆகும்.


சாதாரண வகை டெம்பர்ட் கிளாஸ் தயாரிக்கும் மெஷின் 50ஆயிரம் முதல் 1லட்ச ரூபாய் வரை ஆகும். அதில் முதலீடு செய்து இத்தொழிலை தொடங்கி டெம்பர்ட் கிளாஸ் தயாரித்து, அருகாமை போன் கடைகள் மூலமும், ஆன்லைனிலும் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.

என்வெலப் மற்றும் ஃபைல்ஸ்

தகவல் தொடர்பு டிஜிட்டல்மயமானபோதும் பேப்பர் என்வெலப்கள் மற்றும் ஃபைல்களுக்கான தேவை இன்றளவும் அதிகம் காணப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட்கள் போன்ற அனைத்து இடங்களில் இவற்றிற்கான தேவை உள்ளது.

9

மேப்லித்தோ பேப்பர், ஸ்கிராப் பேப்பர் என வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு வெவ்வேறு வகையான பேப்பர்களை பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பசையை சந்தையில் வாங்கிக்கொள்ளலாம்.


என்வெலப் தயாரிப்பதற்கான இயந்திரங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த இயந்திரங்கள் பேப்பரை குறிப்பிட்ட அளவிற்கு கட் செய்துவிடும். இதில் பசையைத் தடவியதும் என்வெலப்பை உலரவைத்து பேக் செய்துவிடலாம். இந்த தயாரிப்பை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், சூப்பர் மார்கெட் போன்ற இடங்களிலோ அல்லது நேரடியாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களிலோ விற்பனை செய்யலாம்.


என்வெலப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.1 லட்சம் முதல் சந்தையில் உள்ளது.

பேப்பர் பைகள்

மக்காத பிளாஸ்டிக் பைகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஷாப்பிங் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றைப் பேக் செய்ய பேப்பர் பைகள் பயன்படுத்தப்படுகிறது.

10

பேப்பர் பைகள் தயாரிப்பைக் குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். இதற்கு பேப்பர் ஷீட், இங்க், அச்சடிக்கத் தேவைப்படும் ரசாயனங்கள், டேக் போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படும்.


ஆரம்பத்தில் கைகளால் பேப்பர் பைகள் செய்து விற்பனை செய்யுங்கள். கொஞ்சம் லாபம் கிடைக்கத்தொடங்கிய உடன், ஆட்டோமேடிக் அல்லது செமி ஆட்டோமேடிக் இயந்திரங்கள் உள்ளன. அதை வாங்கி அதிக அளவு பேப்பர் பைகள் செய்து சந்தையில் விற்றால் அமோக லாபம் கிடைக்கும்.


ஆங்கில கட்டுரையாளர்கள்: பலக் அகர்வால் மற்றும் ரிஷப் மன்சூர் |

தமிழில்: ஸ்ரீவித்யா, இந்துஜா ரகுனாதன்